Tamilnadu

“உங்களின் பிரிவினை வாதம் தமிழ்நாட்டில் எடுபடாது” : வானதி சீனிவாசனுக்கு அமைச்சர்கள் பதிலடி!

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் நிகழ்வில், ஆளுநர் ஆர்.என். ரவி, வழக்கமான மரபின்படி ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டமன்றத்தில் தொடங்குகிறது.

முன்னதாக கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்படி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு ,“இந்து என்பது வேறு; இந்துத்துவா என்பது வேறு. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகள் அனைத்தையும் இணக்கமாகக் கொண்டாடி வருகிறோம். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில்தான் தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதையே முதலமைச்சரும் கடைப்பிடித்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் செய்த சாதனைகளை பட்டியலிட்டால், இந்த நேரம் போதாது!” என்றார்.

அதேபோல் அமைச்சர் சேகர் பாபு,"“உங்களைப் போல் ‘மசூதி’ என்றால் இடிக்க வேண்டும், ‘தேவாலயம்’ என்றால் தகர்க்க வேண்டும்” என்று கூறுபவர் எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்ல. உங்களின் பிரிவினை வாதம் தமிழ்நாட்டில் எடுப்படாது” என பதிலடி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அமைச்சர் சிவசங்கர், ”பிரதமரும், உள்துறை அமைச்சர் தமித்ஷாவும் ஒடிசா சென்று தமிழர்கள் திருடர்கள் என பேசி இருக்கிறார்கள்” கூறினார்.

Also Read: “தி.மு.க ஆட்சியில் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்” : சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!