Tamilnadu

புறநகர் ரயில்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டால் நடவடிக்கை - தெற்கு ரயில்வே எச்சரிக்கை !

சென்னை புறநகர் ரயில்களில் இளைஞர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தது தொடர்பான விடீயோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது நிலையில், அப்படி பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில் சேவைகளில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது.

சமீப காலங்களில், ஓடும் ரயில்களில் நடைமேடையில் சறுக்குவது (skating-style stunts), ரயிலில் இருந்து இறங்கி சாகசம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் இவற்றை சமூக வலைதளங்களுக்காக மொபைலில் வீடியோ பதிவு செய்வது போன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன.

இச்செயல்கள் சம்மந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய பொறுப்பற்ற நடத்தை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதுடன், அவர்களின் கல்வி நிறுவனங்களுக்கு அவப்பெயரையும், பெற்றோருக்கு மிகுந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படிக்கட்டு பயணம், சாகசங்கள் அல்லது பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான தண்டனை வழங்கப்படும்.

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, உயிருக்கு ஆபத்தான சாகசங்களை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்... எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் சொன்னது என்ன?