Tamilnadu

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ‘இடஒதுக்கீட்டின் கீழ்’ பணி நியமனம்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.9.2025) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்;

சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர்.வைஷாலி அவர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் (தரம் III) பணியிடத்திற்கும், கால்பந்து வீராங்கனை கே.சுமித்ரா அவர்களுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணியிடத்திற்கும், கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யா அவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகி பணியிடத்திற்கும், பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தா அவர்களுக்கு சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர் பணியிடத்திற்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத்திட "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"யை உருவாக்கியது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

துணை முதலமைச்சர் அவர்கள் 2024-25ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர் / வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச போட்டிகளான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷீப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள்;

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்;

தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு (மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட) அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

அதன்படி, முதற்கட்டமாக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை, தொழில் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற 14 அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை வரைவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களில் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.12.2024 அன்று வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம், சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2வது இடம் பெற்ற சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர். வைஷாலி அவர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் (தரம் III) பணியிடத்திற்கும், நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கால்பந்து வீராங்கனை கே. சுமித்ரா அவர்களுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணியிடத்திற்கும்;

நேபாள நாட்டின் போக்ராவில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெற்ற கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யா அவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகி பணியிடத்திற்கும், சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தா அவர்களுக்கு சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர் பணியிடத்திற்கும், என 4 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

Also Read: 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!