Tamilnadu

“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (28.10.2025) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையினையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சியில் குறிப்பாக மண்டலம் 10, 11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் 42 மாநகராட்சி வார்டுகள் இருக்கின்றது. இந்த வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறிப்பாக சேவை துறைகளை ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை, ஊரகவளர்ச்சித்துறை மற்றும் பல சேவை துறைகளின் உயரலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது.

அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், தேசிய நெடுஞ்சாலைத்துறை போன்ற ஒன்றிய, மாநில சேவை துறைகளை ஒருங்கிணைத்து கூட்டம் தற்போது நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 42 மாநகராட்சி வார்டுகளில் இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகள், வடகிழக்கு பருவமழை எப்படி எதிர்கொள்வது குறித்தான கருத்துக்களும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது வரை 26.78 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் அடையாற்றங்கரையோரம் வழியாக கடலில் தடையின்றி கலப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு வார காலமாக ஆய்வு மேற்கொண்டு மிகப் பெரிய அளவில் தீர்வு காணப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் படிப்படியாக திறந்து விடப்பட்டு தற்போது 750 கன அடி அளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு அந்த உபரி நீர் மற்றும் மழைநீரும் சேர்த்து 1,550 கனஅடி அளவில் உபரிநீர் கடலில் கலந்து வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக அடையாறு முகத்துவாரத்தை ஆய்வு செய்து ஒட்டுமொத்தமாக 40,000 கன அடி உபரிநீர் சேர்ந்து வந்தாலும் கடலில் கலப்பதற்கு ஏதுவாக முகத்துவாரத்தை தற்போது 150 மீ அளவிற்கு தூர்வாரி ஆழப்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது 25க்கும் மேற்பட்ட JCB இயந்திரங்கள் மூலம் கூடுதலாக 250மீ அளவிற்கு அகலப்படுத்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

மோந்தா புயல் காரணமாக சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 14.67 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகலிவாக்கம் பகுதியில் 8.80 மி.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது. சென்னையில் சராசரியாக 6 செ.மீ அளவிற்கு மழை பெய்திருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி 215 இடங்களில் நிவாரண மையங்கள் அமைத்து 110 இடங்களில் உணவு தயாரிக்கும் பணிகள் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 181 ஜெட்ராடிங் வாகனங்கள் 45 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சு வாகனங்கள் என்று 711 கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் களப்பணியில் இருந்துக் கொண்டிருக்கிறது.

பெருநகர குடிநீர் வாரியத்தில் மட்டும் 2,149 களப்பணியாளர்கள் களப்பணியில் இருந்து வருகிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடந்த 17.10.2025 முதல் 27.10.2025 வரை 701 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 29,686 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் 100 hp மோட்டார் பம்புகள் 160 எண்ணிக்கையில் மழைநீர் வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் இருந்து வருகிறது. 1,496 சாதாரண மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. இந்த 3 மண்டலங்களில் மட்டும் 21 இடங்களில் உணவு தயாரிக்கும் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரண முகாம்கள் 215 எண்ணிக்கையில் இருந்தாலும் இந்த 3 மண்டலங்களில் 42 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருந்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றைக்கு அனைத்து பணிகளும் மிகச் சிறப்பாக தயார் நிலையில் இருந்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 5,38,100 நபர்களுக்கு காலை, மாலை என்று உணவு வழங்கியிருக்கிறார்கள்.

யாருக்கெல்லாம் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறதோ அவர்கள் அனைவரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் முகாம்கள் மூலம் பயன் அடையலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

Also Read: பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!