Tamilnadu
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 56.36 கோடி ரூபாய் மதிப்பில் தமிழர்களின் வாழ்வியலை உலகறியச் செய்யும் வகையில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பொருநை நதிக்கரைகளில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற டிச.21- ஆம் நாள் திறந்து வைக்கிறார். இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிச.15) பொருநை அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, இந்த ஆட்சியின் பெயர்
‘திராவிட மாடல் ஆட்சி’ என்று அறிவித்தார். இதன் நோக்கம் ‘எல்லாருக்கும் எல்லாம்’ கிடைக்க வேண்டும் எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இந்த இலக்கைக் கொண்டுதான் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில், பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் ‘பொருநை’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க ஒரு அற்புதமான இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார்.
இந்த அருங்காட்சியகத்திற்கு 18.05.2022 அன்று முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக முதலமைச்சர் அவர்கள் ரூ.56.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். வருவாய்த்துறை மூலமாக 13.2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறையின் மூலம் மொத்தம் ஏழு கட்டடத் தொகுதிகளாக நிர்வாகக் கட்டடம், சிவகளை கட்டடம், கொற்கை கட்டடம் ஏ மற்றும் பி, ஆதிச்சநல்லூர் கட்டடம் ஏ மற்றும் பி, சுகாதார வசதிக் கட்டடம் என பிரிக்கப்பட்டு, கட்டடப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மலையை ஒட்டி இருக்கும் இந்த இடம் இயற்கையாகவே அழகானது. தோட்டக்கலை வல்லுநர்கள் கொண்டு லான் (Lawn) அமைக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தின் உள்ளே, தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துதல் பணி நடந்து வருகிறது.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைவிட இது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கொற்கையில் முத்துக் குளித்தலையும், அதன் அபாயங்களையும், முத்துக்கள் எப்படி ரோமாபுரி போன்ற நாடுகளுக்குச் சென்றன என்பதையும் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல திரைக்காட்சியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இந்தியாவில் உள்ள மும்பைக்கு அருகிலுள்ள ஆய்வகங்களில் ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதிகளில் இரும்புப் பயன்பாட்டின் காலம் 5,300 ஆண்டுகள் பழமையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆய்வகங்களின் முடிவுகளும் ஒரே நேரத்தில் வந்திருப்பது தமிழர்களின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது. இரும்பு பயன்பாடு இருந்ததை ஆதிச்சநல்லூர் அகழாய்வு உறுதி செய்துள்ளது.
பொருநை அருங்காட்சியகப் பணிகளை பொறுத்தவரை 97% முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
டிச.21ஆம் நாள் ‘பொருநை’ அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.”
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!