Tamilnadu

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98ஆவது வாரியக் கூட்டம் இன்று (17.2.2026) தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 5ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன் விவரம் பின்வருமாறு:

வாரியக் கூட்டத்தினை தொடங்கி வைத்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.  மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தொடக்கவுரையில்;

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98வது வாரியக் கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் அரசுத்துறைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் / துணைத்தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் உளமார வரவேற்கிறேன்.

1069 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரையில் 3 பெருந்துறைமுகங்களும், 17 சிறுதுறைமுகங்களும் உள்ளன.  தமிழ்நாடு கடற்கரை நெடுக  உள்ள 14 கடலோர மாவட்டங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு சிறுதுறைமுக மேம்பாட்டுத் திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை குறிப்பிட்டார்கள்.

  1. கடந்த 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத கடலூர் துறைமுகம், தனியார் துறைமுக இயக்கு நிறுவனம் மூலம், இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு, சரக்கு கையாள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  2. தொன்றுதொட்டு வந்த தமிழ் உறவுகளை இணைக்கும் வண்ணம், துரித முயற்சி மேற்கொண்டு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு (யாழ்ப்பாணம்) பன்னாட்டு பயணிகள் படகுப் போக்குவரத்து அக்டோபர் 2023இல் துவக்கப்பட்டு, தற்போதுவரை வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

  3. தமிழ்நாட்டில், பெரிய முதலீட்டுடன் துறைமுகங்களை அமைக்கும் நோக்கில், நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வண்ணம் தமிழ்நாடு சிறுதுறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023இல் புத்தாக்கம் செய்யப்பட்டு 15.11.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

  4. வெள்ளி விழா கண்ட அய்யன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் நோக்கில், புதிய கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு, 31.12.2024 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளிலில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் திரளாக வந்து கண்டுகளித்து செல்கின்றனர். 

  5. தென் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் அமையவுள்ள சிறுதுறைமுகங்களை நிர்வகிக்கும் நோக்கில், இராமேஸ்வரம் துறைமுகத்தில், ஒரு புதிய நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 30.7.2025 அன்று திறப்பு விழா நடைபெற்றது.

  6. இராமேஸ்வரத்தில் சுற்றுலாப் படகுப் போக்குவரத்தை துவக்கி சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்ததூர கடல்பயணம் மேற்கொள்ள  வசதியாக இரண்டு இடங்களில் (அக்னிதீர்த்தம் மற்றும் பாம்பன் அணுகு பகுதி) மிதக்கும் தோணித்துறைகள் கட்டப்பட்டு வருகிறது.

  7. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, கன்னியாகுமரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக, புதிதாக 3 படகுகள் (1.பெருந்தலைவர் காமராசர்             2.மார்ஷல் நேசமணி 3.ஜி.யு.போப்) வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதில், “பெருந்தலைவர் காமராசர்“ என்று பெயரிடப்பட்ட படகு கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. 3.2.2026 அன்று கட்டுமான பணிகள் நடைபெறும் கோவாவிற்குச் (Synergy Shipyard, Goa) சென்று, இப்பணிகளை களஆய்வு செய்து, படகின் கட்டுமான பணிகளை விரைவாக நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

  8. 2018–19 ஆம் நிதியாண்டின் இறுதியில், 12 இலட்சம் மெட்ரிக் டன்கள் கையாண்ட தமிழ்நாட்டின் சிறுதுறைமுகங்களில் திறன்மேம்பாடு செய்யப்பட்டு, சரக்கு கையாளுதல் படிப்படியாக உயர்ந்து, தற்போது கடந்த நிதியாண்டின் (2024-25) இறுதியில் சுமார் 118 இலட்சம் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் சில முன்னெடுப்புகளைப் பற்றி மாண்புமிகு அமைச்சர் விளக்கிக் கூறினார்;

  1. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களிலுள்ள சரக்குகளை கையாள்வதற்காக ஒரு புதிய பசுமை வளத்துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு,  அதற்கான பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

  2. இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 1 மணிநேர பயணதூரத்தில் சென்றடையக்கூடிய இலங்கையில் உள்ள தலைமன்னாருக்குப் பயணிகள் சேவையினை துவக்குவதற்கான இராமேஸ்வரத்தில் பன்னாட்டு வசதியுடைய பயணிகள் முனையம் மற்றும் தோணித்துறை அமைப்பதற்கு, ஒன்றிய அரசிடம் நிதியுதவி கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

  3. கடலூர் மாவட்டத்தில், தேவனாம்பட்டினம் அருகே அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான துறைமுக  அலுவலர் குடியிருப்பு வளாகத்தை, கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகமாக மாற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

  4. தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் 1.4.2026 அன்று முதல் துவக்கப்படவுள்ள சாகர்மாலா 2.0 திட்டத்தின்கீழ், நிதியுதவி கோரி, சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நிலையான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை கருத்திற்கொண்டு, கடல்சார் கட்டமைப்புகளை உருவாக்கி, சிறுதுறைமுகங்களை மேம்படுத்தி, தமிழ்நாட்டை முன்னணி கடல்சார் மாநிலமாக உருவாக்கும் நோக்கில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியில் யாரையும் பின்தங்க விடமாட்டோம். வெல்வோம் ஒன்றாக” என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சூளுரையை  தொடர்ந்து பணியாற்றவும், இதுவரை  இந்த வாரியத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்த அனைத்து வாரிய உறுப்பினர்களுக்கும், கடல்சார் வாரிய  அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் உரையை தொடர்ந்து, வாரியக் கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல்படி விவாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

Also Read: தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை... 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ.25,000!