Tamilnadu
”மனித உயிர்களே, எல்லாவற்றிற்கும் மேலானது - வதந்திகளை பரப்ப வேண்டாம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.9.2025) கரூர் சம்பவம் தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஆற்றிய காணொலி உரை:-
கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம்! இதுவரை நடக்காத துயரம்; இனி, நடக்ககூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலேயும் துயரத்திலேயும் தான் இன்னும் இருக்கிறேன்.
செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை; உடனே அன்றைக்கு இரவே கரூருக்குப் போனேன்.
குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்தவர்களது குடும்பத்திற்கு, தலா பத்து லட்சம் ரூபாய் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி கொண்டு இருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவத்துக்கான முழுமையான - உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பரப்புகின்ற வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்.
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் -அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவர்கள் நம்முடைய தமிழ் உறவுகள்!
எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது, இனிவரும் காலங்களில், எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது, நம் எல்லோருடைய கடமை!
எனவே, நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி – இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்.
மனித உயிர்களே, எல்லாவற்றிற்கும் மேலானது! மானுடப் பற்றே அனைவர்க்கும் வேண்டியது! அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லோரும், மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு எப்போதுமே நாட்டிற்கு பலவகைகளிலே முன்னோடியாக தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலேயும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!