Tamilnadu

“இது பேரறிஞர் அண்ணா பற்றவைத்த தீ! தலைமுறை, தலைமுறையாக பரவிக்கொண்டிருக்கும் தீ!”: துணை முதலமைச்சர் பேச்சு!

சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டையில் தி.மு.க இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர்' நூலகத்தினை நேற்று (ஜன.11) கழக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி ஜாஃபர்கான்பேட்டையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், கலைஞர் கணினி கல்வியகம் - கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற மாணவர்கள் - இளைஞர்கள் 1,500 பேர் மற்றும் மானிய விலையில் ஆட்டோக்களைப் பெற்ற 1,500 பேர் என மொத்தம் 3,000 பேருக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது விழா மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியவதாவது,

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல், அரசு தமிழ்நாட்டு மாணவர் - இளைஞர்கள் - உழைக்கும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதிலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால் லட்சக்கணக்கான மகளிர் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பாத ஒன்றிய பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டின் நிதி உரிமையை தொடர்ந்து பறித்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி வசூலின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய சுமார் ரூ.10,000 கோடி நிதியை இதுவரை வழங்காமல் வஞ்சித்து வருகிறது.

இதுதவிர, ஒன்றிய அரசின் சார்பில் கல்வியில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காத நிலையில், கல்விக்கான நிதியையும் வழங்காமல் ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் இந்தித் திணிப்பை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. காரணம், இது பேரறிஞர் அண்ணா பற்றவைத்த தீ. தலைமுறை, தலைமுறையாக பரவிக்கொண்டிருக்கும் தீ.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் கொள்கை ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இச்சூழலில், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் - அடையாளத்தையும் வீழ்த்திட நினைக்கும் பாசிஸ்ட்டுகள் - அடிமைகளை வீழ்த்தி, மீண்டும் திராவிட மாடல் அரசினை அமைக்க அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.

திராவிட மாடல் 2.O-இலும் மக்களுக்கான சிறப்புமிக்க திட்டங்கள் புதுவேகத்துடன் தொடரும்.”

Also Read: “இதுவரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 விநியோகம்!” : அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!