Tamilnadu
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் திமுகவின் தெற்கு மற்றும் மதுரை மண்டல "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி " வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:- வீரம் என்றால், மதுரை! பாசம் என்றால், மதுரை! கோயில் என்றால், மதுரை! சாப்பாடு என்றாலும், மதுரை! இங்கு எல்லாமே ஃபேமஸ்!
அப்படிப்பட்ட மாமதுரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மண்டல BLA-2, BLC, BDA வாக்குச்சாவடிக் குழுவினருக்கான ‘என் வாக்குச்சாவடி... வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையடைகிறேன், பூரிப்படைகிறேன். இன்னும் சொன்னால் சித்திரை திருவிழா போன்று கூடியிருக்கும் உங்களைப் பார்த்து உற்சாகம் அடைகிறேன்!
உத்தங்குடி முழுவதும் உடன்பிறப்புகள் குடியேறிவிட்டது போன்று எனக்கு இருக்கிறது! இதையெல்லாம் பார்க்கும்போது என்னுடைய நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இனி, நாம்தான்! இனி, எப்போதுமே நாம்தான்! இவ்வாறு நம்பிக்கையுடன் நான் இருப்பதற்கு காரணமே, கழகத்தின் வேர்களாக இருக்கும் நீங்கள்தான்!
இந்தப் பயிற்சி மாநாட்டை மிக எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் – ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர் மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்! மூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு! எதையும் சிறியதாகச் செய்யத் தெரியாது! அனைத்தும் பிரமாண்டம்தான்! அவரின் துறையின் மூலம் வருவாயைப் பெருக்கி ஆட்சிக்கு பலம் சேர்த்ததைப் போன்று, இன்று, இந்தப் பிரமாண்ட மாநாட்டை நடத்தி, தேர்தல் பணிக்கும் பலம் சேர்த்திருக்கிறார்! அவருக்கும், அவருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றியிருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகத்தின் சார்பில், என்னுடைய வாழ்த்துகளுடன், என்னுடைய நன்றிகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
“என் வாக்குச்சாவடி... வெற்றி வாக்குச்சாவடி” என்ற மாநாட்டிற்கு அடித்தளமான BLA-2, BLC, BDA ஆகியோரை நியமிக்கும் பணிகளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்! நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தலுக்கான களப்பணியில் முன்னால் நிற்கும் BLA-2-க்களுக்கான மாபெரும் பயிற்சிக் கூட்டங்களை மண்டல வாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தலில், நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றோம்!
அதன்பிறகு, கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் மாபெரும் முன்னெடுப்பைத் தொடங்கி, இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் செய்ய முடியாத வகையில் ‘செயலி’ மூலமாக - இங்கு வந்திருக்கும் BDA உதவியுடன் வீடு வீடாகச் சென்று, கிட்டத்தட்ட ஒரு கோடியே 10 லட்சம் குடும்பங்களை அதில் உறுப்பினர்களாக இணைத்தோம்.
அடுத்த பணி உடனே வந்தது. அதுதான், S.I.R. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்கவிடாமல் பம்பரமாக உழைத்த இயக்கம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்.
இவ்வாறு கேப்பே இல்லாமல் – இடைவெளியே இல்லாமல், அடுத்து உடனடியாக தேர்தலுக்குத் தயாராக, BLA-2-க்களுடன் சேர்த்து, BLC, BDA-க்களையும் இப்போது சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது இருக்கும் வாக்குச்சாவடிகளின் அடிப்படையில், உங்களைப் போன்ற BLA-க்களின் மொத்த எண்ணிக்கை, 75 ஆயிரத்து 32 பேர்! தமிழ்நாடு முழுவதும் BLC-க்கள் எவ்வளவு தெரியுமா? ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் பேர்! BDA-க்களை எடுத்துக் கொண்டால், 75 ஆயிரத்து 32 பேர்! வரும் தேர்தல் களத்தில் நம்முடைய வெற்றியை உறுதி செய்யப் போவது, இந்த 7 லட்சம் பேர்தான்.
அதனால்தான் இன்றைக்கு வேர்களாக பரவியிருக்கும் உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மண்டல வாரியான மாநாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கான மாநாட்டை, சென்னைக்கு அருகில் இருக்கும் மாமல்லபுரம் செல்லும் வழியில் இருக்கும் திருவிடந்தையில் ஏற்பாடு செய்து, ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கே கலந்து கொண்டார்கள்.
அதேபோல், திருப்பத்தூரில் வடக்கு மண்டலத்திற்கான மாநாட்டில் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேர். இன்றைக்கு மதுரையில், இந்த தென் மண்டல மாநாட்டில் ஒரு இலட்சத்து 56 ஆயிரம் பேரான நீங்கள் கலந்து கொண்டு இருக்கிறீர்கள்! அடுத்து, மீதமுள்ள மேற்கு மண்டல மாநாடு 27-ஆம் தேதி கோவையில் நடக்க இருக்கிறது.
இது மட்டுமா... கடந்த 2 மாதங்களில் மட்டும் எத்தனை மாநாடுகள்! திருவண்ணாமலையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இளைஞர்கள் கலந்து கொண்ட, இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு; திருப்பூரில், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மகளிர் கலந்து கொண்ட, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மேற்கு மண்டல மாநாடு; விருதுநகரில் ஒரு இலட்சம் இளைஞர்கள் கலந்து கொண்ட, இளைஞரணி தென் மண்டல மாநாடு; அடுத்து, தஞ்சையில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மகளிர் கலந்து கொண்ட, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல மாநாடு. இவ்வாறு 2 மாதத்தில் 7 மாநாடுகள் நடத்தி, 9 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோரைச் சந்தித்து நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
அதனால், நான் சவால் விட்டு சொல்கிறேன். இந்தளவிற்கு நம்மைப் போன்று, பூத் லெவலில் இருக்கும் நிர்வாகிகள், இளைஞர்கள், மகளிர்கள் என, தேர்தலுக்கு ஆயத்தமாகும் ஒரு கட்சியை இந்தியாவில் காட்டுங்கள் பார்க்கிறேன். முடியாது! நிச்சயமாக முடியாது! ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகம், மக்களிடமிருந்து, மக்களுக்காக உருவான இயக்கம்!
நாமெல்லாம் - பெரியார், அண்ணா, கலைஞரின் இரத்தம்! அதனால்தான், நம்முடைய இயக்கத்தை தொட்டுப் பார்க்க வேண்டும், சீண்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே, தமிழ்நாடே திருப்பி பதிலடி கொடுக்கும் என்ற பயம், எதிரிகளை அஞ்சி நடுங்க வைக்கிறது! தி.மு.க. போன்று அமைப்பு ரீதியாக வலுவான ஒரு அரசியல் கட்சியை யாராலும் காட்ட முடியாது! இப்போது நாம் காண்பிப்பது அனைத்துமே சும்மா ட்ரெய்லர்தான்!
இங்கு நம்முடைய மாண்புமிகு நேரு வந்திருக்கிறார். திருச்சியில் மெயின் பிக்சர் காண்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மார்ச் 9-ஆம் நாள்! தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் திருச்சியில் திரளப் போகிறோம்! எவ்வளவு பேர்? பத்து இலட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடே பார்க்கப் போகிறது! மொத்தமாக, கணக்கு செய்து பார்த்தால், கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் தொடங்கி, அடுத்த மாதம் திருச்சி வரைக்கும், மூன்றே மாதத்தில், கிட்டத்தட்ட 20-லிருந்து 25 இலட்சம் பேரை நான் சந்திக்க இருக்கிறேன்.
அதனால்தான் சொல்கிறேன்... நாம் ரெக்கார்டு செய்தால், அது யாராலும் பிரேக் செய்ய முடியாத ரெக்கார்டாக இருக்கும்! இப்படி பெரிய பெரிய மாநாடுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் காலை, மாலை என எத்தனை எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன் என்பதை நீங்கள் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். என்னுடைய நிகழ்ச்சிகள் ஒருபக்கம் என்றால், கழக நிர்வாகிகள் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் மறுபக்கம்!
இவ்வாறு, எந்தப் பக்கம் திரும்பினாலும், கருப்பு சிவப்புதான் தெரிகிறது! கழகக் கொள்கைகள்தான் அனைத்து இடத்திலும் எதிரொலிக்கிறது! திராவிட மாடல் சாதனைகள்தான் தொடர்ந்து உரக்க கேட்கிறது! இதுதான், இன்றைக்கு இருக்கும் களநிலவரம்!
அதனால்தான், இங்கு கூடியிருக்கும் உங்களுக்கெல்லாம் நான் சொல்வது, இந்தத் தெற்குச் சீமையில் மொத்தத் தொகுதிகளிலும் கழகக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும்; அதை நீங்கள் தட்டித் தூக்க வேண்டும்! என்ன, தயாரா? செய்துவிடுவீர்களா?
2019-லிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் நம்முடைய கூட்டணிக்கு வெற்றி மேல் வெற்றிதான்! 2024-இல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முழுமையான வெற்றியை மக்கள் நமக்கு வழங்கினார்கள். அப்போது இருந்ததைவிட அதிகமான திட்டங்களை இப்போது நிறைவேற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! இன்னும் சொன்னால், மக்கள் கேட்டதையும் செய்து கொடுத்திருக்கிறோம்! மக்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்-ஆன திட்டங்களையும் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறோம்! அனைத்து தரப்புகளின் கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கிறோம்! அதனால், இந்த முறை மிகப் பெரிய வெற்றியை உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். மக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பையும் நம்பித்தான் இதைச் சொல்கிறேன். நீங்கள் இருக்கும்போது எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை!
தனிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துத் தொகுதிகளிலும் வென்றோம் என்ற செய்திதான் மிக மிக முக்கியம். அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். அதற்காகத்தான் இந்தக் கூட்டங்கள், இந்த மாநாடுகள்! நாம் அனைவருக்கும் முன்பே, அனைத்தையும் சரியாகப் பிளான் செய்து வைத்திருக்கிறோம்!
இங்கு வந்திருக்கும் உங்களின் ஒவ்வொரு பூத்திற்கும் எவ்வளவு டார்கெட்? 350 வாக்குகள்! இந்த டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே, அசால்ட்டாக 2 கோடியே 60 இலட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிட முடியும். இந்தத் தேர்தலில், நாம் 2 கோடியே 50 இலட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் வாங்கியே ஆக வேண்டும்! இதை வாங்கிக் காட்டுவது உங்கள் பொறுப்பு! உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த உதவிகளைச் செய்து தருவது என்னுடைய பொறுப்பு!
“2 கோடியே 50 இலட்சமா?” என்று பெரிய நம்பரை யோசித்து யாரும் ஷாக் ஆகாதீர்கள். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு 40-50 வாக்குகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு செட் செய்திருக்கும் டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே போதும்! நான் சொன்ன நம்பர் வந்துவிடும்! 200 தொகுதிகள் நிச்சயம்! 200 தொகுதிகளுக்குக் கூடுதலாகவும் வெற்றி பெறுவதுதான் நம்முடைய இலட்சியம்!
அடுத்த 2 மாதங்கள்! உங்களுக்கும் சரி, எனக்கும் சரி, ‘No Rest’! ஒவ்வொரு வாக்காளரையும் நீங்கள் அனைவரும் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இப்படி புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், ஒருவரின் வீட்டுப் படியேறி சென்று, அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பணிவாக வாக்கு கேட்கும் பிரசாரத்திற்கு எதுவுமே ஈடாகாது! ஆன்லைன் செயல்பாடுகள் முக்கியம்தான்! நான் மறுக்கவில்லை. ஆனால், களத்தில் நீங்கள் வேலை செய்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும்!
நான் அதனால்தான் திரும்பத் திரும்ப அழுத்தி அழுத்திச் சொல்லுகிறேன்! பரம்பரை பரம்பரையாக தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரசாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களை நாம் சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்! சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! இதை நீங்கள் ரிப்பீட் மோடில் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும்!
தேர்தல் அன்றைக்கு பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, ஓய்வே இருக்க கூடாது! பணிவாக... கனிவாக... மரியாதையாக... நட்பாக அணுக வேண்டும்! ஏன் என்றால், என்றைக்குமே மக்கள்தான் எஜமானர்கள்! நாம் அவர்களின் சேவகர்கள்! மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டு, அவர்களின் இன்ப துன்பங்களில் கூடவே நிற்பதால்தான், தேர்தலில் அவர்களும் நம்மோடு நிற்கிறார்கள்! 75 ஆண்டுகளாகத் தி.மு.க. வலிமையாக இருப்பதற்கு என்ன ரகசியம்? இதுதான்!
மக்களின் வாக்குகளைப் பெறுவதோடு உங்களின் கடமை முடிந்துவிடுமா? இல்லை! வாக்குப்பதிவு முடிந்து இயந்திரத்தில் சீல் வைத்து, வாகனத்தில் ஏற்றும் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்! கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரை கவனமாக இருக்க வேண்டும்! தேர்தல் தேதியை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்! நம்மைப் பொறுத்தவரை எப்போதோ பரப்புரையைத் தொடங்கிவிட்டோம்.
நேற்றுகூட, “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” பரப்புரைக்காக, நம்முடைய மாவட்டக் கழகத்தின் செயலாளர்கள் - பொறுப்பாளர்கள் கூட்டத்தை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக நடத்தினேன். அதில், “ஸ்டாலின் மகளிர் படை” மூலமாக, நம்முடைய அரசின் சாதனைத் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக, தேர்தலைக் காரணமாக வைத்து, மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைத்த சதியை நாம் முறியடித்து, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியிருப்பது; அடுத்து அமையப்போகும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மகளிர் உரிமைத்தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க இருப்பது பற்றி, இந்த ஸ்டாலின் மகளிர் படை, ஒவ்வொரு வீட்டிலும் விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள்!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான், பெண்கள் - குழந்தைகள் - மாற்றுத்திறனாளிகள் - திருநர்கள் - உழவர்கள் - உழைப்பாளர்கள் – நெசவாளர்கள் என்று சமூகத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, திட்டங்கள் தீட்டி, அதையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அதனால்தான், தமிழ்நாடும் வரலாறு காணாத வளர்ச்சி பெறுகிறது! இந்த எல்லோருக்குமான வளர்ச்சி, நம்முடைய எதிரிகளின் கண்களை உறுத்துகிறது!
எனவே, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர வேண்டிய செய்தி என்னவென்றால், நம்முடைய திராவிட மாடல் அரசு – இந்த ஆட்சி தொடர்ந்தால்தான், மகளிர் உரிமைத்தொகை போன்ற சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் தொடரும்.
இந்த நேரத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயத்தை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அண்மையில், நாம் அட்வான்சாக வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் உரிமைத்தொகையை, பல ஊடங்களும் நம்முடைய “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்று சொன்னார்கள்! அந்தளவிற்கு எதிராளிகள் கணிக்க முடியாதபடி நம்முடைய நகர்வு இருந்தது.
அதேசமயம் அன்றைக்கு இன்னொரு விஷயமும் செய்திகளில் இடம் பிடித்தது. காலையிலேயே நாம் “ஸ்வீட் சர்பிரைஸ்” கொடுத்ததில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்தது அவர்கள் உடனே சென்றது, வங்கிகளிலிருந்து பணத்தை எடுக்கத்தான்! அதற்கு என்ன காரணம் தெரியுமா... ஒன்றிய அரசு மேல் இருக்கும் பயம்! எங்கே அந்த ஐந்தாயிரம் ரூபாயை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வார்களோ என்று பயந்த மக்கள், அந்தத் தொகையை உடனடியாக ‘வித்-டிரா’ செய்யச் சென்றுவிட்டார்கள்! இதுதான், மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், ஒன்றிய அரசு மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம்!
மக்களுக்காகக் கொடுத்தால் அது தி.மு.க. அரசு! மக்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது, ஒன்றிய பா.ஜ.க. அரசு! அதைப் புரிந்து கொள்ளுங்கள். மக்களிடம் இதைத்தான் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்!
அண்மையில், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பேசிய பழைய வீடியோ ஒன்று, மறுபடியும் வைரல் ஆனது! பார்த்திருப்பீர்கள். அதில் என்ன சொல்லியிருந்தார்... இலவச பேருந்து பயணத் திட்டத்தால், மெட்ரோ இரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த நாளிலிருந்து, பெண்கள், விடியல் பயணம் திட்டத்தில் இலவசமாகப் பயணிக்கிறார்கள். இதுவரைக்கும் சுமார் 900 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு குடும்பமும், மாதா மாதம், சுமார் 800 ரூபாய் சேமிக்கிறார்கள். இதெல்லாம் ஏன் சார் உங்களுக்கு வலிக்கிறது?
மார்ச் 1-ஆம் நாள் இதே மதுரைக்கு பிரதமர் வரப்போகிறார். அவரிடம் மதுரை மக்கள் என்ன கேட்க வேண்டும் என்றால், இவ்வளவு அக்கறையுடன் மெட்ரோ இரயிலுக்குப் பேசும் அவர், ஏன் இந்த மதுரைக்கு மெட்ரோ இரயில் திட்டத்தைக் கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டும்? கேட்பீர்களா... கோவை மெட்ரோ எங்கே என்று கேட்க வேண்டும்? ஏன் தமிழ்நாட்டிற்கு எந்தச் சிறப்புத் திட்டங்களையும் கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டும்? கீழடி அறிக்கையை ஏன் வெளியிட மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்? எய்ம்ஸ் இன்னமும் வரவில்லையே என்று கேட்க வேண்டும்? நீட் தேர்விலிருந்து ஏன் விலக்கு தர மறுக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை வஞ்சிக்க, எங்களுக்கான கல்வி நிதியை முடக்குவது நியாயமா என்று கேட்க வேண்டும்?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… இன்னும் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் மக்கள் கேட்க காத்திருக்கிறார்கள்!
நியாயமாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கோரிக்கையாக கூட இதையெல்லாம் கேட்கத் துணிச்சல் இல்லாத துரோகியாக அவர் மாறிவிட்டார். ஆனால் நாம், பழனிசாமி மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை. ஆட்சி அல்ல, பதவி அல்ல, உயிரே போனாலும் எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். என்ன, வழக்கு போடுவீர்கள்... போடுங்கள். நாங்கள் பார்க்காத மிசாவா? நாங்கள் பார்க்காத தடாவா?
இன்றைக்கு இந்திய அளவில் இருக்கும் எதிர்க்கட்சிகளிலேயே தி.மு.க.வினர் மேல்தான் பா.ஜ.க. அரசு அதிகமான ரெய்டுகள் நடத்துகிறார்கள். நம்முடைய அமைச்சர்களுக்குத்தான் அதிக அளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்கள்! எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் தி.மு.க.! அதனால், உங்களின் இந்த C.B.I., E.D., I.T., எந்த சித்து விளையாட்டிற்கு நாங்கள் அஞ்சமாட்டோம்! அதற்கு வேறு ஆளைப் பாருங்கள். என்ன ஆனாலும் சரி, நாங்கள் எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இவ்வாறு தைரியமாக நின்று போராடுகிற காரணத்தினால்தால்தான் மக்கள் நம்முடன் ஆதரவாக நிற்கிறார்கள்! அதனால்தான் சந்திக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் உங்களுக்கு புத்தகமாகவே போட்டுக் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் எதாவது ஒரு திட்டம் சென்று சேர்ந்திருக்கிறது.
நேற்றைக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையின் பதிலுரையில், நம்முடைய திட்டங்களைப் பற்றி அரை மணி நேரம் மிக அழகாக – ஆணித்தரமாகப் பேசினார். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், நிறைய புதுமையான திட்டங்கள், முன்னோடித் திட்டங்கள் மூலமாக மக்கள் எப்படி பயனடைந்திருக்கிறார்கள், அதை மற்ற மாநிலங்களும் எவ்வாறு இப்போது பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள் போன்றவற்றையெல்லாம் மிக விளக்கமாக விளக்கினார்.
சில திட்டங்களைக் கேட்டு எனக்கே ஆச்சரியமாக இருந்தது! இப்படி நாம் நிறைவேற்றிக் கொண்டு வரும் திட்டங்களின் ‘அவுட்புட்’-தான், இன்றைக்கு என்ன நிலை? 11.19 விழுக்காடு இரட்டை இலக்க வளர்ச்சி! இந்தியாவில் வேறு யாரும் எட்ட முடியாத வளர்ச்சி! நாம் ஆட்சிக்கு வந்து ஆயிரத்து 752 நாட்கள் ஆகியிருக்கிறது. இதில் நாம் சாதனை செய்யாத நாளே இல்லை! அந்த அளவிற்கு தினந்தோறும் ஏதோ ஒரு திட்டத்தைத் தொடங்கிச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
எனக்கே ஒரு சில சாதனைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் மறந்து விடுகிறது. அதனால் நீங்கள் எல்லோரும் உங்கள் பகுதியில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் ஸ்டைலில் மக்களைச் சந்திக்கும்போது நினைவுபடுத்துங்கள். அதற்கு, இந்தப் புத்தகம் உங்களுக்குப் பயன்படும்!
தேர்தல் பணிகளைப் பொறுத்தவரைக்கும், அனைத்து வகையிலும் நாம்தான் முன்னணியில் இருக்கிறோம். கூட்டணியில் புதிதாகக் கட்சிகள் இணைகிறார்கள். தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்துவிட்டோம். தேர்தல் பரப்புரையையும் அனைவருக்கும் முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.
எந்தத் தொகுதி யாருக்கு? வேட்பாளர் யார்? இதைத் தலைமைக் கழகம் பார்த்துக் கொள்ளும்! இன்னும் சொல்கிறேன், நான் கவனித்துக் கொள்கிறேன். அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை! நம்முடைய கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமல்ல, நம்முடைய கொள்கை உறவாகப் பயணிக்கும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும்! களத்தில் நம்முடைய ஆட்களின் உழைப்பைப் பார்த்து அவர்களே வியக்க வேண்டும். அந்தக் கடமையை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
“தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?” என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்புங்கள்! தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டும்! நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்! அடிமை அ.தி.மு.க.வும், தமிழ் விரோத பா.ஜ.க.வும் அனைத்துத் தொகுதிகளிலும் டெப்பாசிட் இழக்க வேண்டும். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் தொடர்ந்து ‘நம்பர் ஒன்’-ஆக இருக்கும்! இது நான் தரும் வாக்குறுதி! இவ்வாறு நீங்கள் நம்பிக்கையுடன், கெத்தாக மக்களிடம் சொல்லுங்கள்!
அதுமட்டுமல்ல, நீங்கள் முக்கியமாகச் சொல்ல வேண்டியது, தமிழ்நாடு அணியா – டெல்லி அணியா என்ற இந்தப் போரில், தமிழ்நாடே – வெல்வோம் ஒன்றாக! இந்தி திணிப்பை எதிர்க்க, “வெல்வோம் ஒன்றாக!” மாநில சுயாட்சியை நிலைநாட்டிட, “வெல்வோம் ஒன்றாக!” மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்திட, “வெல்வோம் ஒன்றாக!” தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலமாக இருக்க, “வெல்வோம் ஒன்றாக!” தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர, “வெல்வோம் ஒன்றாக!” எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க, “வெல்வோம் ஒன்றாக!” தமிழர் சுயமரியாதை காத்திட, “வெல்வோம் ஒன்றாக!” தமிழ்நாடு தலைகுனியாது என்று காட்டிட, “வெல்வோம் ஒன்றாக!” பாசிச பா.ஜ.க.வை விரட்டிட, “வெல்வோம் ஒன்றாக!” அடிமை அ.தி.மு.க.வுக்கு பாடம் கற்பிக்க, “வெல்வோம் ஒன்றாக!” தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டிட “வெல்வோம் ஒன்றாக!” நீங்களும் திரும்பச் சொல்லுங்கள்… “வெல்வோம் ஒன்றாக!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்டம்... கருத்தரங்கம் தொடக்கம் - விவரம்!