Tamilnadu

மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய அரசு : மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது.

கடந்த 10 மாதங்களாக இந்த திட்ட அறிக்கைகள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஒன்றிய அரசு தற்போது, மக்கள் தொகையை காரணம் கூறி இந்த 2 திட்டங்களையும் நிராகரித்து திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நகரின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு, கோவையின் மக்கள் தொகை 15.8 லட்சமும் மதுரை மக்கள் தொகை 10 புள்ளி 2 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இதே அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் குஜராத்தில் சூரத் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு மதுரை, கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோவை- மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதில்,தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் - மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும் - 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு - முதலமைச்சர் கண்டனம் !