Tamilnadu

“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!

2025-26ஆம் ஆண்டு குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் சாகுபடி குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துவருகிறது.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்களின் பொருளாதாரம் மேம்படவும் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கவும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு மானியங்கள் வழங்குவதுடன், சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகள் தங்குதடையின்றி உரிய காலத்தில் கிடைத்திடவும் உறுதி செய்கிறது.

இதன் அடிப்படையில், நெல் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொண்டு, உற்பத்தியை அதிகரித்திட, ஒவ்வொரு ஆண்டும் குறுவை சிறப்புத்தொகுப்புத்திட்டம் செயல்படுத்தியது போன்றே நடப்பு ஆண்டிலும் ”குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்” 82 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ்நாட்டில் முதன்முறையாக கார்/ குறுவை/சொர்ணவாரி பருவத்திற்கான ”சிறப்புத் தொகுப்புத் திட்டம்” 132 கோடியே 17 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ள மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டது.

இவ்வாறு தமிழ்நாடு எடுத்த சீரிய நடவடிக்கைகளால் முன் எப்போதும் இல்லாத வகையில் 2025ஆம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டை விட 2.25 இலட்சம் ஏக்கர் அதிகமாகும்.

இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் வரத்து மிகஅதிகமாக உயரும் என்பதால் 02.10.2025 அன்று நெல் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்கள்.

தற்போது, டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெறுவதால், சம்பா நெற்பயிர் சாகுபடி அடுத்த பத்து தினங்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள்வரை, சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி 2.64 இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே வேளையில் 5.50 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு, குறுவை பருவத்தில் அதிகப்பரப்பில் நெல்சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாலும், சாதகமான சூழ்நிலை நிலவியதால் இயல்பாக சம்பா பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், குறுவை சாகுபடி மேற்கொண்டதாலும், தற்போதுவரை குறுவை நெல் அறுவடை 52 சதவீதம் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை இருப்பதாலும் சம்பா நெல் சாகுபடி தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பான 6.13 இலட்சம் ஏக்கரில் 80 சதவீத பரப்பில் அதாவது சுமார் 5 இலட்சம் ஏக்கரில் தாளடி பருவ நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது 5,438 ஏக்கரில் நெல் நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளதாலும், மேட்டூர் அணையில் பாசனத்திற்கு போதிய நீர் இருப்பு (83.14 டி.எம்.சி) உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்துவருவதாலும், மத்திய மற்றும் நீண்டகால நெல் இரக விதைகள், போதுமான அளவில் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளதாலும், சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி இயல்பு பரப்பான 13 இலட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் அனைவரும் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறும், விதை தேவைக்கு அருகாமையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Also Read: “முஸ்லீம்-குலாம் சிகிச்சை பார்க்க முடியாது..” -கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த உ.பி அரசு மருத்துவர்!