Tamilnadu
உலக மகளிர் உச்சி மாநாடு 2026 மற்றும் TNWESAFE திட்டம் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் இரண்டு நாள் உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்
2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மிக்க மாநிலமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை கருத்தில் கொண்டு, பெண்களின் பணியிடப் பங்கேற்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதே தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு (TNWESafe) திட்டமாகும்.
உலக வங்கியின் ரூ. 1,185 கோடி நிதியுதவியுடன் ரூ.5000 கோடி மதிப்பீட்டிலான TNWESafe திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கான TNWESafe திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம், ஐந்து ஆண்டு காலத்திற்கு (2024-2029) 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் 1,185 கோடி ரூபாய் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
மகளிருக்கான பல்வேறு வாகனங்களின் சேவைகள் தொடங்கி வைத்தல்
உலக மகளிர் உச்சி மாநாடு தொடக்க விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் விடியல் பயணம் மேற்கொள்ளும் வகையில் பத்து Pink பேருந்துகள், மகளிர் பாதுகாப்பிற்காக மகளிர் காவலர்களுக்கு வாகனங்கள், மகளிருக்கு Pink ஆட்டோ போன்றவற்றை வழங்கி, அவற்றின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல்
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில், UNDP, IPE Global மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தாட்கோவின் CM ARISE திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மகளிர்க்கு தொழில் தொடங்கி கடனுதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழா அரங்கில் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார்.
இந்த மகளிர் உச்சி மாநாட்டில், மாநில திட்டக் குழு, மாநில மகளிர் ஆணையம், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கொள்கை கலந்துரையாடல்களும், திறன் மேம்பாடு, தொழில் முனைவு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் தொடர்பான விவாதங்களும், குறிப்பாக பெண்கள் விவசாயத் துறையிலிருந்து விவசாயம் அல்லாத மற்றும் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புத் துறைகளுக்கு மாறுவதற்கு ஆதரவளிப்பதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடல்கள், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் (TNWESafe) திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாநில அளவிலான செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்கு வழிகாட்டியாக இருக்கும்.
Also Read
-
சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
“மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சிதான் ‘TNWESAFE’ திட்டம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தரும்” : அமைச்சர் ரகுபதி உறுதி!
-
சென்னையில் 4,000–வது குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்!
-
“பிரதமர் மோடி வருகை பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய கெடுதலாகவே அமையும்; வருக பிரதமர்” : முரசொலி!