Tamilnadu
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
சென்னை, கிண்டி, ஐடிசி - கிராண்ட் சோழா (ITC Grand Chola), இராஜேந்திரா ஹாலில் (Rajendra Hall) இன்று (18.09.2025) புது தில்லி தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, சென்னை இணைந்து நடத்தும் 50ஆவது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழுக் கூட்டத்தை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்.
இந்திய தேசிய ஆவணக்காப்பகமும், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையும் இணைந்து நடத்தும் தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழுவின் 50ஆவது கூட்டத்தின் (பொன்விழா) தொடக்க விழா தமிழ்நாட்டில் முதன்முறையாக இன்று (18.09.2025) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது:-
இந்திய ஆவணக்காப்பாளர்களின் பொன்விழா ஆண்டினை தமிழ்நாடு அரசின் ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை தலைமையில் கொண்டாடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஆவணங்கள் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் கல்வெட்டுகளும் செப்பேடுகளுமே அரசு ஆவணங்களாக இருந்து வந்தன.
கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்குப் பிறகு காகித ஆவணங்கள் உருவாகின. அவற்றை முறையாக பாதுகாப்பதற்காக சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா மாகாணங்களில் ஆவணக்காப்பகங்கள் (Record Office) உருவாக்கப்பட்டன. அவற்றில் 1805 முதல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பழமையானது.
கடந்த 1968ஆம் ஆண்டு Madras Record Office என்பது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1972ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் துவக்கி வைக்கப்பட்டது.
அனைத்துத் துறை அரசு ஆவணங்களும் முறையாக அட்டவணைகளாக தயாரிக்கப்பட்டு, உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆவணங்களை தனக்கே உரியதாக கொண்டுள்ளது. சுமார் 40 கோடி ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. இங்குள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி பல முக்கியமான தென்னிந்திய வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேலை நாட்டு வரலாற்று அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு செய்து, உலகப்புகழ் பெற்ற நூல்களை வெளியிட்டுள்ளனர்.
வரலாறு ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தவும், நமது வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ளவும், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000/- உதவித்தொகை வழங்கவும் நமது முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
இன்று வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு நூல்களுக்கும் அடிப்படையாக விளங்கும் South Indian Rebellion, 1800–1801 என்னும் நூலை, இந்தியாவின் புகழ்பெற்ற பேராசிரியர் முனைவர் K. இராசையன் அவர்கள், 1700 முதல் 1805 வரையிலான முதன்மை ஆவணங்களை ஆராய்ந்து எழுதியுள்ளார்.
இதுபோன்று நூற்றுக்கணக்கான வரலாற்று நூல்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பக ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. நம் விடுதலை வேள்வியில் தமிழகத்தின் பங்கினை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள், தமிழக வீரர்களின் தியாகத்தை சித்தரிக்கின்றன.
தமிழக மண்ணில் முதன்முதலாக வெள்ளையனை எதிர்த்த பூலித்தேவன், தூக்கு மேடையில் வீரமரணம் தழுவிய வீரபாண்டிய கட்டபொம்மன், தென்னிந்தியப் புரட்சியை ஒருங்கிணைத்து (1800–1801) வரலாற்றில் அழியாத இடம் பெற்ற மருது சகோதரர்கள் ஆகியோரின் தியாகங்களையும் வீரத்தையும், வேலூர் சிப்பாய்க் கலகத்தில் உயிரிழந்தோரின் துயர நிகழ்வுகளையும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த நூல்கள் பதிவு செய்கின்றன.
தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தேவைகளுக்காக பழைய ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவற்றை வழங்கும் பணியையும் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மேற்கொண்டு வருகிறது. பழைய ஆவணங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்வதற்காக ஜப்பான் திசு முறையைப் பயன்படுத்தி செப்பனிடுதல் போன்ற நவீன முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.10 கோடியினை வழங்கியுள்ளார்கள். அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை செம்மைப்படுத்த நடப்பாண்டில் மேலும், 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், ஆவணங்களை மின்னணு வடிவில் ஆராய்ச்சியாளர்கள் எளிதாக அணுகக் கூடியவாறு மாற்றவும், ஆவணங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் எண்ணிமப்படுத்தும் (Digitization) பணிகளில் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்திய ஆவணக்காப்பகங்களின் ஆவணக்காப்பாளர்களை இங்கு ஒருங்கிணைந்திருப்பதைப் பார்ப்பதில் நான் பெருமை கொள்கிறேன். அரசு நிர்வாகத்திற்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் ஆவணங்கள் அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. புராணங்கள், கட்டுக் கதைகளின் கூற்றுகளை நம்பாமல், இந்தியாவின் உண்மை வரலாற்றை ஆராய்வதற்காக ஆவணங்களைத் தேடி வரும் அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆதாரங்களை வழங்கும் ஆவணக்காப்பாளர்களின் பணி மிகவும் முக்கியமானது.
இந்திய ஆவணக்காப்பாளர்களின் பொன்விழா கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பெருமை கொள்கிறது. ஆவணக் காப்பாளர்களின் சேவை மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆவணக்காப்பாளர்களின் பணி அரசு நிர்வாகத்திற்கும், அதன் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.
இவ்வாறு அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்திய தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழு என்பது இந்திய ஆவணக்காப்பக வல்லுநர்களின் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பானது ஆவணக்காப்பாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களை விவாதித்து தீர்வு காணும் நோக்கத்துடன் 1953-ஆம் ஆண்டு இந்திய அரசால் நிறுவப்பட்டது.
இந்திய தேசிய ஆவணக்காப்பளர்கள் குழுவின் 49-வது கூட்டம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றது. 50-வது கூட்டம் (பொன்விழாக் கூட்டம்) தமிழ்நாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், இக்கூட்டத்தில் பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில் முதற்கட்டமாக Old Settlement Register (OSR) 1864-ஆம் ஆண்டு முதல் 1897-ஆம் ஆண்டு வரை மற்றும் Inam Fair Register (IFR) 1861-ஆம் ஆண்டு முதல் 1940-ஆம் ஆண்டு வரை இணையத்தில் பதிவேற்றப்பட்டு, பொதுமக்கள் இருந்த இடத்திலேயே ஆவணங்களைப் பெறும் வகையில் www.digitamiinsduarchives.gov.in ஆவணக்காப்பக இணையதளம் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், ஆங்கில ஆட்சிக்கு எதிராக “1857 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்”, “மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்” ஆகிய இரண்டு நூல்களை உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டார்.
பொன்விழாக் கூட்டத்தில் 15 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள், 5 யூனியன் பிரதேச ஆவணக்காப்பக அலுவலர்கள், வரலாற்று வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Also Read
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!