Tamilnadu
”இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-
இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்து 840 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட சுமார் 162 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை, உதவிகளை வழங்குவதில் நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.
இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாவட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், என்னுடைய வணக்கத்தையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசினுடைய வெற்றிக்கு உங்கள் ஒவ்வொருத்தருடைய முகத்தில் தெரிகின்ற அந்த சிரிப்பும், மகிழ்ச்சியுமே ஒரு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு, ஒரு சாட்சி.
தமிழ்நாட்டில் எத்தனையோ ஊர்களுக்கு சென்று, எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்று, எத்தனையோ பேருக்கு பட்டா கொடுத்தாலும், இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்திற்கு வந்து விருதுநகர் மக்களுக்கு பட்டா கொடுப்பது கூடுதல் ஸ்பெஷல். அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், மற்ற மாவட்டங்களுக்கு எல்லாம் பட்டா கொடுக்கின்றோம். அந்த பட்டா கொடுப்பதற்கு காரணமாக இருக்கக்கூடியவர் உங்களுடைய மாவட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பட்டா கொடுக்கின்றவர் அவர். அவர் பொறுப்பு வகிக்கிற வருவாய்த்துறை மூலமாகதான் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பட்டாக்கள் கொடுக்கப்படுகிறது. இன்றைக்கு அவர் மாவட்டத்திற்கே நான் வந்து பட்டா கொடுப்பதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் துணை முதலமைச்சராக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருந்தாலும் சரி, எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும், நாங்கள் சென்று நிற்க வேண்டியது, உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த உங்களுடைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம்தான். ஏனென்றால், அண்ணன்தான் எல்லா திட்டங்களுக்கும் நிதியை ஒதுக்கி தருவார். அவர்தான் முடிவு செய்வார்.
ஆகவே, ஒரு பக்கம் நிதி கொடுக்கிற அமைச்சர், மறுபக்கம் இடம் கொடுக்கிற அமைச்சர் என்று இரண்டு முக்கியமான அமைச்சர்களால் இந்த விருதுநகர் மாவட்டம் பல மடங்கு நம்முடைய கண் முன்னே வளர்ந்து நிற்கின்றது.
அதனுடைய தொடர்ச்சியாகத் தான், ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கு இந்த நலத்திட்ட உதவிகளைக் கொடுத்து கொண்டு இருக்கிறோம். முக்கியமாக இங்கு ஆதி திராவிடர் மக்களுக்கு சுமார் 300 பட்டாக்கள், அதே போல நீண்ட நாள் பட்டாக்களுக்கு விண்ணப்பித்து, வேண்டும் என்று கோரிக்கை வைத்து காத்திருந்தது சுமார் 100 பேர். ஆக மொத்தம் சுமார் 400 பேருக்கு இன்றைக்கு பட்டாக்களைக் வழங்க இருக்கின்றோம்.
குறிப்பாக நம்முடைய அரசு அமைந்த பிறகு, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் இந்த நான்கரை வருடங்களில் மட்டும் சுமார் 19 இலட்சம் பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இது மிகப்பெரிய சாதனை.
ஏனென்றால், பட்டா என்பது நீங்கள் குடியிருக்க அந்த இடத்திற்கான சட்டப்பூர்வமான உரிமை. நீங்கள் பல நாள் பட்டா வேண்டும் என்று அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை பார்க்க முயற்சி செய்து, காத்துக் கொண்டு இருப்பீர்கள். ஆனால், இன்றைக்கு அதே அமைச்சர்கள், அதே அரசு அலுவலர்கள் உங்களைத் தேடி வந்து உங்களுக்கான பட்டாக்களை கொடுத்திருக்கின்றோம். இது மூலமாக பட்டா என்கின்ற உங்களுடைய பல நாள் கனவு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்றைக்கு உண்மையாக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இனி உங்கள் வீட்டில் நீங்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக தூங்கலாம். உங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மகிழ்ச்சியாக மாற்றி காட்டியிருக்கிறார்கள்.
ஏனென்றால், இந்த காலத்தில் எங்கு போனாலும், எந்த விஷயத்திற்கு போனாலும், யாரைப் பார்த்தாலும், அவர்கள் முதலில் கேட்கின்ற கேள்வி உன்னுடைய வீடு எங்கே, உனக்கு இருக்க இடம் இருக்கா? உன் வீட்டிற்கு முதலில் பட்டா இருக்கா? என்றுதான் முக்கியமாக கேள்வி கேட்பார்கள். வங்கியில் சென்று பேங்க் லோன் கேட்டாலும் சரி, கல்யாணத்துக்கு பெண் கேட்டாலும் சரி முதலில் உன் பெயரில் வீடு இருக்கிறதா, பட்டா இருக்கிறதா என்று தான் கேட்பார்கள். அந்த அளவுக்கு, இடம் என்பது ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலும் மிக, மிக முக்கியம் வாய்ந்த அத்தியாவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. அந்த வகையில், உங்களுக்கான அத்தியாவசிய தேவையை நம்முடைய அரசு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார்.
இங்கே பட்டாவை மட்டும் கொடுக்கவில்லை, பட்டா இருக்கக்கூடியவர்கள், அவர்கள் வீடு கட்டுவதற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் அதற்கான ஆணையையும் நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது.
அதே போல நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு 3 கோடியே 13 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கான வங்கிக்கடன், அதையும் இன்றைக்கு இந்த மேடையில் கொடுக்க இருக்கின்றோம்.
தமிழ்நாட்டுக்கு எத்தனையோ பெருமை இருந்தாலும், நான் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டினுடைய பெருமையாக, அங்கீகாரமாக நம்முடைய குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை தான் எப்போதுமே பெருமையாக எந்த மாநிலத்திற்கு சென்றாலும் கூறுவேன்.
அதனால்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்கு போட்ட உத்தரவு, எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு இருக்கக்கூடிய சிறப்பாக செயல்படக்கூடிய சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை நீ சந்தித்து பேசவேண்டும், அவர்களுடைய செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது என்ன கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு, அதை முடிந்தவரை செய்து கொடுக்க வேண்டும் என்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு போட்டிருக்கிறார். எனவே, தொடர்ந்து எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அவர்களைச் சந்திந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில், சென்ற வாரம் சேலத்துக்கு சென்றிருந்தேன். அங்கு அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளைக் வழங்குவதனை தொடங்கி வைத்து, அங்கு இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு வழங்கினோம்.
அதே மாதிரி, நம்முடைய தமிழ்நாட்டின் மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டைகளை சென்ற வாரம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். இது இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரியான திட்டம். அதனுடன் தொடர்ச்சியாகதான் இன்றைக்கு விருதுநகரில் வங்கிக்கடன் இணைப்புகளை கொடுத்து இருக்கிறோம். மாவட்ட ஆட்சித்தலைவரிடம், அமைச்சரிடம் கூறி இருக்கின்றேன். உங்கள் போட்டோ, உங்கள் பெயர், உங்கள் முகவரி, உங்கள் குழுப்பெயருடன் விரைவில் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையை தயவு செய்து பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை பயன்படுத்த வேண்டும். அதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உங்களுக்கு இருக்கிறது. நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சிதான் முதன் முறையாக சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை என்ற திட்டம்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுக்கக்கூடிய கடன் தொகையாக பார்க்கவில்லை, சுய உதவிக்குழு சகோதரிகள் உங்களுடைய உழைப்பின்மீது இருக்கக்கூடிய நம்பிக்கைத் தொகையாக தான் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
ஆகவே, இன்றைக்கு இந்த கடன் உதவியை பெறுகின்ற நீங்கள், நாளைக்கு சிறப்பாக தொழில் முனைவோராக, நாலு பேருக்கு நீங்கள் வேலை கொடுக்கின்ற அளவுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும், முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலைமைக்கு வர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள். இந்த அரசே மகளிருக்கான அரசாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த 4 வருடத்தில் மகளிர் முன்னேற்றத்திற்கு என்னற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக, சில திட்டங்களை மட்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்ற பிறகு அவர்கள் முதல் நாள் போட்ட ஐந்து கையெழுத்துகளில், முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்கான கையெழுத்துதான். தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம்.
இன்றைக்கு விடியல் பயண திட்டத்தின் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் மட்டும் எத்தனை முறை பயணம் செய்துள்ளீர்கள் என்றால், 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு திட்டத்தை செயல்படுத்துவது முக்கியமல்ல, அந்த திட்டத்தை எப்படி பயன்படுத்துகின்றீர்கள் என்று மகளிரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு இவ்வளவு சிறப்பாக செயல்படுத்தி இருக்கின்றீர்கள். அதுதான் அந்த திட்டத்தினுடைய வெற்றி.
குறிப்பாக, இந்த விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் பயணங்களை மகளிர் நீங்கள் மேற்கொண்டு இருக்கின்றீர்கள். இந்த விடியல் பயண திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமித்துள்ளார்கள்.
அதே மாதிரி, அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள், மாணவிகள் உயர்கல்வி படிக்க எந்த கல்லூரியாக இருந்தாலும், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார். பெண்கள் படிக்க வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கத்தோடு. இதுவரை 8 லட்சம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார். இந்த விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதே மாதிரி, முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் படிக்க வேண்டும் என்பதற்காக, காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது வெறும் வயிற்றோடு செல்லக்கூடாது. நன்றாக சாப்பிட்டு, தரமான உணவு அதன்பிறகு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய் திட்டம் தான் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளி வரை, 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை 22 லட்சம் குழந்தைகள் தரமான காலை உணவை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 72 ஆயிரத்து 400 குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
இது எல்லாவற்றையும் விட சிறப்பான ஒரு திட்டம். உங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய திட்டம். தேர்தல் அறிக்கையில் நாம் சொன்ன திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும், செப்டம்பர் 15 ந்தேதி 2023 லிருந்து இந்த செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு, மாதம் 1000 ரூபாயை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிருக்கும் கிட்டத்தட்ட 24 ஆயிரம் ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
நான் மாவட்டங்களுக்கு செல்லும்போது அங்கு இருக்கக்கூடிய மகளிர் சிரித்த முகத்தோடு வரவேற்று 14, 15, 16 ஆம் தேதி என்றால் கூடுதல் மகிழ்ச்சி. ஏனென்றால் அன்றைக்குதான் வங்கியில் பணம் வந்திருக்கும். சில சகோதரிகள் கூறுவார்கள் நான் விண்ணப்பித்தேன் வரவில்லை என்று, இப்போது முகாம்கள் நடந்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முகாம்களை நடத்த முதலமைச்சர் அவர்கள் நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 60 சதவீத முகாம்கள் முடிந்திருக்கிறது. இந்த முகாம்களில் 60 சதவீத கோரிக்கை மகளிர் உரிமைத் தொகை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சில தளர்வுகளை செய்திருக்கிறார்கள். நிச்சயமாக இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் கூடுதல் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரம் மகளிர் இன்றைக்கு மாதம், மாதம் 15ந்தேதி மகளிர் உரிமைத்தொகை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்த மேடையில் சற்றுமுன்புகூட, விருதுநகர் மாவட்டத்தில் 26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறோம். அதுமட்டுமில்ல, சுமார் 125 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். இது மாதிரி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்து, பார்த்து திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்தியாவிலேயே அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாக, நம்பர் 1 மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு பெருமை வாய்ந்து திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கின்றார்கள். அதற்கு நீங்கள் நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026-லயும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இந்த அரசு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் சொல்லி நீங்கள் முதலமைச்சர் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு, நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அத்தனைப் பேரையும் மீண்டும் வாழ்த்தி இந்த வாய்ப்பிற்கு, நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!