Tamilnadu
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.10.2025) தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் பிற மாவட்டங்களுக்கு சரக்கு இரயில் பெட்டிகள் மூலமாக நெல் மூட்டைகள் அனுப்பும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
வடகிழக்கு பருவமழை சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாகவே சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில், முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் ஆய்வு செய்து வருகின்றோம்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நம்முடைய தஞ்சாவூர் மாட்டத்திற்கு வருகை தந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இரயில் மூலமாக அனுப்புகின்ற அந்த பணிகளை இன்றைக்கு நானும், அமைச்சர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆய்வு செய்ய வந்திருக்கின்றோம்.
தஞ்சாவூரில் இருந்து ஒரு நாளைக்கு மட்டும் 4 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இரயில் மூலமாக பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அதுபோல கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொண்டு செல்லப்படுகின்றது. எனவே, இதை பத்திரிக்கை நண்பர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நம்முடைய அரசு விவசாயிகளுக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் என்றைக்கும் துணை நிற்கின்ற அரசாக நம்முடைய முதலமைச்சர் அவர்களும், அரசும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நேற்றைக்கு இங்கே வருகை தந்த நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல தவறான குற்றச்சாட்டுகளை பத்திரிக்கையாளர்களுக்கு சொல்லியிருக்கிறார். குறிப்பாக இந்த நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி முழுக்க, முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர் இங்கே உங்களிடத்திலே சொல்லியிருக்கின்றார்.
திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து செல்லாததால், அங்கு புதிய நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி அவர்கள் இங்கே சொல்லியிருக்கின்றார்.
வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில், பொதுவாகவே அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், நம்முடைய ஆட்சியில் சென்ற வருடத்தில் இருந்து டெல்டா விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1 ஆம் தேதி, அதாவது ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த நெல் கொள்முதல் நிலையங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திறக்க உத்தரவிட்டார்கள்.
அதன்படி சென்ற செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து நேற்றுவரை, அதாவது 50 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் நம்முடைய அரசு எடுத்த முயற்சியால் வரலாற்றிலே இல்லாத அளவிற்கு குறுவை சாகுபடி காலத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களில் சுமார் 10 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 8 இலட்சம் மெட்ரிக் டன் அதாவது 81 சதவீதம் நெல் மூட்டைகள் குடோனுக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 இலட்சத்து 93,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு செல்கின்ற பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திலிருந்து 10 நாட்களுக்குள் அந்த பணிகளும் நிறைவடையும்.
குறிப்பாக டெல்டாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்னும் சுமார் 2 இலட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை வைக்கும் அளவிற்கு இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடவசதி இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சொன்ன குற்றச்சாட்டு தவறான ஒரு குற்றச்சாட்டு. அதை இந்த நேரத்தில் நான் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
அதேபோல நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான அளவே நெல் எடை போடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டை நேற்றைக்கு அவர் உண்மைக்கு புறம்பான ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கின்றார்.
இந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு குறுவை சாகுபடி காலத்தில் மொத்தமாகவே 200 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் இந்த 50 நாட்களில் மட்டும் 300 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நம்முடைய அரசு அனைத்து பணிகளையும் செய்திருக்கின்றது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள தென்னமநாடு, ஒக்கநாடு, கீழையூர் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 3,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல் ஒரத்தநாடு புதூர், திருவையாறு விளாங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று ஒரு லோட்மேன் அவரிடத்தில் கூறினார் என்று எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தவறான ஒரு குற்றச்சாட்டை நேற்று தெரிவித்திருக்கிறார். ஏதாவது ஒரு குறிப்பிட்ட சென்டரில் ஏதாவது ஒரு நாளில் 800 மூட்டைகள் லோடு செய்திருந்தால், தமிழ்நாடு முழுக்க ஒரு நாளைக்கு 800 மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அர்த்தம் கிடையாது. அடுத்தநாளே அதே இடத்தில் கிட்டத்தட்ட 1000 மூட்டைகள் கூட வரும். கூடுதலாக வந்தாலும் கூடுதல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் நம்முடைய அரசு செய்து கொடுத்திருக்கின்றது.
நெல் கொள்முதல் நிலையங்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், அதிகமான விற்பனை முனையம் இங்கே உள்ளதாலும், நெல் கொள்முதல் என்பது பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று விவசாயிகள் இதுவரைக்கும் யாரும் எந்த புகார்களும் அளிக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் மட்டும்தான் அந்த பொய் புகார்களை தொடர்ந்து கூறிவருகின்றார். நெல்லை எடுத்து செல்ல போதிய லாரிகள் இல்லை என்றும் ஒரு புகார் சொல்லியிருக்கிறார். காட்டூர் நெல் கொள்முதல் நிலையம் சென்ற செப்டம்பர் மாதம் 18ந் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்வரை இந்த நிலையத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 16 ஆயிரம் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அதே போல இங்கே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டது என்று ஒரு நாடகத்தையும் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரும் இங்கே போடப்பட்ட நெல் மூட்டைகள் முளைத்துவிட்டதாக ஒரு பெண்மணி கூறினார் என்று தெரிவித்திருக்கின்றார். உடனே மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் முதலமைச்சர் அவர்களும், நானும் தொடர்பு கொண்டு பேசி அதை என்ன என்று ஆராய சொன்னோம். ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட பெண்மணியின் ஊரான வரவுக்கோட்டைக்கு அதிகாரிகளை அனுப்பி உடனே ஆய்வுகளை நடத்தினார்.
அந்த ஆய்வில் அந்த அம்மையார் 5 ஏக்கர் குத்தகை நிலத்தில் நடவுசெய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது வயலில் நேற்று மதியம் வரை எந்த அறுவடையும் இதுவரை நடைபெறவில்லை. அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து அவர் எப்படி நெல் மூட்டைகளை கொண்டு வந்தார் என்று அவருக்குதான் வெளிச்சம். எனவே எப்படி முளைத்தது என்று அவருக்குதான் வெளிச்சம்.
ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் கூறிய புகார்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்னொரு குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் சொல்லியிருக்கின்றார். ரேசன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், நம்முடைய அரசு அந்த அரிசியை வழங்கவில்லை என்று ஒரு புகாரை சொல்லியிருக்கின்றார்.
செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க ஒன்றிய அரசு கடந்த ஜீலை மாதம் இறுதியில் தான் ஒரு வழிகாட்டுதல் குழுவை நமக்கு வழங்கியது. வழிகாட்டுதல் வேறு ஒப்புதல் வேறு என்பதை எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வழிகாட்டுதலின்படி செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஒப்பந்ததாரர்களுடைய செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரியின் தரப்பரிசோதனை விவரங்களை ஒன்றிய அரசுக்கு நம்முடைய தமிழக அரசு அனுப்பியிருக்கின்றது.
ஆனால் இன்று வரை அதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை. ஏற்கனவே ஈரப்பதத்தை 17 சதவீதத்திலுருந்து விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற அந்த கோரிக்கையை நாம் வைத்திருக்கின்றோம். அதை சரிபார்ப்பதற்காக இன்றைக்கு தான் ஒன்றிய அரசு மூன்று பேர் கொண்டு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. எனவே இதையெல்லாம் மறைக்க வேண்டும் என்று பாஜக அரசை எப்படியாவது காப்பற்றவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இந்த புகார்களை எல்லாம் தெரிவித்து வருகின்றார்.
டெல்டாவில் ஆண்டுக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்ற குறுவை சாகுபடி நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு இன்றைக்கு 6 இலட்சத்து 13 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு குறுவை சாகுபடி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இரண்டரை இலட்சம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வேளாண்துறைக்கு என்று ஒரு தனி பட்ஜட், நெல்லுக்கான ஊக்கத் தொகையும் சரியான நேரத்தில் உயர்த்தி வழங்கியது என நம்முடைய அரசு பல்வேறு திட்டங்களை தந்ததினால் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய மொத்த உற்பத்தியில் 6 சதவீத பங்களிப்பை வேளாண் துறை மட்டும் தந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, இந்த வளர்ச்சியெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றார். அதை மக்களோ, விவசாயிகளோ நம்புவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இல்லை. பொய்யை விதைத்து விவசாயிகளுடைய வாக்குகளையெல்லாம் அறுவடை செய்யலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் திட்டமிடுகின்றார். அவருடைய எண்ணம் நம்முடைய தஞ்சை மண்ணில் ஒரு போதும் நடக்காது.
ஏனென்றால் இங்கே நடப்பது நம்முடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற டெல்டாக்காரருடைய அரசு என்பதை இங்கே இருக்கக்கூடிய மக்கள் நன்கு அறிவார்கள். எனவே நம்முடைய அரசு என்றைக்கும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் என்று கூறிக் கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!