Tamilnadu

டிட்வா புயல் : அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2025) சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, டித்வா புயல் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் தற்சமயம் இலங்கையின் மேல் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையிலே நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை (29.11.2025) மற்றும் நாளை மறுதினம் (30.11.2025) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டில் கடுமையான மழைபொழிவு ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மாநில பேரிடர் மீட்பு படையின் 16 அணிகளும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 அணிகளும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பேரிடர் சூழலை திறம்பட கையாளுவதற்காக, கூடுதலான தேசிய பேரிடர் மீட்பு படையை அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வருமாறும், தேவை ஏற்படின் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகிய மத்திய படைகளை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தொலைதொடர்பு நிறுவனங்களுடனும், எண்ணெய் நிறுவனங்களுடனும் ஆயத்த நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் தலைமையில் நேற்று (27.11.2025) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரக கால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக டித்வா புயல் காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள், அனைத்து துறையினரும் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் அறிவுறுத்தினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களை சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து முகாமிட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

அத்துடன், முகாம்களில் மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனறும், குடியிருப்பு பகுதியில் வெள்ளநீரை அகற்றிட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், புயல் காற்றினால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதனை சீர்செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Also Read: ”கலையையும் கலைஞர்களையும் போற்ற வேண்டியது அரசினுடைய கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!