Tamilnadu

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்:-

தகவல் தொழில்நுட்பம்:

தமிழ்நாடு ஆழ்நிலை தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனக் கொள்கை நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வெளியிடப்பட்டுள்ளது. 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள் 11,953 கிராம ஊராட்சிகளில் முடிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ.219 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்வளம்:-

சென்னை மாநகரின் குடிநீர் வழங்கும் ஆதாரங்களை பெருக்கிடும் வகையில், திருப்போரூரில் கோவளம் உப வடிநிலப் பகுதியில் ரூ.342 கோடியில் 2.25 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மாமல்லன் நீர்த்தேக்கம் என்ற புதிய நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்மையில் அடிக்கல் நாட்டியுள்ளார்.

நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி:-

மாநிலத்திலுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மேம்படுத்துவதற்கென புதிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

எரிசக்தித்துறைக்கு ரூ.18,091 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலன்:-

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூ.814 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பிறகு 2025 -26 ஆம் ஆண்டில் ரூ.1,433 கோடியாக உயர்ந்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகளின் நலன் காப்பதை இந்த அரசு தலையாய கடமையாகக் கருதுவதை தெளிவாக்கும்.

இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை:-

கடந்த 5 ஆண்டுகளில் 23,55,623 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறைக்கு ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை:-

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள், 4 ஆண்கள் விடுதிகள் மற்றும் 4 பெண்கள் விடுதிகள் ரூ.673 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை:-

ரூ.2,172 செலவில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுவரை 6,75,888 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியை விட ஏறத்தாழ இரு மடங்காக 47% பெற்று தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: “25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!