Tamilnadu
654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் : மாணவர்களுக்கு AI பயிற்சி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எந்திரவியல் ஆய்வகங்கள்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் முதற்கட்டமாக ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் 15 எந்திரவியல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
பல்வகைத் திறன் பூங்கா
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவற்றை விளையாட்டு வாயிலாக மேம்படுவதற்காக முதற்கட்டமாக 20 மாவட்டங்களில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 20 பல்வகைத் திறன் பூங்காக்கள் நிறுவப்பட்டு உள்ளன.
மொழிகள் திட்டம்
6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காக, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி டிஜிட்டல் மொழிக்கற்றல் திட்டமான மொழிகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் தங்களது கேட்கும், பேசும், வாசிக்கும் மற்றும் எழுதும் (LSRW) திறன்களை சுயவேகக் கற்றல் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வருகின்றனர்.
சிறுவர் அறிவியல் பூங்கா
அறிவியல் கருத்துகளை மாணவர்கள் எளிமையாக, அனுபவத்தால் விளக்கும் வகையில் கற்றுக் கொள்ளும் பொருட்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ. 80.24 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. STEM சார்ந்த 21 கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் பூங்கா பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் செயல்படுகிறது.
உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களும் திறன் வகுப்பறைகளும் அரசுப்பள்ளிகள்
பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் மற்றும் திட்டமிடல் போன்ற செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு ICT தொழில்நுட்பம் ஒரு முக்கிய ஊக்கியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களும், அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளும் வெற்றிகரமாக நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளன.
உதவிபெறும் பள்ளிகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெறும் நன்மைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில், முதற்கட்டமாக 654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை, அடையாறு குமார ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை திறந்து வைத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் காணொலி, ஒலி மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றலை எளிமையாக்கிப் பாடப்புத்தக உள்ளடக்கத்தை விரைவாகவும், ஆர்வமாகவும் கற்றுக் கொள்ள உதவுகின்றன.
மேலும், 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI), எந்திரவியல் மற்றும் குறியிடல் (Coding) தொடர்பான TN SPARK போன்ற திட்டங்களை இப்பள்ளிகளில் செயல்படுத்த இது ஒரு கல்வி வளமாக அமையும்.
இந்த உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆசிரியர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறன், பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரியும்.
Also Read
-
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சட்டமன்றத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு -தி.மு.க அறிவிப்பு!
-
“இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான குரல் இது...” : முரசொலி தலையங்கம் !
-
“Online,Offline இரண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!