Tamilnadu
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி சாலையில் 13.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள “முதல்வர் திருமண மாளிகையை“ திறந்து வைத்து, 10 இணையர்களின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
சென்னை மாநகராட்சியின் சார்பாக 13 கோடி ரூபாய் செலவில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பெயரில் கட்டப்பட்டிருக்கின்ற இந்தத் திருமண மாளிகையைத் திறந்து வைத்து, 10 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்களுக்கு நாம் அனைவரும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
இந்த நிகழ்ச்சிக்காக சேகர்பாபு அவர்கள் என்னிடத்தில் தேதி கேட்கும் பொழுது, திருமண மண்டபத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றுதான் தேதி வாங்கினார். அதன் பிறகுதான் சொன்னார், திருமண மண்டபம் மட்டுமல்ல இல்லை, அந்த மண்டபத்தைத் திறந்து வைத்து 10 இணையர்களுக்கு நீங்கள் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும் என்று உரிமையோடு சொன்னார்.
அதனால்தான் சேகர்பாபு அண்ணனைப் பார்க்கும் பொழுது, அவர் அறநிலையத்துறை அமைச்சரா அல்லது அன்பு நிலையத் துறைக்கு அமைச்சரா என்று கேட்பது வழக்கம். அந்த அளவுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவரின் துறையின் சார்பாக 5,000 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் சேகர்பாபு அவர்கள். அதற்கு சேகர்பாபு அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
நம்முடைய அரசின் சார்பாக கலைஞர் அவர்கள் பெயரில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரில் திருமண மண்டபங்களைத் திறந்து வைத்திருக்கிறோம். முதன்முறையாக நம்முடைய கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்கள் பெயரில் இந்தத் திருமண மண்டபத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பை சேகர்பாபு அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்.
முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் இந்த வடசென்னை பகுதி எப்படி இருந்தது, இந்த ஐந்து ஆண்டு கால நம்முடைய திராவிட மாடல் அரசில் எந்த அளவுக்கு வடசென்னை முன்னேறியிருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. இங்கே வந்திருக்கின்ற பொதுமக்கள் உங்களுக்கே தெரியும். வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற வேண்டும் என்று சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை’ நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
அதன் ஒரு பகுதியாகத்தான் இதுபோன்ற பொதுமக்களுக்குப் பயன்படுகின்ற திருமண மண்டபங்களைக் கட்டித் திறந்து வைத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து வடசென்னை பகுதியில் பேருந்து நிறுத்தங்கள், படிப்பகங்கள் என்று ஏராளமான கட்டமைப்புகளை நம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இங்கு திறக்கப்படுகின்ற திருமண மண்டபம் வடசென்னை மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்த திருமண மண்டபத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்திக் கொள்ளலாம். குறைந்த கட்டணம் என்பதால், வசதி குறைவாக இருக்கும் என்று யாரும் தப்பு கணக்கு போட்டுவிடக் கூடாது.
ஒரு தனியார் திருமண மண்டபம் எந்த அளவுக்கு மிகச்சிறப்பாக பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்குமோ, அதேபோல் இந்த திருமண மண்டபத்தை நம் முதலமைச்சர் அவர்கள், சேகர்பாபு அவர்கள் மூலமாக உங்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த திருமண மண்டபத்தில் எல்லா வசதிகளும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள்.
நம் திராவிட மாடல் அரசு அமைந்ததிலிருந்து நம் முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கான அரசாக நடத்தி வருகிறார்கள். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் இட்ட முதல் கையெழுத்து விடியல் பயணம் திட்டத்துக்குதான்.
மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் நான்கரை ஆண்டுகளில் இதுவரை 960 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள்.
பெண்கள் காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது சமையல் செய்து வழங்குவது மிகப்பெரிய ஒரு சுமையாகும். அதைப் போக்க வேண்டும் என்று முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இன்றைக்கு ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வாயிலாக கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. மீண்டும் நம்முடைய கழகத் தலைவர்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போகிறார். எனவே திராவிட மாடல் 2.0 தொடரப் போகிறது.
மீண்டும் நமது கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராகி மக்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அந்த திட்டங்களை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கின்றது. இந்த திராவிட மாடல் அரசு தொடர நீங்கள் அனைவரும் நம்முடைய அரசுக்கும், கழகத் தலைவருக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்.
இன்று இல்வாழ்க்கையில் இணைந்திருக்கின்ற மணமக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்துங்கள். உங்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் நிலைநாட்டிக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் விட்டுக்கொடுங்கள்.
எனக்கு அருகில் இருக்கின்ற அந்த இணையரைப் பார்த்துப் பெயர் கேட்டேன். சக்திவேல் – பூங்கொடி என்று தெரிவித்தார்கள். மணமகன் சக்திவேலிடம் பூங்கொடியை எங்கே பார்த்தீர்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ‘இல்லை அண்ணே, இது காதல் திருமணம், மூன்று வருடப் பழக்கம்’ என்றார். இங்கே எத்தனை பேர் காதல் திருமணம்?. கூடுதல் மகிழ்ச்சி, ஏனென்றால் நானும் காதல் திருமணம்தான் செய்துகொண்டேன்.
மணமக்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய குழந்தைகளுக்கு அழகான ஒரு தமிழ்ப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Also Read
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !