Tamilnadu
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள "மின்னகம் - மின்நுகர்வோர் சேவை மையம்" மற்றும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதலாவதாக, சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மைலாப்பூர் பண்டகசாலையில் தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் அவர்களின்வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரை
மொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளன. தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் 58,264 இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பழைய மின் பாதை கம்பிகள் 1,243 கி. மீ அளவிற்கு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. துணை மின் நிலையத்தில் 2464 முறை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை 2,303 பில்லர் பாக்ஸ்கள் தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 9,544 பில்லர் பெட்டிகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக ஆபத்தான நிலையில் பூமிக்கு வெளியில் புதைவட கம்பி இணைப்புகள் சுமார் 3,418 எண்ணிக்கை சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார். அதன் விவரம் :
ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கும் செயற்பொறியாளர்/பொது அவர்கள் சிறப்பு அலுவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் தலைமையின் கீழ், அந்த மின் பகிர்மான வட்டத்தில் கோட்ட அளவில் 15 பேர் அடங்கிய இரண்டு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், தமிழ்நாடு அளவில், அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட 5580 பேர் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். மேலும், மிக உயர் அழுத்தப்பாதைகள் மற்றும் மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய 79 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள்,திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
துணை மின் நிலையங்களில் டீசல் ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
காற்றுடன் கூடிய மழையின் போது மிகத் தாழ்வான நிலையில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம்கொண்டும் OFF செய்து வைக்கக்கூடாது, இதனை மீறுபவர் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், பொதுமக்களுக்கான பொதுவான பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கினார்.
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாநிலம் முழுவதும் மின்சார வாரியம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின் சேவை தடைகள் ஏற்படாதவாறு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பணியாளர்களும் பாதுகாப்புடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !