Tamilnadu
“நாட்டிலேயே முதன்முறையாக… சென்னையில் ‘குழந்தைகள் உயர்சிறப்பு மருத்துவமனை!’” : அமைச்சர் மா.சு தகவல்!
சென்னை, கிண்டி, கிங் நிலைய வளாகத்தில், 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு நாளை (ஜனவரி 27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்படவுள்ளதை தொடர்ந்து, இப்பணிகள் குறித்து நேற்று (ஜனவரி 25) ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை உலகளாவிய தரத்துடனும், உலகளாவிய பன்முக வசதியுடனும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் இதே வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு மிகப் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநில அரசிலும் இல்லாத வகையில் அதிநவீன வசதிகளுடன் மிகச்சிறந்த பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அதே மருத்துவமனை வளாகத்தில் இந்தியாவின் பிரத்யேகமான வயது மூத்தவர்களுக்கு என்று மருத்துவமனை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2024 ஜூலை 28 அன்று தமிழ்நாட்டில் உலகத்தில் முதன்முறையாக உலகத் தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, உலகிலேயே முதன்முறையாக உலகத் தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கிறது.
இம்மருத்துவமனைக்கு நாளை (ஜனவரி 27) முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்ட உள்ளார். இம்மருத்துவமனையில் 6 தளங்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம், 3,37,990 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய முதுகலை பட்டதாரிகள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பு கட்டடம்;
78,220 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் கூடிய பேராசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டடம், 17,010 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஒரு தளத்துடன் கூடிய உணவகம் மற்றும் கூடுதல் வசதி கட்டடம், 30,324 சதுர அடி பரப்பளவு என்று ஆக மொத்தம் 4,63,544 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டப்படவிருக்கிறது.
6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெறவிருக்கின்ற இந்த மருத்துவமனை உலகளவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகின்ற பிரத்யேகமான ஒரு மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, புற மருத்துவ பயனாளிகள் பிரிவு, குழந்தைகளுக்கான நாளமில்லா சுரப்பி வார்டு, நுரையீரல் சிகிச்சை வார்டு, டயாலிசிஸ் வார்டு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்பியல் சிகிச்சை பிரிவு, இரத்தவியல் பிரிவு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவு, ஆராய்ச்சி ஆய்வகம் என்று பல்வேறு வகைகளிலான சிறப்புமிக்க பிரிவுகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
நிர்வாக அலுவலகம், இரத்த வங்கி காப்பகம், மயக்க மருந்தியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கேத்லேப் ஆய்வகம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு என்று பல்வேறு வகைகளில் அதிநவீன மருத்துவ வசதிகள் இம்மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இம்மருத்துவமனை 18 மாத காலத்திற்குள் இக்கட்டிடப் பணிகள் முடித்து தரப்படும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் அவர்களால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை 24 மாத காலத்திற்குள் கட்டி முடித்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.
அந்தவகையில் இந்த மருத்துவமனை 18 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 27.01.2026 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கப்பட உள்ளது.
கருப்பைவாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி திட்டம் இந்தியாவில் முதன்முறையாக இளம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தாயுமானவர் போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் 14 வயது இளம் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பதற்கு உண்டான தடுப்பூசி HPV (Human papilloma Virus) என்கின்ற தடுப்பூசியினை செலுத்துவதன் மூலம் தடுக்க இயலும் என்று WHO போன்ற உலக சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்ற காரணத்தினால் தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக HPV தடுப்பூசி இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, சட்டமன்றத்தில் 2025 மார்ச் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்கள்நல்வாழ்வுத்துறையின் நிதிநிலை அறிவிப்பு 100ன்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்தவகையில் 14 வயதிடைய இளம் பெண்கள் தமிழ்நாட்டில் 3,38,649 பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் HPV தடுப்பூசி போடும் பணி வருகின்ற 27.01.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பைலட் பேஸ் என்கின்ற வகையில் 3,38,649 பேருக்கு தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு 30,209 பேர் பயன்பெறுகின்ற வகையில் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி உள்ளார்கள்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அனைவருக்கும் படிப்படியாக இத்தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது. இத்தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.14,000/- வரை செலவாகும். தமிழ்நாடு அரசு இத்தடுப்பூசி இலவசமாக வழங்க உள்ளது. “நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாம் கடந்த 02.08.2025 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மகத்தான திட்டம் “நலம் காக்கும் ஸ்டாலின்“ எனும் திட்டம் ஆகும். இது சாதாரண ஒரு முகாம்களாக இல்லாமல் முழு உடற் பரிசோதனை முகாம்களாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு ஒன்றியத்திற்கு 3 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் தலா 4 என்கின்ற வகையிலும், 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்கின்ற வகைகளிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 என்கின்ற வகையிலும், 1256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
அந்தவகையில் ஜனவரி 24ம் தேதி 2026ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள முகாம்களின் எண்ணிக்கை 1053, இந்நிலையில் மிக விரைவில் பிப்ரவரி 2 வது வாரத்திற்குள் ஒட்டுமொத்த முகாம்களும் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்கின்ற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இலக்கு மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கிறது. இதுவரை இம்முகாமில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை 15,88,421 பேர். இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்படி, 45,112 பேர் புதிய அட்டையினை பெற்றிருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்கள் 53,996 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய மருத்துவம் என்று 17 வகையான மருத்துவ முறைகள் இதில் அடங்கியிருக்கிறது. அந்தவகையில் இந்த திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கிறது.
ரூ.40 கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விழா இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 6 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகள், 642 துணை சுகாதார நிலையங்கள் போன்ற ஏராளமான புதிய மருத்துவக் கட்டமைப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.
அந்தவகையில் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ரூ.40 கோடி செலவில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்திருக்கின்ற மருத்துவமனை 253 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையை இன்று (26.01.2026) மாலை 3 மணிக்கு நானும், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும் துறையின் உயரலுவலர்கள் ஆகியோர் அம்மருத்துவமனையை தொடங்கி வைக்க இருக்கிறோம்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் என்பது தொடர்ச்சியாக தொடங்கப்பட்டும், பயன்பாட்டிலும் இருந்து வருகிறது என்பதினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விக்கு டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய் பாதிப்புகள் கடந்த காலங்களை விட தற்போது கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு பாதிப்பு என்பது 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது.
அதாவது 2012இல் 66 உயிரிழப்புகளும், 2017இல் 65 உயிரிழப்புகளும் டெங்குவினால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு டெங்குவினால் ஏற்படும் பாதிப்பு ஓரிலக்கம் என்கின்ற வகையில் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு கட்டுக்குள் இருக்கின்றது. இதற்கு முன்பு இருந்த அதிமுக அரசைப் பொறுத்தவரை டெங்கு பாதிப்பு வெறும் அரசு மருத்துவமனைகளில் வருகின்ற பாதிப்புகள் மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகளாக தந்திருந்தார்கள்.
ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு பாதிப்பை கணக்கெடுத்து மக்களுக்கு அறிவித்து வருகிறோம். இப்படி கூடுதலான பாதிப்புகள் இருக்கின்றது என்கின்ற பயத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களும் அறிந்து கொள்கின்ற வகையில் செய்து வருகிறோம். அந்தவகையில் இதற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. அந்தவகையில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கின்றது என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Also Read
-
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 23 தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர் : பாராட்டிய அமைச்சர் இராஜேந்திரன்!
-
“இந்தியைத் திணிக்கிற பாசிஸ்டுகளுக்கு என்றைக்கும் தி.மு.க ஆபத்தான கட்சிதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
தமிழ்நாட்டில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்! பல்வேறு துறை சாதனைகளுடன் வலம் வந்த அணிவகுப்பு ஊர்தி!
-
வெல்வோம் 200 - படைப்போம் வரலாறு : திமுகவில் 10,000 பேர் இணைந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
முதலமைச்சர் தலைமையில் உலக மகளிர் உச்சி மாநாடு 2026 : எங்கு? எப்போது? - விவரம் உள்ள!