Tamilnadu

விருதுநகர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (23.9.2025) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 25.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 124.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 837 பயனாளிகளுக்கு 10.84 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகள்

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 5.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறையின் சார்பில் திருச்சுழி வட்டம், கீழ்செம்பூர் கிராமத்தில் 9.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு;

ராஜபாளையம் நகராட்சியில் உரம் தயாரிக்கும் தளத்தின் மேற்கு, கிழக்குப்பகுதிகளில் தலா 85.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீரெங்கப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை, 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்கராஜகோட்டை பெரிய தெரு - பழையபாளையம் குமரன் தெரு - ஐவஹர் மைதானம் – மலையடிப்பட்டி- ஆர்.ஆர்.நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை;

58.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவனந்தபுரம் 6, 5வது தெருக்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, 31.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீரெங்கபாளையம் சாலை – சங்கரன் கோவில் 7வது குறுக்குத் தெரு ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 22.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாரதியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 3.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டி.பி.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள்;

33.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் த்ரௌபதியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் 71.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிடுமினஸ் சாலை – அசோக்நகர் தெரு – பள்ளிவாசல் தெரு – அசோக் நகர் முதன்மை சாலை – கல்லணை ஓடைத் தெரு ஆகியவற்றில் சீரமைக்கப்பட்ட சாலைகள், விருதுநகர் நகராட்சியில் 35.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கமை பெரியசாமி நாடார் மகளிர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட கலையரங்கம்;

32.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே பீடர் ரோடு – கே.ஆர். கார்டன் குறுக்குத் தெரு 1வது காலனி – மதுரா கோட்ஸ் காலனி – கணேஷ்நகர் 2 ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட தார்சாலைகள், 58.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணேஷ் நகர் 4,5,7 – லட்சுமி காலனி குறுக்குத் தெரு 1- கே.ஆர்.கார்டன் குறுக்குத் தெரு 3 – லட்சுமி காலனி குறுக்குத் தெரு ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார்சாலைகள்;

50.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கே.ஆர் கார்டன் குறுக்குத் தெரு1 – கணேஷ்நகர் 3 – குட்செட்ஸ் சாலை – பட்டேல் சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார் சாலைகள், 12.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் A.S.P.C.C உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் என மொத்தம் 25.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பணிகள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஜோகில்பட்டி ஊராட்சி, இராஜபாளையம் வட்டம், மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி, அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி ஊராட்சி ஆகிய 3 இடங்களில் தலா 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறுவிளையாட்டு அரங்கம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், செட்டிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 74.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, நாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 59.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் ஒரு கழிப்பறை கட்டடம் கட்டும் பணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் படந்தால் கிராமத்தில் 35.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் 38.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் யோகா இயற்கை முறை பிரிவு கட்டடம் கட்டும் பணிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் விருதுநகர் கிருஷ்ணாபுரம் சாலையை 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 கி.மீ நீளத்திற்கு பாவு தளத்துடன் கூடிய இருவழித்தடமாக மாற்றி அமைக்கும் பணிக்கும், சிவகாசி மாநகராட்சியில் 58.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.7 கி.மீ நீளத்திற்கு இரண்டாம் கட்டமாக சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணிக்கும் என மொத்தம் 124.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நலத்திட்ட உதவிகள்

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 5.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 219 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நல இலவச வீட்டுமனை இ – பட்டாக்களையும், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும்;

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதா தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு 31.50 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 16 நபர்களுக்கு 3.13 கோடி ரூபாய்க்கான வங்கி கடன் இணைப்புகளையும், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 20 நபர்களுக்கும்;

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு ஆவின் பாலகம் அமைக்க தலா ரூ.50,000 மும், 9.45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 நபர்களுக்கு மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் 4 நபர்களுக்கு 1.75 இலட்சம் ரூபாய்க்கான மானிய உதவிகளையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு 27.58 இலட்சம் ரூபாய் மானிய உதவிகளையும்;

வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு 4.48 இலட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், புதிய தொழில் முனைவோர்கள் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு 4.40 இலட்சம் ரூபாய் மானிய உதவியையும் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 837 பயனாளிகளுக்கு 10.84 கோடி ரூபாய்க்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Also Read: 3 ஆண்டுகளுக்கான 90 கலைமாமணி விருதுகள் : அடுத்த மாதம் முதலமைச்சர் வழங்குகிறார்! - பட்டியல் உள்ளே!