Tamilnadu

“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.1.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2026 நிறைவு விழாவில் ஆற்றிய உரை,

மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை, தான் சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான், புத்தகங்கள்! 

வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம்! அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள்! 

எழுத்தாளர்கள் - பதிப்பாளர்கள் - விற்பனையாளர்கள் – வாசகர்கள் என்று எல்லோருக்குமான உறவுப் பாலமாக, இந்த புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! 

தலைநகரான சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாகதான், இந்த நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! 

102 நாடுகளின் பங்கேற்போடு சிந்தனையின் ஊற்றாக, பண்பாட்டின் கருவூலமாக, அறிவுப் பரிமாற்றத்தின் அடித்தளமாக, இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவடைந்ததில் தமிழ்நாடு முதலமைச்சராக மட்டுமல்லாமல், புத்தகத்தின் ஆர்வலனாகவும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

அதுவும் சர்வதேச புக்கர் பரிசை வென்ற கன்னட பெண் எழுத்தாளர் மரியாதைக்குரிய “பானு முஷ்டாக்” அவர்கள், இந்த மேடையில் இருப்பது என்னுடைய மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது! இங்கே வந்தவுடன் என்னைப் பார்த்து, நான் ஆற்றக்கூடிய செயல்பாடுகள் பெருமை அளிப்பதாக சொன்னார். உண்மையிலேயே அவர்களின் எழுத்து தான் நம்மை பெருமைப்படுத்துகிறது.

“ஏற்கனவே, ஒய்.எம்.சி.ஏ. திடலில், ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறதே, அப்படியானால், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் என்ன?” என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, இந்தப் புத்தகத் திருவிழாவில் - மொழிபெயர்ப்புகள், பதிப்புரிமை பரிமாற்றம் ஆகியவற்றில்தான் மிகுந்த முக்கியத்துவம் செலுத்தியிருக்கிறோம்!

அது எவ்வளவு அவசியம் என்பதற்கு இங்கே வந்திருக்கக்கூடிய பானு முஷ்டாக் அவர்களின் வெற்றியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது! ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால்தான் அவருடைய “ஹார்ட் லேம்ப்” நூலும், தென்னிந்தியப் பெண்களின் வாழ்வுரிமை வாழ்க்கையும், உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது! 

நம்முடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, பிற்போக்குத்தனங்களை எதிர்க்கின்ற, சமூகநீதிப் பார்வை கொண்ட, ஒரு பெண் எழுத்தாளரின் வருகையால் நம்முடைய புத்தகத் திருவிழா இன்றைக்கு மிகுந்த சிறப்படைந்திருக்கிறது! எதையும் கேள்விகேட்டு, விமர்சனப் பார்வையுடன் அணுகி, பழமைகளை பொசுக்கிய திராவிட இயக்கம் தமிழ்நாட்டை பண்படுத்தியது!

அதேபோல, கர்நாடகத்தில், கன்னட புரட்சி இலக்கிய மரபில் இயங்கி வருகின்ற பானு முஷ்டாக் அவர்கள், நம்முடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்காக என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! 

ஜெர்மனி,  இங்கிலாந்து, இத்தாலி, அமீரகம் -இப்படி, உலகத்தின் பல பகுதிகளில், இது போன்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்ற செய்திகளை நான் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டிலும் நடைபெற வேண்டும் என்று நான் நினைப்பேன்! அந்த எண்ணத்தை இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்! 

இந்தப் புத்தகத் திருவிழாவில், நிறைய அறிவார்ந்த, இக்காலத்துக்கு அவசியமான உரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து நான் பெருமைப்பட்டேன். அதை பொதுமக்களிடமும் பகிர்ந்து கொண்டு, அவர்களை இந்தப் புத்தகத் திருவிழாவை நோக்கி அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் - “ஏ.ஐ. - அலாவுதீன் அற்புத விளக்கா? டிரோஜன் குதிரையா?”;

“புத்தகங்களின் எதிர்காலம் குறித்த பிரெஞ்சு பார்வை” - “ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம்” - “மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பு சார்ந்த சவால்கள்” - “ரீல்ஸ் யுகத்தில் இலக்கியம் கவனம் பெறுவதில் உள்ள சவால்கள்” - “பெண் இலக்கியம்சார் சவால்கள்“ -இப்படி சுவாரசியமான பல பொருட்களில் உள்ள உரையாடல்கள் நடத்துகிறீர்கள் என்று என்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ‘ஷேர்’ செய்தேன்!

அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுமைகளின், இந்திய, வெளிநாட்டு ஆளுமைகளும் சேர்ந்து பேசியது, ஒரு பரந்து விரிந்த பார்வையை எல்லோருக்கும் வழங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன். 

நம்முடைய மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுக்கப் பரவவேண்டும்; உலகின் உயரிய சிந்தனைகள் நம்முடைய மக்களிடம் வந்தடைய வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியால் நனவாகியிருக்கிறது!

மொத்தத்தில் இப்படியொரு அறிவுச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்ற நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்னுடைய அருமை தம்பி அன்பில் மகேஸ் அவர்களுக்கும், செயலாளர் சந்தர மோகன் அவர்களுக்கும், பொதுநூலக இயக்ககத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கும், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், பள்ளிக்கல்வித் துறை என்கிற மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து, அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டு உழைத்துக் கொண்டு வருகிறார்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால், அவரே ஒரு டீச்சர் போல ஆகிவிட்டார். டீச்சர் போல மட்டுமல்ல, தொடர்ந்து கற்கும் மாணவராகவும் இருந்து முனைவர் பட்டம் பெற்று மாணவர்களுக்கு ஒரு நல்ல ரோல்மாடலாக இன்றைக்கு அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். 

இங்கே அவர் பேசும்போது சொன்னார், நான்கு ஆண்டுகளில், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை உலக அளவிலான பதிப்புரிமை பரிமாற்ற மையமாக உருவெடுத்திருப்பதை நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்.

இன்று, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் இங்கே குழுமியிருப்பது, சென்னை பன்னாட்டு அறிவு மையமாக உயர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. 

இலக்கியத்திற்கு எல்லைகள் கிடையாது! திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துக்களும் உலகமெல்லாம் ஒலிக்கவேண்டும். 

அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் இலக்கியப் படைப்புகள், எளிய தமிழில், நம்முடைய கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்காகவே நம்முடைய அரசு, 'தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை' மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கித் தந்து, கடந்த 3 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான நூல்கள் இதன் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் 'பதிப்புரிமைப் பரிமாற்றம்' வெறும் வணிகம் கிடையாது; இரு மொழிகளுக்கு இடையே நடைபெறுகின்ற பண்பாட்டுக் கைக்குலுக்கல்! செம்மொழியான தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை உலக மக்களுக்கு சென்று சேரவேண்டும்! இந்த நிலப்பரப்பிலிருந்து எவ்வளவு ஆழமான, பரந்த சிந்தனை கொண்ட கருத்துக்கள், இலக்கிய, இலக்கண மரபுகள் உருவாகியிருக்கிறது என்று நாம் உணர்த்த வேண்டும்! 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக, சிறந்த தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். A.I. கோலோச்சும் இந்த காலத்தில், புத்தகங்களையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துகாட்டுவதாக இந்த அரங்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது. 

இங்கே வந்திருக்கின்ற உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம். கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளை பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும்! 

உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்; அதேபோல, மனிதநேயத்தையும், சமூகநீதியையும் பேசுகின்ற எங்கள் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்; எழுத்தாளர்கள் உலகை வெல்வதை பெருமிதத்தோடு எதிர்நோக்கி அனைவரும் காத்திருப்போம். 

மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் இல்லை, அது உலக மக்களை இணைக்கும் பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் கிடையாது! அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து. 

எனது அன்பிற்குரிய மாணவர்களே, இளைஞர்களே! ஒரு புத்தகத்தைத் திறப்பவர், உலகத்தின் ஜன்னலைத் திறக்கிறார். ஒரு புத்தகத்தை வாசிப்பவர், ஆயிரம் மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறார். நீங்கள் வாசிக்கின்ற ஒவ்வொரு பக்கமும் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம்! ‘உலகை தமிழுக்கும், தமிழை உலகுக்கும் கொண்டு சேர்ப்போம்’ என்று சொல்வோம். 

என்னுடைய உரையை நிறைவு செய்வதற்கு முன்பு, சில நாட்களுக்கு முன்பு, மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் தில்லியில் இருந்து வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம். 

அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன். 

“குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்”. இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும். 

படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும். 

அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான்! அப்போது, இதைவிட பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்! தமிழ்நாடு முழுவதும் மேலும் பல பிரமாண்ட நூலகங்களை அறிவுக் கோயில்களாக எழுப்புவோம்! அறிவுத்தீ வளர்ப்போம்! வெல்வோம் ஒன்றாக!

Also Read: சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!