Tamilnadu

“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.2026) சென்னை நந்தனம் ஒம்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் 49 வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற விழாவில் சிறந்த சிறுவர் அறிவியல் நூல், கவிதை இலக்கியம், தன்னம்பிக்கை நூல், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், தமிழறிஞர், எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருதினை ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசன் அவர்களுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருதினை சிவகுரு பதிப்பகத்திற்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருதினை எழுத்தாளர் மு. முருகேஷ் அவர்களுக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருதினை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்களுக்கும், சிறந்த எழுத்தாளருக்கான பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருதினை ஜா.தீபா அவர்களுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருதினை அ. லோகமா தேவி அவர்களுக்கும், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருதினை திரு.செ.பா.சிவராசன் அவர்களுக்கும், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருதினை முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களுக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை:-

இன்றைக்கு சென்னையினுடைய முக்கியமான ஒரு அடையாளமாக மாறி இருக்கக்கூடிய புத்தகக் கண்காட்சியில் இந்த விருது வழங்குகின்ற சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உண்மையாகவே மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.

இந்த மேடை எனக்கு புதிது கிடையாது. அடிக்கடி இந்த மேடைக்கு பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்திருக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் இந்த புத்தகக் கண்காட்சியை நானே சில வருடங்கள் திறந்து வைத்திருக்கின்றேன். பல புத்தகங்களை இதே மேடையில் வெளியிட்டிருக்கின்றேன். கலைஞர் பொற்கிழி, பபாசி விருதுகளை சில வருடங்கள் நானே இங்கு வருகை தந்து அளித்திருக்கின்றேன்.

முதலில் இந்த இரண்டு காரணங்களுக்காக இந்த புத்தகக் காட்சியை நாம் பாராட்டியாக வேண்டும். முதல் காரணம், 49-ஆவது வருடமாக இந்த புத்தகக்காட்சி இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1977-ஆம் ஆண்டு வெறும் 13 அரங்கங்களோடு தொடங்கப்பட்ட, இந்த புத்தகக் காட்சியில் இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்கங்கள், கடைகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனையாகி கொண்டிருக்கிறது.

பொன்விழாவை தொடவிருக்கக்கூடிய சென்னை புத்தகக்காட்சிக்கு முதலில் நாம் அத்தனைபேரும் நம்முடைய பாராட்டுக்கள், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். அடுத்து இந்த முறை, இந்த ஆண்டு புத்தகக்காட்சிக்கு வரும் போது கட்டணம் இல்லாமலேயே அரங்குகளை பார்வையிடலாம் என்று அந்த விதிகளையும் தளர்வு செய்துள்ளீர்கள். அதற்கு வாசகர்கள் சார்பாக, உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள், நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் பேசும்போது அவரும் ஒரு பதிப்பாளராக வந்திருக்கிறார் என்று குறிப்பிட்டு பேசினார். துணை முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று எத்தனையோ பொறுப்புகள் இருந்தாலும், ஒரு பதிப்பாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு கூடுதல் பெருமை.

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய இளைஞரணி நடத்துகின்ற முத்தமிழறிஞர் பதிப்பகம் சார்பாக இதே புத்தக கண்காட்சியில் நாங்களும் எங்களுடைய அரங்கங்களை அமைத்திருக்கின்றோம். எங்களுடைய பதிப்பகம் சார்பாக இந்த வருடம் 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டு, அதுவும் இந்த புத்தக கண்காட்சியில் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன. அதற்கான களத்தை எங்களுக்கு தந்த இந்த சென்னை புத்தகக் காட்சிக்கு முதலில் பதிப்பாளராக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த நவம்பர் மாதம் இளைஞரணியின் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நாங்கள் அறிவுத்திருவிழா என்ற நிகழ்ச்சியை 8 நாட்களுக்கு நடத்தினோம். அறிவுத்திருவிழாவை முன்னிட்டு பல கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தது. அதனுடைய முக்கிய பகுதியாக ஒரு வார காலம் ஒரு புத்தகக் காட்சியையும் நாங்கள் நடத்தினோம். அந்த புத்தகக் காட்சிக்கு மிகச்சிறந்த ஒரு வரவேற்பு இருந்தது. அதை பார்த்துவிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இனிமேல் வருடா, வருடம் நீங்கள் இத்த புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என்று கூறினார். வருடா, வருடம் அறிவுத்திருவிழாவை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று எங்களுடைய கழகத் தலைவர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

அந்த அளவிற்கு அறிவுத்திருவிழாவை நாங்கள் சிறப்பாக நடத்தியிருந்தோம் என்றால், அதற்கு எங்களுக்கு ரோல் மாடலாக, உத்வேகமாக இருந்தது இந்த சென்னை புத்தகக் காட்சி என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகவே அந்த நன்றி உணர்வோடு இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டிருக்கின்றேன்.

இன்றைக்கு இந்த புத்தகக்காட்சி குறித்து மக்கள் எல்லோரும் பேசும்போது, தொலைக்காட்சியில், செய்திதாள்களில் பார்க்கும்போது மிகவும் பெருமையாக, மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏன் என்றால், முன்பு எல்லாம் சென்னையில் விடுமுறை என்றால் எல்லோரும் பீச், மால், சினிமா தியேட்டர் என்று அங்கு மட்டும்தான் கூட்டங்கள் கூடும்.

ஆனால், இன்றைக்கு இந்த புத்தகக் காட்சி தொடங்கிவிட்டால், மக்கள் கூட்டம், அதுவும் குடும்பம், குடும்பமாக இந்த புத்தகக் காட்சியை நோக்கி வருகின்றார்கள். தினமும் திருவிழா போல இங்கு கூட்டம் கூடுகின்றது. மக்கள் ஆர்வத்தோடு வந்து பல புத்தகங்களை பார்வையிட்டு வாங்கி செல்கிறார்கள்.

ஒரு பக்கம் நந்தனத்தில் இந்த புத்தகத் திருவிழாவை நம்முடைய அரசு நடத்துகின்றது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக சென்னை இன்டர்நேசனல் புத்தகக் காட்சியும் (Chennai International Book Fair) நடத்தப்படுகின்றது. நேற்றுதான் முதலமைச்சர் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகக் காட்சியை முடித்து வைத்தார்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது, இன்றைக்கு சென்னை இந்தியாவினுடைய ஒரு பதிப்பகத் தலைநகராக உயர்ந்து நிற்கின்றது என்று சொன்னால் அது மிகை அல்ல. இன்றைக்கு இந்தியாவிலேயே முன்னணி அறிவுச்சமூகமாக தமிழ்ச்சமூகம் இருக்கிறது என்றால், அதற்கு காரணம், நம்முடைய தமிழ் மக்கள் என்றைக்குமே வாசிப்பை கைவிடாமல் இருக்கிறது தான் மிக, மிக முக்கியமான ஒரு காரணம்.

குறிப்பாக, நம்முடைய திராவிட இயக்கத்தை எடுத்துக் கொண்டால், பேசியும், படித்தும், எழுதியும் வளர்ந்த இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்கள் என்று தலைவர்கள் மட்டுமல்லாமல் அந்த இயக்கத்தினுடைய தொண்டர்கள் வரைக்கும் இதழ்களை நடத்தியிருக்கிறார்கள். புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் 100-க்கும் அதிகமான பத்திரிகைகளை நடத்தியதுதான் நம்முடைய திராவிட இயக்கம். எழுத்தை வெறும் பிரச்சார கருவியாக பயன்படுத்தாமல், மக்களுக்கான ஒரு பகுத்தறிவை முற்போக்கு சிந்தனையைக் கொண்டு சென்று சேர்க்கின்ற சேவையாக நம்முடைய திராவிட இயக்கத்தலைவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் உலகினுடைய போக்கை மாற்றிய கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து கொண்டுவந்தார்கள். அண்ணா அவர்கள் உலக வரலாற்று வீரர்களுடைய, தலைவர்களுடைய கருத்துக்களை எல்லாம் தன்னுடைய தம்பிகளுக்கு கடிதமாக எழுதினார்.

அண்ணா அவர்கள் அன்றைக்கு பற்ற வைத்த, அந்த அறிவுத் தீ இன்றுவரை கொழுந்துவிட்டு எரிகிறது என்றால் மிகை ஆகாது. அதனால்தான் தீ பரவட்டும் என்று சொன்னால் இன்றைக்கு கூட சில பேர் பயந்து நடுங்குகின்றார்கள்.

அதுமாதிரி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய நாடகங்களும், இலக்கியங்களும், புத்தகங்களும் தமிழ்நாட்டுக்கென்று ஒரு தனி அரசியல் பாதையை உருவாக்கியது.

அறிவு என்பது எப்போதுமே வளர்ந்து கொண்டு இருக்கக்கூடிய ஒன்றாகும். Learning has no limits என்று சொல்வார்கள். அதனால்தான் திராவிட இயக்கம் எப்போதுமே புத்தகங்களை, எழுத்தாளர்களை, பதிப்பாளர்களை எப்போதுமே கொண்டாடி கொண்டு இருக்கின்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், புத்தகங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அதே அளவிற்கு எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதனால் தான், தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை பபாசிக்கு அவர் அளித்தார்.

இன்றைக்கு அதன்மூலம் கிடைக்கின்ற அந்த வட்டியில் இருந்து எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ‘கலைஞர் பொற்கிழி விருதும்’ வழங்கப்படுகின்றது.

இந்தாண்டுக்கான ‘பொற்கிழி விருதை’ நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதே மேடையில் ஒரு வாரத்திற்கு முன்பு அளித்தார். அதுமட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு வாசிப்பை ஊக்குவிக்கின்ற ஒரு அரசாகவும் தொடர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இன்றைக்கு, சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இதே மாதிரி புத்தகக் காட்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இந்த சென்னை புத்தகக் காட்சியை நடத்துவதற்கு நம்முடைய அரசு 75 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றது.

அதுமட்டுல்ல, வைகை, சிறுவாணி, காவிரி ஆகிய இலக்கியத்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றது. தமிழ்நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள் பிறந்தநாளில் தொடர்ந்து கூட்டங்கள், பாராட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், இலக்கியமாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் இப்படி பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்தி வருகின்றது.

கலைஞர் அவர்கள், அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். கலைஞர் அவர்கள் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

அதுமட்டுமல்ல, திருச்சியில் காமராசர் அறிவுலகம், கோவையில் பெரியார் அறிவுலகம், திருநெல்வேலியில் காயிதே மில்லத் அறிவுலகம், சேலத்தில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என்று நம்முடைய அரசு பல்வேறு அறிவுலகங்களை, நூலகங்களை திறந்து வைக்கின்றது.

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய இளைஞரணியின் சார்பாக கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு கொடுத்த பணி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்றங்களிலும் ஒரு நூலகத்தை நீங்கள் அமைக்க வேண்டும் என்று சொன்னார்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 120 நூலகங்களை தி.மு.க இளைஞரணி தனியாக நடத்தி வருகின்றது.

அதுமட்டுமல்ல, என்னுடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு நடமாடும் நூலகத்தையும் அமைத்திருக்கின்றோம். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசக உறுப்பினர்கள் இன்றைக்கு அந்த நூலகத்தில் பதிவு செய்து, அதை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதே போல எங்களுடைய கழகத் தலைவர் சொன்னது போல் எனக்கு பொன்னாடை, பூங்கொத்து வழங்குவதைத் தவிர்த்து புத்தகங்ளை பரிசாக கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். அப்படி வழங்கப்பட்ட புத்தகங்களை இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு நூலகங்களுக்கு பரிசாக கொடுக்கின்றோம்.

ஆகவே, வாசிப்பை ஓர் இயக்கமாக ஆக்குவதற்கு, எங்களால் முடிந்த விஷயங்களை தொடர்ந்து நாங்கள் செய்து வருகின்றோம். வாசிப்புக்கு உறுதுணையாக இருக்கின்ற நண்பர்களுக்குதான் இந்த விருதுகளை இன்றைக்கு வழங்கி இருக்கின்றோம்.

சிறந்த பதிப்பாளர், சிறந்த நூலகர், சிறந்த புத்தக விற்பனையாளர், சிறந்த எழுத்தாளர் என்று புத்தகங்கள் உருவாகி, அது வாசகர்களிடம் சென்று சேரும் வரை உழைக்கின்ற அனைவருக்கும் இன்றைக்கு இங்கே பாராட்டு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கக்கூடிய பபாசி நிர்வாகிகள் அனைவருக்கும் உங்கள் சார்பாக என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் உங்களுக்கு துணையோடு இருக்கும். பதிப்பாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சிறப்பான வாய்ப்பு அளித்ததற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read: “திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லையா?” - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முதலமைச்சர்.. - விவரம் உள்ளே!