Tamilnadu

“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபோது, குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சில உரைப் பகுதிகள்:-

எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

‘ஊரிலே கல்யாணம் என்றால், மார்பிலே சந்தனம்’ என்று சொல்வார்கள். இது அதுபோன்று இருக்கிறது. அதாவது கூட்டணிக் கட்சிக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். தேடிக்கொண்டிருப்பதன் விளைவுதான் இது. அந்த அடிப்படையில்தான் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இதை அரசியலாக்க வேண்டாம்; இதை அரசியலாக்க நான் விரும்பவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். ஆனால், ஏதோ உள்நோக்கம் இருக்கிறது, சந்தேகம் இருக்கிறது என்று தேவையில்லாமல் பதிவு செய்கிறார். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் அவர்களே, கரூரைப் பொறுத்தவரை பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு தகுதியான இடத்தைத் தேர்வு செய்வதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்திருக்கிறது. கரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 24-3-2025 அன்று நடைபெற்றிருக்கிறது. அதில் அ.தி.மு.க. உள்ளிட்ட அந்த மாவட்டத்தினுடைய நிர்வாகிகள் கலந்துகொண்டு, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். எந்தெந்த இடத்தைக் கொடுக்க வேண்டும், எந்தெந்த இடத்தை கொடுக்கக் கூடாது என்று, தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, வேறு எதுவும் இல்லை. முதலில், இதை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, இங்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது, ஒரு நபர் ஆணையம் அமைத்ததற்கு பின்பு, ஏன் அதிகாரிகள் பேட்டிக் கொடுத்தனர் என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் இதே திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் அமைத்ததற்கு பிறகு, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே செய்தித்தாள்களில் பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள்; பேசியும் இருக்கிறார்கள்.

அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது Unavoidable எனப் பேசியிருக்கிறார்கள். ஆகையினால், அதிகாரிகள் பேட்டிக் கொடுத்தது என்பது தவறல்ல. அதுமட்டுமல்ல; இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.-வைப் பொறுத்தவரைக்கும், திட்டமிட்டு எப்படியாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும். வெளிநடப்பு செய்ய வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இப்படி ஏதாவது ஒரு சூழ்நிலையை இங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். இது அவர்கள் பேசிய பேச்சிலிருந்தே தெரியும். அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் யாராவது பாதிக்கப்பட்டாலும்கூட இப்படி ஒரு போர்க் குரல் வந்திருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆனால், இன்றைக்கு இப்படி குரல் வந்ததற்குக் காரணமே, கூட்டணி இன்னும் சரியாக அமையவில்லை. மெகா கூட்டணி; மகா கூட்டணி என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி கூட்டணி அமைப்பதற்கான முயற்சிதான் இது. என்னதான் கூட்டணி அமைத்தாலும், அது அமையப்போவதில்லை. அப்படியே அமைத்தாலும், மக்கள் இவர்களுக்கு சரியாக பாடத்தை புகட்டுவார்கள் என்பதுதான் உண்மை.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசியபோது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகள்:-

பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர் கு. செல்வபெருந்தகை அவர்கள் பேசுகிறபோது, உச்ச நீதிமன்றம் அமைத்திருக்கக்கூடிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கண்காணிப்பு குழுவிலே தமிழ்நாட்டைச் சார்ந்திருக்கக்கூடிய ஐ.பி.எஸ் அதிகாரி இடம்பெறுவது குறித்து தெரிவித்திருக்கக்கூடிய கருத்துக்களை பற்றி இங்கே பேசியிருக்கிறார். இன்னும் சொன்னால், தமிழ்நாட்டு மக்களுக்கே இது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று மாண்பமை உச்ச நீதிமன்றத்தை நிச்சயமாக இந்த அரசு அணுகும், அணுகும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் கு. செல்வபெருந்தகை அவர்கள் காவல் துறை சிறப்பாக பணியாற்றியது குறித்து இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் ஒன்றை விட்டுவிட்டார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசுகிறபோது, காவல் துறை பாதுகாப்பு சரியாக கொடுக்கவில்லை என்று காவல் துறையை குறை சொல்லி பேசியிருக்கிறார். ஆனால், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தினுடைய தலைவர் பேச்சை தொடங்குவதற்கு முன்பே, பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே காவல் துறைக்கு முதலில் எனது 'Salute' என்று அடித்துவிட்டு, சரியான பாதுகாப்பு தந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுத்தான் பேசினார் என்பதையும் நான் இந்த அவையிலே பதிவு செய்கிறேன்.

உறுப்பினர் lathi charge பற்றி சொன்னார்கள். அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதை நான் அழுத்தத்திருத்தமாக சொல்லமுடியும்.

பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, செருப்பு வீச்சைப் பற்றிச் சொல்கிறார். நானும் டிவி-யில் பார்த்தேன். நிச்சயமாக திட்டமிட்டு யாரும் செய்ததில்லை. அங்கு தண்ணீர் வேண்டும். வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் செய்யப்பட்டது என்று நான் கருதுகிறேன். எது எப்படி இருந்தாலும் நீங்கள் சொன்ன கருத்தின்படி CBI விசாரணை வந்துள்ளது. அதில் எல்லா உண்மைகளும் வெளிவரப் போகிறது. அப்பொழுது தெரியும். இப்பொழுதே இதைப்பேசி நீங்கள் இதை திசை திருப்புவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டாமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, எந்தவித ஆதாரமும் இல்லாமல் காவல் துறைமீது தேவையற்ற முறையில், அபாண்டம் சுமத்துகிற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இது அவைக்குறிப்பில் பதிவு செய்வது பொருத்தமாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என்னிடத்தில் சொன்னால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கரூர் பிரச்சினையை எழுப்பி, பின்னர் நான் அதுகுறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளேன்.

கரூர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 28 உறுப்பினர்கள் பேரவை விதி 56-ன் கீழும், ஏனைய கட்சி உறுப்பினர்கள் அ.இ.அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் சிலர் உட்பட மொத்தம் 34 உறுப்பினர்கள் பேரவை விதி 55-ன்கீழ் அறிவிப்பு கொடுத்துள்ளதாக தாங்கள் இங்கே சொன்னீர்கள்.

கரூரில் நடைபெற்ற இந்த அசம்பாவிதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் இங்கே பல்வேறு கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளை அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நெடுநேரம் பேசிவிட்டு, இங்கே பேரவை முன்னவர் அவர்கள் தெரிவித்ததுபோல, இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் குற்றச்சாட்டுகள் சொல்ல இயலாத காரணத்தால் அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்து வெளியில் சென்றிருக்கிறார்கள்.

மேலும், கு.செல்வபெருந்தகை, ஜி.கே.மணி, நயினார் நாகேந்திரன், S.S. பாலாஜி, வி.பி. நாகைமாலி, இராமச்சந்திரன், மு. பூமிநாதன், ஈ.ஆர். ஈஸ்வரன், தி. வேல்முருகன், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அந்த நடவடிக்கைகளை வரவேற்றும், செம்மையாக தங்களுடைய கருத்துகளை இங்கே தெரிவித்திருக்கிறார்கள்.

நிச்சயமாக, அனைத்து உறுப்பினர்களும் இங்கே வழங்கியிருக்கக்கூடிய ஆக்கபூர்வமான கருத்துகளை அரசு கவனத்திலே கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியோடு தெரிவித்து அமைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: “பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!