Tamilnadu

தமிழ்நாட்டு வீரர்களின் கனவை நனவாக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (18.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை கொண்டாட்ட விழாவில் ஆற்றிய வரவேற்புரை:-

தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையினுடைய மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று இன்றைய நாளை நாம் சொல்லலாம்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று 178 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி, சுமார் 1,100-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு 34 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை, 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை உலகளாவிய நகரம் (Global City) அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று ஒட்டுமொத்த நேரு விளையாட்டரங்கமும் வெற்றியாளர்களால் நிறைந்திருக்கின்றது. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு சிறந்த வீரர் மைதானத்திற்குள் நுழைந்தாலே பார்வையாளர் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து பார்வையாளர்களும் ஆரவாரம் செய்வார்கள். ஆனால் இன்று இந்த விளையாட்டரங்கில் முழுவதும் வெற்றியாளர்கள் நிறைந்திருக்கிறீர்கள். அதிலும் நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) விடுதி மாணவர்களைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை, அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்.

ஒரு நல்ல விளையாட்டுத் திறமையை உருவாக்க வேண்டுமென்றால் அதற்குத் திறமையான ஒரு பயிற்சியாளர் முக்கியம். ஒரு நல்ல பயிற்சியாளர் வேண்டுமென்றால் அவர் நல்ல விளையாட்டு வீரராகத் தன்னை நிரூபித்திருக்க வேண்டும். அப்படி மக்கள் பணியில் சிறந்த விளையாட்டுப் பண்புடன் சாதனை படைத்து, இன்று இந்திய அரசியலிலேயே ஒரு சிறந்த பயிற்சியாளராக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் முந்தைய ஆட்சியாளர்கள் ஓரங்கட்டி வைத்திருந்த விளையாட்டுத் துறையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்று முறைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இங்கே திரண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டின் வெற்றியாளர்களாகிய நீங்கள்தான் (Champions of Tamil Nadu) மிகச் சிறந்த உதாரணம்.

நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் அவர்களே ஒரு சிறந்த விளையாட்டு வீரர். இன்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்துகின்ற திட்டங்களால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் 11.19 சதவிகிதமாக உள்ளது. மற்ற மாநிலங்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் இருக்கும்போது நம்முடைய தமிழ்நாடு மட்டும் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அந்த வகையில் இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு சாம்பியன் ஆப் தி முதலமைச்சர் என்று சொல்லலாம்.

நீங்கள் அனைவரும் விளையாட்டில் இருக்கிறீர்கள், உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். கடினமாக உழைத்தால்தான் மைதானத்தில் வெற்றியாளராகத் திகழ முடியும். பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், களத்தில் இறங்கி ஆட வேண்டும், தற்கால மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஒவ்வொருவரும் வெற்றியாளராக முடியும். அந்த வகையில் எப்போதும் மக்களோடும் மக்களாகக் களத்தில் இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

உங்களில் பலர் ஏழை, எளிய பின்னணியில் இருந்து வந்திருப்பீர்கள். நவீன விளையாட்டு உபகரணங்களை நம்மால் வாங்க முடியுமா, நமக்குக் கிடைக்குமா? வெளிநாடுகளில் நடைபெறுகின்ற போட்டிகளில் நம்மால் கலந்துகொள்ள முடியுமா? என்று உங்களுக்குள் பல நேரங்களில் ஏக்கங்கள் இருந்திருக்கும். அந்த ஏக்கத்தைப் போக்குவதற்குத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’யைத் தொடங்கி வைத்தார்கள். விளையாட்டில் இருக்கக்கூடிய பலருடைய கனவுகளை நம்முடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு நகரங்களில் மட்டுமல்ல, குக்கிராமங்களில் இருந்தும் பல விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகிறார்கள். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உடனடியாக முதலமைச்சர் அவர்கள் உயரிய ஊக்கத்தொகையை வழங்குகிறார். அதுமட்டுமல்ல, ‘கலைஞர் விளையாட்டு உபகரணத் தொகுப்பு’, முதலமைச்சரின் ‘மினி ஸ்டேடியம்’, ‘மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம்’, சென்னைக்கு வெளியே பிற நகரங்களிலும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் என நம்முடைய அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வரலாற்றிலேயே இல்லாத வகையில் நம்முடைய அரசு அமைந்த பிறகு, இதுவரை முதற்கட்டமாகச் சென்ற ஆண்டு 120 வீரர்களுக்கு அரசுப் பணிகளை வழங்கினோம். அதன் தொடர்ச்சியாக இன்று இந்த மேடையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 62 மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட 178 வீரர்களுக்கு அரசு வேலையை வழங்க இருக்கிறார்கள். இப்படி விளையாட்டில் தமிழ்நாடு இன்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே திரும்பிப் பார்க்கின்ற வகையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை இன்று பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறது.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read: “இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!