Tamilnadu
ஆளுநர் வெளிநடப்பு முதல் முதலமைச்சரின் பதிலடி வரை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 20ஆம் தேதி, மரபுப்படி ஆளுநர் உரை வாசிக்கப்பட வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முழுமையாக வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்ற மரபுகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரான செயல் இது என சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான இந்த வெளிநடப்பு நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார். மாநில அரசின் செயல்பாடுகளை முடக்கும் போக்கின் வெளிப்பாடாகவே ஆளுநரின் இந்த செயல் பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாட்களில்,கிராமப்புற வேலைவாய்ப்பு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலை, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, விளையாட்டு வசதிகள், மின்சார பேருந்துகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இக்கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து, தமிழ்நாடு அரசு பாகுபாடு இல்லாமல் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும், அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற தொகுதிகளிலும் கூட அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தனர்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியை விடுவிக்காமல் வஞ்சித்து வருவதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத் தொகை இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் உயிர் நீர் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி தாமதமாகி வருவதாகவும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது என அவர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் 3ஆவது நாள் கூட்டத்தொடரின் மிக முக்கியமான நிகழ்வாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தில், மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும் என்றும், கிராமப்புற மக்களின் “வேலைவாய்ப்பு உரிமை” பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. VB-GRAMG என்ற புதிய திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், மாநில அரசின் பங்கை அதிகரிப்பது திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
பேரவையின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக உரையாற்றினார். தனது உரையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட பணிகளை எண்ணிக்கைகளுடன் விளக்கினார்.
அரசு பொறுப்பேற்று இன்றுடன் 1,724 நாட்கள் ஆகின்றன என்றும், 8,655-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும், 15,117 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை தவிர்த்து பிற மாநிலங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், 71 மாவட்ட அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 44 லட்சத்து 44,721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மக்களுக்காக செய்த அனைத்து நடவடிக்கைகளும் வரலாறாகப் பதிவு செய்யப்படும் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உரையின் இறுதியில், எனக்கும் என் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு உழைத்திருக்கிறேன் என்றும், இந்த ஐந்து ஆண்டுகளின் வளர்ச்சியைப் பார்த்து அடுத்த ஐந்து ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். நாங்கள்தான் மீண்டும் வருவோம், மீண்டும் வருவோம், மீண்டும் வெல்வோம் என உறுதியாக அறிவித்தார்.
Also Read
-
🔴LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் - முழு விவரம் உள்ளே!
-
“1 லட்சம் புதிய வீடுகள்.. 1.80 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம்”: முதலமைச்சரின் 8 அறிவிப்புகள் என்னென்ன?
-
“அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் ஆட்சிதான் - மீண்டும் வெல்வோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முழு உரை!
-
தமிழ்நாட்டை நவீனத் தொழில்மயமாக்க திட்டம் - Thrive TN மாநாடு குறித்து முதலமைச்சர் வாழ்த்து செய்தி!
-
“மொழிப்போர் முடியவில்லை... செந்தமிழைக் காக்க சேனை ஒன்று தேவை!” : அறைகூவல் விடுத்த முரசொலி தலையங்கம்!