Tamilnadu

“முதலில் அன்புமணி இதனை தெரிந்துகொள்ள வேண்டும்...” - அவதூறுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 233 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :-

மருத்துவத் துறையில் மக்களைத் தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின், இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம், சிறுநீரகம் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மேம்மோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் (Semi -Auto Analyser) உட்பட பல வசதிகளுடன் 1.10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் ஊர்தி தயாராகி உள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பார்வையிட்டார். இன்று முதல் காஞ்சிபுரத்தில் இந்த வாகனம் தனது சேவையை துவங்க இருக்கிறது. தொடர்ந்து பல மாவட்டங்களில் பெண்களின் நலன் பேணும் இந்த ஊர்தி கொண்டு வரப்பட உள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 233 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை வரலாற்றில் 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கு மேல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முறை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி புதிய மருத்துவமனைகள், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் மருத்துவத்துறையில் 35,469 பணியிடங்கள் தரப்பட்டுள்ளது; 45 ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிப்படையான பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. காலிப்பணியிடங்களே இல்லாத துறையாக மருத்துவத்துறை வரவுள்ளது.

தமிழ்நாட்டில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என அன்புமணி அவர்களின் குற்றச்சாட்டு, உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவப் பணி இடங்கள் இருக்கிறது என்பதை மருத்துவர் அன்புமணி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

4 வருட திராவிட மாடல் ஆட்சியில் 35 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 50 சதவீதம் பணியிடங்களாவது நிரப்பப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பணியிடங்கள் எல்லாம் நிரப்பப்படுகின்றதா என்பதை தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டும்.

மழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகள்தான் உள்ளதே, தவிர வேறு பாதிப்புகள் தமிழகத்தில் இல்லை. அதனால் பதற்றப்படத் தேவை இல்லை. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவமனைகள் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

Also Read: நெல்லையில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைதா?: “இது எல்லாம் ஒரு நடிகரால்தான்” - அவரே சொன்ன விளக்கம்!