Tamilnadu

திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை  திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10,000/- மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5,000/- ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார். 

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், சமூக நோக்கத்தோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.  அந்த வகையில், திருக்கோயில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள், மனநலக் காப்பகம், மருத்துவ மையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

திருக்கோயில்கள் சார்பில் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், 6 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், 2 வேத ஆகம பாடசாலைகள், ஒரு திவ்ய பிரபந்த பாடசாலை என 18 பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்துடன் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2022 ஆம் ஆண்டுவரை முழுநேரமாக பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000/-மும், பகுதிநேரமாக பயிலும் மாணவர்களுக்கு  ரூ.500/-மும்  வழங்கப்பட்டு வந்தது.  2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, முழுநேரம் மற்றும் பகுதிநேரம் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை முறையே ரூ.3,000/- மற்றும் ரூ.1,500/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.  

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி திட்டத்தை கொண்டுவந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 24.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை முறையே ரூ.4,000/- மற்றும் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கினார்.    

2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், “அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2022-ஆம் ஆண்டு வரை ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது.

2023-ஆம் ஆண்டு முதல் ரூ.3,000/-ஆகவும், 2024 ஆண்டு முதல் ரூ.4,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2023-ஆம் ஆண்டு முதல் ரூ.1,500/- ஆக வழங்கப்பட்டு வந்ததை,  2024-ஆம் ஆண்டு முதல் ரூ.2,000/-ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்” என  அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10,000/- மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5,000/- க்கான வங்கி வரைவோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.  

இதன்மூலம் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்கள், பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்கள் என மொத்தம் 363 மாணவர்கள் பயன்பெறுவர். 

Also Read: வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!