Tamilnadu

“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில்  தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.  

இவ்விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:-

தமிழ்நாட்டின் வரலாற்றில், இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்! வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! 

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களுடைய அரசு, மக்களான உங்களிடம், உங்களுடைய கனவுகளை கேட்டு, அதையெல்லாம் நிறைவேற்ற தொடங்கப்பட்ட நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது! நான் எதற்காக இங்கு வந்திருக்கிறேன் என்றால், “உங்க கனவ சொல்லுங்க” அதை நிறைவேற்றி தருகிறோம் என்று கேட்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, திருச்சியில் நடந்த மாபெரும் மாநாட்டில், நான் உரையாற்றுகின்றபோது ஏழு வாக்குறுதிகளை சொன்னேன்.  அந்த ஏழு வாக்குறுதிகள் என்னவென்றால்,

  • முதல் வாக்குறுதி - வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு!

  • இரண்டாவது வாக்குறுதி - மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!

  •  மூன்றாவது வாக்குறுதி - குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்! 

  • நான்காவது வாக்குறுதி - அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்! 

  • ஐந்தாவது வாக்குறுதி - எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! 

  • ஆறாவது வாக்குறுதி - உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! 

  • ஏழாவது வாக்குறுதி - அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு! என்று ஏழு வாக்குறுதிகளை நான் வழங்கியிருந்தேன். இது என்னுடைய கனவுகள் என்று சொல்லி, அந்த வாக்குறுதியை வழங்கினேன். இதையெல்லாம் இப்போது நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்! 

சொன்னால் - சொன்னதை செய்பவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கக்கூடிய இந்த ஸ்டாலின்! 

பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று சொன்னேன். இன்றைக்கு, நம்முடைய தமிழ்நாடுதான் 11.19 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே BEST மாநிலமாக இருக்கிறது! இந்தியாவிற்குள் Invest செய்ய வேண்டும் என்று எந்த நிறுவனமாவது நினைத்தால், அவர்களின் First Choice-ஆக தமிழ்நாடுதான் இருக்கிறது! 

அதேபோல, விவசாயத்திற்கும், பாசனப் பரப்பு அதிகமாயிருக்கிறது; விளைச்சல் அதிகமாகியிருக்கிறது; இலாபம் தரும் தொழிலாக மாறியிருக்கிறது! 

இந்தியாவிலேயே கல்விக்காக தமிழ்நாடு செய்யும் அளவிற்கு, எந்த மாநிலமும் செய்வதில்லை என்று பெருமையுடன் சொல்லும் அளவிற்கு மாதிரி பள்ளிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய மாணவர்களும், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, போட்டித் தேர்வுகள் என்று எல்லாவற்றிலும் அடித்து தூள் கிளப்புகிறார்கள்! 

அடுத்து, மருத்துவம்! தமிழ்நாட்டின் மருத்துவத் துறையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடுதான் இப்போது Medical
Tourism-த்தின் மையமாக விளங்கிக் கொண்டிருக்கிறது! வெளிநாடுகளில் இருந்தும், மருத்துவச் சிகிச்சைகளுக்காக இங்குதான் வருகிறார்கள். இந்த தரமான மருத்துவத்தை உங்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து சேர்க்கத்தான் மக்களைத் தேடி மருத்துவம் என்று ஐ.நா. மன்றமே பாராட்டும் திட்டத்தை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

அதுமட்டுமல்லாமல், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, இதயம் காப்போம், பாதம் காப்போம், நலம் காக்கும் ஸ்டாலின் என்று ஏராளமான திட்டங்கள் - மக்களின் உயிர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது! 

அடுத்து, மற்ற மாநிலங்களை பார்த்தீர்கள் என்றால், பெரும்பாலும், அந்த மாநிலத்தின் தலைநகரமும் முதல் நிலை நகரங்களும்தான் வளர்ந்திருக்கும்! ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில் தான் இப்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும் வளர்ந்திருக்கிறது! சாலைகள் - பாலங்கள் - போக்குவரத்து இணைப்பு - குடிநீர் வசதி என்று உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது! நகரங்கள் - பேரூர்கள் மட்டுமல்ல, கிராமங்களும் வளர்ந்திருக்கிறது! 

இது எல்லாவற்றிற்கும் மேல் சமூகநீதி அரசை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! ஆதிதிராவிடர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என்று, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து நாம் செய்து கொண்டிருக்கிறோம்! 

அதுவும், இவை எல்லாவற்றையும் எந்த சூழ்நிலைகளில் நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்? நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, கொரோனா என்ற கொடுமையான பாதிப்பு உச்சத்தில் இருந்தது! நல்லது எதற்குமே ஒத்துழைக்காத, தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக மட்டுமே சிந்தித்து செயல்படும் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஒன்றிய அரசில் இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம், ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அ.தி.மு.க. இப்போது எதிர்க்கட்சியான பிறகு, உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை எல்லாம் உருவாக்கி, அவதூறு பரப்பிகொண்டு இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டிற்கும், ஒன்றிய அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் என்ற பொறுப்பில் இருப்பவர், என்ன செய்கிறார் என்றால் உங்களுக்கே தெரியும்! உங்களின் எண்ணங்களை பிரதிபலித்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதே தன்னுடைய முதல் வேலை என்று ஆளுநர் செயல்படுகிறார். 

இத்தனையும் மீறி, மக்களான நீங்கள் எங்கள் கூடவே இருப்பதால்தான், 2021-இல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இந்த சாதனையை செய்தது, திராவிட மாடல்! ஒன்றிய அரசே நிதி தர மறுத்து புறக்கணித்தாலும், அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களில் எல்லாம் தவிர்க்கவே முடியாத அளவிற்கு முதலிடத்தில் இருக்கும் சாதனையை செய்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு! 

தமிழ்நாட்டின் கஜானாவை சுரண்டிய கடந்தகால அதிமுக ஆட்சியாளர்கள், மக்களால் விரட்டியடிக்கப்பட்டப் பின்னர், என்ன என்னவெல்லாம் சொன்னார்கள். நாம் மகளிருக்கான உரிமைத் தொகையை வழங்க மாட்டோம் என்று சொன்னார்கள்! ஆனால், அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம் – செய்து கொடுத்திருக்கிறோம் -  செய்து கொண்டிருக்கிறோம். ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை அக்கவுண்ட்டில் இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

அடுத்து என்ன சொன்னார்கள், போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது, இதில் எங்கே இலவசப் பயணம் வழங்கப்போகிறார்கள் என்று சொன்னார்கள். நான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த மறுநாளே, பெண்கள் எல்லோரும் நகரப் பேருந்துகளில் விடியல் பயணம் செய்ய முதல் கோப்பில், முதல் கையெழுத்திட்டவன் தான் இந்த ஸ்டாலின்! 

சொன்னதை மட்டுமல்ல, மக்களுக்குத் தேவை என்று தோன்றியது என்றால், அது நாங்கள் சொல்லாததாக இருந்தாலும் செய்துகொண்டிருக்கிறோம்! 

தினமும் காலையில், 21 இலட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடும் காலை உணவுத் திட்டம், தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமா? 

48 இலட்சம் மாணவ - மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திருக்கும் நான் முதல்வன் திட்டம், தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டமா?  இல்லையே. ஆனால், இதையெல்லாம் நம்முடைய தமிழ்நாட்டிற்கு தேவை. நம்முடைய பிள்ளைகளுக்கு தேவை என்று அதை கொண்டு வந்தோம்! நாளைக்கு நம்முடைய பிள்ளைகள் வளர்ந்து, மாணவர்களாக படித்து, பெரிய பெரிய வேலைகளில் உட்காரும்போது, இந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக நம்முடைய திராவிட மாடல் அரசை பாராட்டுவார்கள்! 

இன்னும் சொல்கிறேன். அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னாலே, பல தொழில் நிறுவனங்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கிறோம்! ரெக்கார்ட் செய்தால், ரெக்கார்டை பிரேக் செய்ய முடியாத அளவிற்கு செய்ய வேண்டும்! இதுதான் என் பாலிசி! 

இன்னும்கூட சொல்கிறேன். 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - 4000 கோயில்களில் குடமுழுக்கு - 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான கோயில் சொத்துகள் மீட்டிருக்கிறோம் - அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான பென்ஷன் திட்டம் - கடந்த நான்கரை ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு முறை, மூன்று முறை நாம் பயணம் செய்து, அரசு விழாக்கள் மூலமாக, 40 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கிறோம். 

இப்போதுகூட, இந்த பொங்கல், மகிழ்ச்சி பொங்கலாக இருக்கவேண்டும் - அதற்காக தான் பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் தருகிறோம்! 

இப்படி உங்கள் தேவைகளை உணர்ந்து, நல்ல பல திட்டங்களை செய்துகொண்டிருக்கும் உங்கள் திராவிட மாடல் அரசிடம், உங்களுடைய கனவுகளை நீங்களே சொல்ல வேண்டும் என்று உருவாக்கியிருப்பதுதான்,  இந்த ‘உங்க கனவ சொல்லுங்க’திட்டம்! 

இன்றிலிருந்து முப்பது நாட்களுக்கு, நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் - இன்றிலிருந்து முப்பது நாட்களுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்பங்களையும், அரசின் சார்பாக தன்னார்வலர்களை நியமிக்கப்படுகின்ற எங்கள் Team-ஐ சேர்ந்தவர்கள் உங்களை சந்திப்பார்கள். அவர்களிடம் உங்களின் கனவுகளை சொல்லுங்கள். அதையெல்லாம் அவர்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்துகொள்வார்கள்! அது எல்லாவற்றையும் ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்! 2030-ஆம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வை கொண்டதாக, அந்த கனவுத்திட்டம் இருக்கும்! நான் உறுதியாக சொல்கிறேன். இந்த கனவுகளை எல்லாம் நான் நிறைவேற்றி காட்டும்போது, 

  • கிராமப்புற உள்கட்டமைப்புகள்

  • நகர்ப்புற உள்கட்டமைப்புகள்

  • மொழி மற்றும் பண்பாட்டு வெற்றிகள்

  • கல்வி மற்றும் திறன் மேம்பாடுகள்

  • சமூகங்களின் வளர்ச்சி

  • விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்

  • வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய ஏழு துறைகளில், தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக நம்முடைய மாநிலம் வளர்ந்திருக்கும்! 

பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் சொல்வார். “மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்; அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு; அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டுமானம் செய்! பணி முடிந்த பிறகு அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்திவிட்டுத் திரும்பி வா" என்று சொன்னார். அண்ணா சொன்னதை எல்லாம், என்னுடைய இதயத்தில் வைத்து, செயல்படக் கூடியவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! அதனால்தான், ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்! 

ஆட்சி என்பது, முதலமைச்சரான என்னுடைய கனவுகளை மட்டுமல்ல, வாக்களித்த, வாக்களிக்காத உங்கள் எல்லோருடைய கனவுகளையும் நிறைவேற்றுவதற்கான கருவி! அப்படி, உங்கள் கனவுகளை கேட்டு, நிறைவேற்றும்போதுதான், உங்கள் குடும்பங்கள் முன்னேறும்! மகிழ்ச்சி அடையும்! உங்கள் கனவுகள் நிறைவேறினால், தமிழ்நாடும் முன்னேறும்! வளர்ச்சி அடையும்! 

வரலாற்றை புரட்டி பாருங்கள். நாம் கனவு கண்டால், நிச்சயம் நம்முடைய உழைப்பால் அதை நிறைவேற்றுவோம்! சுயமரியாதையும் - சமத்துவமும் - பகுத்தறிவுமிக்க சமூகமாக, நம்முடைய தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்டும்; சமூகநீதி நிலைபெற வேண்டும்; ஒடுக்கப்பட்டோரின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்; எல்லோருக்குமான ஆட்சி அமைய வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் கனவு கண்டார்கள்! அதனால்தான் இன்றைக்கு நாம், எந்த ஆதிக்கத்திற்கும் தலைகுனியாமல் - வெல்வோம் ஒன்றாக என்று மண், மொழி, மானம் காக்க, நிமிர்ந்து நிற்கிறோம்! நாடே திரும்பி பார்க்கும் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறோம்! 

இப்போது நாம் அடுத்தகட்ட கனவை காணவேண்டிய நேரம்! உறுதியாக சொல்கிறேன் - உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றுவேன்! உங்கள் கோரிக்கைகளை நான் திட்டங்களாக உருவாக்கித் தருவேன். உங்கள் எண்ணங்களுக்கு நான் உருவம் கொடுப்பேன். நம்முடைய தமிழ்நாட்டை, தலைசிறந்த மாநிலமாக உயர்த்துவேன்! இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 2026 தேர்தலுக்கு தரக்கூடிய வாக்குறுதி! நம்முடைய கனவு நனவாகும்! தமிழ்நாடு வெல்லும்!  வெல்லும்! வெல்லும்!" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க..’ : உங்கள் எதிர்கால கனவுகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!