Tamilnadu

மதுரை அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.1.2026) பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஏறுதழுவுதல் போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழா நடைபெறும்.

இந்த மாடுபிடி விழாவை, ஒன்றிய அரசு விலங்குகள் வதைச் சட்டத்தின் துணைகொண்டு தடைவிதிக்க முனைந்தபோது, தமிழனின் பண்பாட்டு உரிமை எனத் தன்னெழுச்சியாகச் சீறி எழுந்த தமிழ்நாட்டு இளைஞர்களால், இந்திய உச்சநீதிமன்றமே தடையை விலக்கி அனுமதி வழங்கிய வரலாறு இந்த விழாவின் வெற்றி முத்திரையாகப் புகழ் படைத்தது.

அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப் பின்னர், அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்து, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்ட ஏழுதழுவுதல் அரங்கம் அமைத்திட 62 கோடியே 78 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு;

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்து வசதிகளுடன் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில்

மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு, தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமான அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கத்தினை 24.1.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு நேரில் சென்று திறந்து வைத்தார்.

இந்த அரங்கம் ஆண்டுமுழுவதும் சுற்றுலாவிற்குப் பயன்படுவதுடன், ஜல்லிகட்டு நடைபெறாத காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகிறது.

அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றையதினம் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஏறுதழுவுதல் போட்டியை பார்வையிட்டு, வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் போட்டியில் இறுதியாக வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர், மோட்டார் சைக்கிள் போன்றவை பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ரொக்கமாக…நேரடியாக…ஒரு நொடியும் தாமதமின்றி!” : பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்!