Tamilnadu
“கல்வியில் மட்டுமல்ல வேளாண்மையிலும் சிறந்த தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில்
வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற
”வேளாண் வணிகத் திருவிழா- 2025” விழாவில்
வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் சார்புத்துறைகளின் கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “நேற்று முன்தினம் நடைபெற்ற, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது என்பதை நீங்கள் எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதனை இன்றுவரையில் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற தமிழ்நாட்டை, தொடர்ந்து நாம் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு சாட்சியாக, அப்படி, இன்று இந்த விழா “வேளாண்மையில் சிறந்த தமிழ்நாடு” என்று சொல்லும்படியான விழாவாக அமைந்திருக்கிறது!
இந்த விழாவை மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து, உங்கள் எல்லோரையும் சந்திக்கின்ற வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய இந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்!
வேளாண் விளைபொருட்களை, நேரடியாக சந்தைப்படுத்திட, இந்தக் கண்காட்சியும், கருத்தரங்குகளும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது! இந்த முன்னெடுப்பு, விவசாயிகளுக்கு புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய தளமாக இது அமைந்திருக்கிறது! இதனால், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் உருவாகுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு இன்னும் அதிகளவில் ஏற்படும். வேளாண் வணிகம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளால், விவசாயிகளின் வணிகத் திறன் மேம்படும்.
நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, வேளாண்மைத் துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றி, நம்முடைய அரசின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் அறிவித்தோம்! அப்படித்தான், நம்முடைய அரசின் ஒவ்வொரு திட்டங்கள் மூலமாகவும், வேளாண்மையும் அதிகரிக்க வேண்டும்; உழவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படவேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்!
உழவர்களின் கருத்துக்களை விருப்பத்தை கேட்டு, செயல்படும் அரசாக இருந்து கொண்டிருக்கிறோம்! தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில், திட்டங்களை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்தோம்! அதன் பலனாக இப்போது, வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருகிறது.
முன்பெல்லாம், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறப்பதற்கு எப்படி லேட் ஆகும் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மேட்டூர் அணையை குறித்த நாளில் திறந்து கொண்டிருக்கிறோம்!
இந்த ஆண்டு, 5.66 இலட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது! இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 494 ஏக்கர் கூடுதல் நெல் சாகுபடி! இதற்கு தேவையான உரங்களை, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்! இப்படி, தமிழ்நாட்டில் உழவர்களுக்கோ, வேளாண்மைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
உழவர் பெருமக்களை அவர்களுடைய ஊரிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, பிரச்சினைகளை உடனே தீர்க்க “உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை” என்ற திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும், முகாம்கள் மூலமாக தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறோம்! இப்படியெல்லாம், நாம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் தான், கடந்த நான்கு ஆண்டுகளில், 456.44 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டியிருக்கிறோம்!
இன்னும் பெருமையோடு சொல்கிறேன்… மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு எக்டருக்கு 2 ஆயிரத்து 835 கிலோவாக இருந்த உணவு தானிய உற்பத்தி, இப்போது, 2 ஆயிரத்து 857 கிலோவாக அதிகரித்திருக்கிறது!
இந்த நான்கு ஆண்டு கால சாதனைகளை எல்லாம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
பயிர் உற்பத்தித் திறனில், இந்திய அளவில் நாம் தான் முதலிடம்!
மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம்!
குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம்! இதிலும், நாம் முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்!
இதற்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு கிராமமும் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் என்று "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” என்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கினோம்!
இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில், பத்தாயிரத்து 187 கிராம ஊராட்சிகளில், 52 இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நான் பெருமையோடு சொல்கிறேன்… 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கிறோம்!
அடுத்து, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், இதுவரைக்கும் 20 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 130 இலட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது.
விவசாயிகளின் பொருளீட்டுக் கடனை 3 இலட்சம் ரூபாயில் இருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். இன்னும் நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகள் இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் -
டெல்டா மாவட்டங்களில், 1 இலட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தி விற்பனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், 5.17 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
ஈரோடு மாவட்டத்தில், மஞ்சள் ஏற்றுமதி மையம்
324 கிடங்குகளுக்கு கிடங்கு மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒன்றிய அரசின் அங்கீகாரமும், பாராட்டும் பெறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் வர்த்தகம் மேற்கொள்ள 8,366 வணிகர்களுக்கும் - 745 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ஒன்றுபட்ட ஒற்றை உரிமம்.
285 கோடி ரூபாயில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகள்
14 புதிய உழவர் சந்தைகள்
ஏற்கனவே இருந்த 125 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணிகள்
மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகள்
நீலகிரியில், சிறுதானியங்கள் பதப்படுத்தும் நிலையம்!
எடப்பள்ளியில், ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம்
கொல்லிமலையில், மிளகு பதப்படுத்தும் மையம்,
தஞ்சாவூர் மாவட்டத்தில், தென்னை மதிப்புக் கூட்டு மையம்.
பண்ருட்டி மற்றும் ஒட்டன்சத்திரத்தில், குளிர்பதனக் கிடங்குகள்,
களக்காட்டில், வாழை ஏல மையம்
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளானந்தல் பகுதியில், சமையல் எண்ணெய்க்கான சந்தை ஊக்குவிக்கும் மையம் மற்றும் 14 ஆலோசனை மையங்கள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிகம் செய்வதற்கு 73 கோடி ரூபாய் நிதியுதவி
மாநகராட்சிகளில், 50 சிறப்பு அங்காடிகள்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 53 கோடி ரூபாய் மானியம்
8 ஆயிரத்து 355 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வேளாண் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2 ஆயிரத்து 911 கோடி ரூபாய் கடனுதவி
விலை வீழ்ச்சிக் காலங்களில், விவசாயிகளைப் பாதுகாக்க இதுவரை 11 ஆயிரத்து 197 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, ஆயிரத்து 6 மெட்ரிக் டன் உளுந்து, 33 மெட்ரிக் டன் துவரை, 1,467 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா
கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, மதுரையில் சிறிய உணவுப் பூங்கா
மாநிலத்தின் தனித்துவமான 40 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டு இதுவரை, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலா, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல் உள்ளிட்ட 7 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு! மீதம் 33 பொருட்களுக்கும் விரைவில் பெற நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முந்திரித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க "தமிழ்நாடு முந்திரி வாரியம்" என்னும் தனி அமைப்பு!
கடந்த நான்கு ஆண்டுகளில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக 21 இலட்சம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 630 கோடி ரூபாய்!
பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், 32 இலட்சம் விவசாயிகளுக்கு
5 ஆயிரத்து 720 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை!கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!
நெல்லுக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டிருக்கிறது!
2025-26 ஆம் ஆண்டுக்கு, ஒன்றிய அரசு நெல்லுக்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால், தமிழ்நாடு அரசு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் விவசாயிகள் பெறும் வகையில் சாதாரண இரகத்துக்கு 131 ரூபாயும், சன்ன இரகத்துக்கு 156 ரூபாயும் உயர்த்தி வழங்கியிருக்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டு 297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் கரும்பு விலை மெட்ரிக் டன்னுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
வேளாண் பணிகள் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற, வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டம்.
விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்கிடவும், இயந்திர வாடகை மையங்களை நிறுவுவதற்கும் 70 ஆயிரம் விவசாயிகளுக்கு 577 கோடி ரூபாய் மானியம்!
வேளாண் இயந்திரங்களை, தேவைக்கேற்ப குறித்த நாளில் வாடகைக்குப் பெற உழவர் செயலியில், இ-வாடகை சேவை உருவாக்கப்பட்டு இரண்டரை லட்சம் முன்பதிவுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவரை 1 இலட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றதனை தொடர்ந்து இன்னும் பலர் பயன்பெற்று வருகிறார்கள்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும், இதுவரை 29 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில், 8 ஆயிரத்து 370 கிலோ மீட்டர் நீளத்துக்கு,
C மற்றும் D பிரிவு கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, கடைமடைக்கும் பாசன நீர் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கல்வியை மேம்படுத்தும் வகையில், நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில், மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள்.
இந்த சாதனைகளின் தொடர்ச்சியாக இந்த வேளாண் வணிகத் திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விவசாயிகளைத் தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இதை உழவர் பெருமக்கள் எல்லோரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வேளாண் வணிகத் திருவிழா, விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும். உழவுத் தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
நடிகர் விஜயின் பிரச்சாரத்தில் நெரிசல்... 31 பேர் பலியானதால் அதிர்ச்சி- ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி!
-
புதுச்சேரி... தொகுதிக்கு 30% வாக்காளர்களை கழகத்தில் இணைக்கவேண்டும் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் !
-
மீண்டும் மீண்டுமா... நாமக்கல்லிலும் தவறான தகவலை சொல்லி வசமாக சிக்கிய நடிகர் விஜய்... அது என்ன ?
-
அறுசுவை உணவுகள்.. புதுமையான அரங்குகள்... சென்னையில் தொடங்கியது வேளாண் வணிகத் திருவிழா!
-
சீமான் போன்ற தற்குறிகளுக்கு எப்படித் தெரியும்? : இரா.ராஜீவ்காந்தி கண்டனம்!