Tamilnadu

”கண்ணாடி பாலம் பாதுகாப்பாகவும் உறுதியுடனும் உள்ளது" : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் இல்லத்திற்கு இடையே கட்டப்பட்ட கண்ணாடி பாலத்தின் உறுதி தன்மை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கிறார்.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கண்ணாடி பாலம் ரூ.37 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த பாலம் கடல் பரப்பில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வப்பொழுது சிறு, சிறு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்படி, பராமரிப்பு பணியில் இருந்தபோது, சுத்தியல் தவறி கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டது. பாலத்தில் உடைப்பு என்பது ஏற்படவில்லை. ஆனால் இந்த அரசை பிடிக்காதவர்கள் கண்ணாடி பாலம் உடைந்ததாக தவறான தகவல்களை கூறுகிறார்கள். செய்திகளும் தவறாக வெளியிடப்படுகிறது.

கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் வகையில் உறுதித் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அதனை பயன்படுத்தி வருகின்றன. இதுவரை சுமார் 17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் .

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, விபத்தால் ஏற்பட்ட கீறல் முழுமையாக சரி செய்யப்பட்டு பாலம் உறுதியுடன் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் பூம்புகார் நிறுவனம் மூலம் மூன்று கப்பல்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டு கப்பல் கட்டுமான பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு : தனியார் பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!