Tamilnadu
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
2026-27ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையினை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சொல்லிக்கொள்ளும்படியான எந்த அறிவிப்பும் இல்லாமலும், தமிழ்நாட்டை வழக்கம்போல் புறக்கணித்து, தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒரு பட்ஜெட்டை தான் தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ இரயில், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, புதிய இரயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம் என கூறியிருந்தார்.
வழக்கமாக தேர்தல் இருந்தாலே அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் திட்டங்களை அள்ளித் தெளிப்பார்கள். ஆனால் அப்படியாவது தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படுமா அல்லது ஏற்கனவே நிலுவையில் உள்ள தமிழ்நாட்டின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருந்தது.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பை வழக்கம்போல தவிடுபொடியாக்கி, என்றுமே நாங்கள் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எப்போதும் நல்லது செய்ய யோசிக்க கூட மாட்டோம் என நிரூபித்துள்ளது ஒன்றிய அரசின் பட்ஜெட்.
எப்போதுமே தமிழ் வேஷமிடும் ஒன்றிய அரசு கடமைக்கு பட்ஜெட் தாக்கலின்போது திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரையை தொடங்குவார்கள். ஆனால் இந்தமுறை அதையும் மறந்துவிட்டார்கள் போல.
முக்கியமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர் அது என்னவென்றால், நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதி அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 19 தோழி விடுதிகள் நிறுவப்பட்டு, 1,824 பணிபுரியும் மகளிர் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அடிக்கல் நாட்டியுள்ளார்.
இப்படி எப்போதுமே ஒன்றிய ஒரு திட்டத்தை செயல்படுத்தலாமா என யோசிக்கும் போது, அந்தத்திட்டம் ஏற்கனவே திராவிட மாடல் அரசினால் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற திட்டமாகத்தான் இருக்கும். அதுபோல தான் இந்த மகளிர் விடுதி அமைக்கப்படும் என்ற அறிவிப்பும். இது ஒன்றே போதும் தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு முன்னேறி, பெண்களுக்கான திட்டங்களை வகுத்து வருகிறது என்று.
குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதல். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, தமிழ்நாடு அரசின் முக்கிய கோரிக்கையான மாநில அரசின் நிதி பகிர்வு விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் போன்ற எந்த கோரிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
தேர்தல் என்றால் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பிரதமர் தமிழ்... தமிழ்நாடு என மக்களுக்கு காதில் பூ சுற்றும் வேலையை தவறாமல் செய்வார். ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கென எந்த திட்டங்களும் அறிவிக்கப்படாது. இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு இல்லை இது ஓரவஞ்சனை அரசு என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை கற்பிப்பார்கள் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
Also Read
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!
-
“நான் லியோனியின் ரசிகன்” : மகிழ்ச்சியுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!