Tamilnadu

“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!

தி.மு.க மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜன.25 அன்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கிறது என கழக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவிப்பு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

’தீ பரவட்டும்!’

செந்தமிழைக் காக்க சேனை ஒன்று தேவை!

செந்தமிழைக் காப்பதற்குச்

சேனை ஒன்று தேவை - பெருஞ்

சேனை ஒன்று தேவை.

திரள்திரளாய்ச் சேர்ந்திடுவீர்

புரிவம் நல்ல சேவை.

இந்திதனைத் தமிழரிடம்

ஏன் புகுத்த வேண்டும்? - இவர்

ஏன் புகுத்த வேண்டும்?

எம்முயிரில் நஞ்சுதனை

ஏன்கலக்க வேண்டும்?

பைந்தமிழை மாய்ப்பதற்க்கே

பகைமுளைத்த திங்கே! - கொடும்

பகைமுளைத்த திங்கே!

பாதகரை விட்டுவைத்தால்

தமிழர்திறம் எங்கே ?

சந்தத்தமிழ் மொழியிழந்தால்

தமிழர் நிலை தளரும் - நல்ல

தமிழர் நிலை தளரும்

தமிழர்திறம் காட்டிடுவோம்

முழங்கிடுவீர் முரசம்!

-பாவேந்தர் பாரதிதாசன்!

இந்தி ஆதிக்கத்தை வேரறுக்க எழுந்த மொழிப்போர் தியாகிகள் தின வீர முழக்கம்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமக்குக் கற்பித்துச் சென்ற ஐம்பெரும் கொள்கை முழக்கங்களில் முதன்மையானது “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என்ற முழக்கம் நம் உயிரில் கலந்தது. உணர்வில் பதிந்தது.

1930-களிலும் 1965-லும் இந்தியின் ஆதிக்க அலைக்கு எதிராகத் தமிழ்நாட்டைத் தற்காத்தது திராவிட இயக்கம். தந்தை பெரியார் ஊட்டிய இனஉணர்வும் பேரறிஞர் அண்ணா நமக்களித்த "இருமொழிக் கொள்கை” எனும் எஃகு அரணும், 'தாழப் பறக்காது எங்கள் தமிழ்க்கொடி' என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், உயர்த்திப் பிடித்த கொள்கை முன்னெடுப்புகளும் டெல்லி அதிகார மையங்களின் நகங்கள் கூட தமிழ்நாட்டைத் தொட்டுப்பார்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கியது.

பேரறிஞர் அண்ணா தந்த இருமொழிக் கொள்கையால் இன்று தமிழ்நாடு அடைந்திருக்கும் உயரம் உலகறிந்தது. 'தமிழருக்கு அவர் தாய்மொழி; உலகத்தோடு உறவாட ஆங்கிலம்' என நம்முடைய இரு மொழிக் கொள்கையால் இந்திய மாநிலங்களுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

நம்முடைய புறநானூற்றுப் படைத் தலைமைகளின் வழித் தோன்றலாக, வரலாற்றின் தொடர்ச்சியாக, நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தித் திணிப்பு எனும் கோரைப் பற்களுக்கு எதிராக மாநில மொழியுரிமை வாளையும், தமிழின் தொன்மை மரபை உலகுக்கு உணர்த்தும் கீழடி கேடயத்தையும் ஏந்தி நிற்கிறார்.

இந்தியைக் கொண்டு வந்து நம்மிடம் வாலாட்டத் துடிக்கும் சங்கிகளுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் நம்முடைய இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

எரிநெருப்பும் சிந்திய ரத்தமும் அதில் கலந்த மொழிப்போர் வீரர்களின் தியாகமும் நமக்கு உணர்த்தும் வரலாறுச் செய்தி ஒன்றுதான்: “உரிமைப் போரில் உறங்குபவனுக்கு வாழ்வு கிடையாது!" வரும் ஜனவரி 25-ம் தேதியன்று, மொழிப்போர் தியாகிகள் தினத்தில் நாம் எடுக்கும் உறுதிமொழி நமக்குச் சடங்கான செயல் அல்ல.

அது ஆதிக்கவாதிகளின் செவிகளுக்கு அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் வழியில் நாம் விடுக்கும் அறைகூவல்!.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

எங்கள் மொழி, எங்கள் அடையாளம்!

கீழடி தமிழர் தாய்மடி!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

தமிழ்நாட்டைத் தலை குனிய விட மாட்டேன்!

தமிழ் வாழ்க!

தியாகிகள் சிந்திய குருதி காய்ந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் பற்றவைத்த உணர்வுத் தீ என்றும் அணையாது. நம் வருங்காலத் தலைமுறைகளின் எதிர்காலத்திற்காக, நம் பண்பாட்டு அடையாளங்களைக் காப்பதற்காக, மண், மானம், மொழி, இன உரிமைகளை மீட்பதற்காக, மீண்டும் ஒரு சேனை தேவை! அந்தச் சேனை, கொள்கை வீரர்களாகிய கழக மாணவர் படையே என்ற உரத்த சிந்தனையுடன் களம் காண்போம்!

தீ பரவட்டும்!

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! அன்னைத் தமிழை உயிரிலும் மேலாக காப்போம்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!”

Also Read: சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!