Tamilnadu
மூத்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு: உருக்கமுடன் முதலமைச்சர் இரங்கல்!
“மூத்த தமிழறிஞரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவருமான தெ.ஞானசுந்தரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். பெரும் பேராசிரியர்களிடம் தமிழ் பயின்று, பல மாணவர்களுக்கு ஆசானாகத் திகழ்ந்து, இறுதிவரையில் சுறுசுறுப்பாக இயங்கித் தமிழ்ப்பணியாற்றிய அன்னாரது மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :- “மூத்த தமிழறிஞரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவருமான தெ.ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
வைணவ உரைவளத்தில் முனைவரான திரு. தெ. ஞானசுந்தரம் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியதோடு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கம்பன் இருக்கையில் முதல் பேராசிரியராக 2 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த சிறப்புக்குரியவர். முதுபெரும் தமிழறிஞர்களான மு.வரதராசனார், அ.ச. ஞானசம்பந்தன் முதலியோருடன் பழகும் பேற்றினைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நன்மதிப்பினையும் கொண்டிருந்தார்.
திரு. ஞானசுந்தரம் அவர்கள் பக்தி இலக்கியங்கள் சார்ந்து, பல ஆய்வுநூல்களை எழுதியதோடு, தலைசிறந்த சொற்பொழிவாளராகவும் தமிழ் மேடைகளை அலங்கரித்த அறிஞர் ஆவார். எண்ணற்ற தமிழ் அமைப்புகள், அறக்கட்டளைகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும், 2024-ஆம் ஆண்டுக்கான ‘இலக்கிய மாமணி’ விருதை மரபுத்தமிழ் பிரிவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு நான் வழங்கியபோது பெரிதும் அகமகிழ்ந்தார். ”தனியாரிடம் பெறும் விருதுகள் மகிழ்ச்சியளிப்பன என்றாலும், அரசு அளிக்கும் விருதுதான் அங்கீகாரம் பெறக்கூடியது” என அப்போது மனநிறைவுடன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பேராசிரியர்களிடம் தமிழ் பயின்று, பல மாணவர்களுக்கு ஆசானாகத் திகழ்ந்து, இறுதிவரையில் சுறுசுறுப்பாக இயங்கித் தமிழ்ப்பணியாற்றிய அன்னாரது மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும், அவரது மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!