Tamilnadu

கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

தீபாவளி போன்ற விழாக்காளங்களில் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கண்காணிக்க போக்குவரத்து துறை இணை ஆணையர், அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தீபாவளிக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறை அலுவலர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்று அதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், தனியார் பேருந்துகள் இந்த ஆண்டும் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்கும் அரசு பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக எடுத்து இயக்க வேண்டிய தேவை இருக்காது. கட்டண உயர்வு இல்லாமல் பார்த்துக் கொள்வதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் 10 பேருந்துகள் இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லை என்றார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் புதியதாக பேருந்துகள் வருகின்றன. இந்த புதிய பேருந்துகள் ஆன்லைன் மூலம் இது போன்ற டிக்கெட் அதிக அளவில் வைத்து விற்பனை செய்கின்றார்கள். கண்டிப்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை கண்காணிக்க போக்குவரத்து துறை இணை ஆணையர் அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைத்து ஆய்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாடு சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறப்பு! - முழு விவரம் உள்ளே!