Tamilnadu

தொடர் அவலம்... SIR புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்த வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கள்.. குவியும் ஆதரவு!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக அரசின் ஆதரவோடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) மேற்கொண்டு வருகிறது இந்திய தேர்தல் ஆணையம். பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR காரணமாக பல லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதோடு தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் SIR பணியின் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் தற்போது நாடு முழுவதும் வலுத்துள்ளது.

இந்த சூழலில் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளது. இதன் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) பணிச்சுமை அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த சூழலில் இதுவரை கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் 3 BLO-க்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனால் தற்போது ஆங்காங்கே BLO அதிகாரிகள் பணிச்சுமை குறைக்கும் விதமாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கள் ஒருங்கிணைந்து, இன்று (18.11.2025) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது

வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பளித்து வரும் நிலையில், SIR புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து CPI வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கால அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து, நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கள் ஒருங்கிணைந்து, இன்று (18.11.2025) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தப் புறக்கணிப்பு இயக்கத்தில் கிராம உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர்கள் வரை பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 29.10.2025 ஆம் தேதி தலைமைத் தேர்தல் அலுவலர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையம் போதுமான கால அவகாசமும், முன் ஏற்பாடுகளும், பயிற்சியும் இல்லாமல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது; வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்த பிறகு, சிறப்புத் தீவிர திருத்த முறை நடவடிக்கையை தொடங்கலாம் என்பதை பெரும்பாலான கட்சிகள், கலந்து கொண்ட 12 கட்சிகளில் 10 அரசியல் கட்சிகள் வலியுறுத்தின என்பதை நினைவூட்டுகிறோம்.

ஆனால், தேர்தல் ஆணையம் பிடிவாதமாக தனது நடவடிக்கையை தொடங்கியது. அது நடைமுறையில் நெருக்கடிகளை அதிகரித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரை போராட்டக் களத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறையை கைவிட்டு, வழக்கமான சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையத்தை கேட்டுக் கொள்கிறது.

Also Read: திராவிட மாடல் ஆட்சியில் SC, ST சமூக மக்களுக்கான சிறப்பு திட்டங்கள்.. பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு