Tamilnadu
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
முதலமைச்சர் அவர்கள், 5.2.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்துச் சிறப்பிக்கிறார்கள்.
நாகர்கோவில் சுடலை முத்துகிருஷ்ணன் ஆகிய “என்.எஸ்.கே” 29.11.1908 அன்று பிறந்தார். 1940களிலும், 1950களிலும் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்றெல்லாம் புகழுடன் விளங்கியவர். இவரை,“இந்தியாவின் சார்லி சாப்ளின்” என்றும் புகழ்வர். பேரறிஞர் அண்ணா அவர்களோடும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோடும் நெருங்கிப் பழகியவர். தாம் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை உதவி என வருவோர்க்கு வாரி வாரி வழங்கிய வள்ளல் இவர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தம் வாழ்நாளில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகச் சேலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
அதேபோல, 1968 சனவரியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வத்திற்காகத் திரட்டப்பட்ட நிதியில் எஞ்சிய தொகையை என்ன செய்வதென ஊர்வலப் பொறுப்பாளர்களாகத் திகழ்ந்த புகழ்வாய்ந்த திரையுலகச் சிற்பிகளாக விளங்கிய பெருந்தகையாளர்கள் எஸ்.எஸ்.வாசன், ஏ.எல்.சீனிவாசன், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் மூவரும் அந்த ஊர்வலக் குழுவின் தலைவரான அந்நாளைய பொதுப்பணித்துறை அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைக் கேட்டனர். அப்போது அவர்களிடம் அந்தத் தொகையில் “கலைவாணர் சிலை வைக்கலாம்” எனக் கலைஞர் கூறினார். அவ்வாறே அந்நிதி மூலம் தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் கலைவாணரின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையை அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் 14.1.1969 அன்று திறந்து வைத்தார்கள்.
இந்தக் கலைவாணர் சிலையைத் திறந்து வைத்ததுதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தம் வாழ்நாளில் கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சியாகும்.
அதேபோல, கலைவாணர் அவர்கள் தம் வாழ்நாளில் கடைசிப் பொது நிகழ்ச்சியாகப் பங்கு பெற்றது சேலத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி. தமிழினச் செம்மல்களான இந்த இருவரின் வாழ்விலும் அமைந்த இந்த இறுதிப் பொதுநிகழ்ச்சிகள் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அதுமட்டுமல்ல,“சென்னை அரசினர் தோட்டத்தில் இன்றைய ஓமந்தூரார் வளாகத்தில் அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தைப் புதுப்பித்து, ‘கலைவாணர் அரங்கம்’ என அதற்குப் பெயர் சூட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் திருவுருவச் சிலை ஜி.என்.செட்டி சாலை - திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999 ஆம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இவ்விடத்தில் உள்ள கலைவாணரின் திருவுருவச் சிலையினை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த அன்னாரது திருவுருவச் சிலையினைப் புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி, சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில்
ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.
என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டகையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தம்முடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவைத் தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
தமிழ்த் திரைப்படத்துறையில் கலைவாணர் என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி. சினிமா ரசிகர்களைச் சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்குச் சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே கலைவாணரின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞராகத் திகழ்ந்தார். தமிழில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர். இவர் உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.
சதி லீலாவதி படம் முதலாக 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். நகைச்சுவையில் சிந்திக்க வைக்கும் கருத்துகளைக் கூறி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இவருடைய மனைவி மதுரம் அவர்களும், ஒரு சிறந்த நடிகை; இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ்த் திரையுலக வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள கலைவாணர் “பணம்”, “மணமகள்” போன்ற திரைப்படங்களையும் தயாரித்து இயக்கியுள்ளார்.
திரைப்படங்களில் தம்முடைய நகைச்சுவைகள் வாயிலாக மூடப்பழக்கங்களைக் கண்டித்து, அறிவியல் கருத்துகளைப் புகுத்தியவர். பல சீர்த்திருத்தக் கருத்துகளைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். இவர் சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதனால் தான் இவருக்கு, “கலைவாணர்” என்ற பட்டம் 1947ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்விக் கழகத்தின் சார்பில் வழங்கிப் பாராட்டப்பட்டது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வசனங்களில் கலைவாணரின் படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துக்களைத் திரையுலகிலும் சிறப்பாகப் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், உத்தமர் காந்தியடிகளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பொதுவுடைமை இயக்கத்தினர், திராவிட இயக்கத் தலைவர்கள் ஆகியோரின் அன்பிற்குரியவராய்த் திகழ்ந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் 30.8.1957 அன்று மறைந்தார்.
இத்தகு பெருமைகளுக்குரிய கலைவாணர் அவர்களின் சிலை, அவர் பெயரைத் தாங்கியுள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படுவது கலைவாணர் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வரலாற்று நிகழ்வாகும்.
Also Read
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Epstein Files... மோடியால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் நிலைமை என்ன? - புட்டு புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி!
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!