Tamilnadu

“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்:-

ஊரக வளர்ச்சி:-

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இது வரை 1,71,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 29,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்:-

திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் காவிரி, வைகை, நொய்யல், தாமிரபணி போன்ற ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விற்பனைப் பகுதிகள், தெரு விளக்குகள், அழகிய பூங்காக்கள் உள்ளிட்ட நவீன வசதியுடன் கூடிய நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.28,227 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை வளர்ச்சித் திட்டம்:-

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பேருந்து நிலையங்கள் அமைத்தல், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கல்வி மற்றும் மருத்துவ உட்கட்டமைப்புப் பணிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள், கடற்கரைகளை மேம்படுத்துதல், மீன் சந்தைகள் அமைத்தல், உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புப் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல், துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகள் தரம் உயர்த்துதல், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி அமைத்தல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் 6,045 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு:-

தொழிற்துறைக்குத் தேவையான திறன்மிகு பணியாளர்களை உருவாக்குவதற்காக இதுவரை 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைத்திட ரூ.298 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,996 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை:-

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2,55 கோடி பயனாளிகள் முதன்முறை சேவைகளையும், 4.75 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் தொடர்சேவைகைளையும் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.22,090 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி:-

36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் ரூ.12.37 இலட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23 சதவீதம் பங்களிப்புடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் -2030 எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கா செயல்திட்டத்தின் அடிப்படையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்பட்ட உள்ளது. தூத்துக்குடியில் ரூ.5,200 கோடியில் புதிய கப்பல் கட்டும் தொகுப்பினை நிறுவி வருகிறது. சுமார் 30,000 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: “மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !