Tamilnadu

திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 396 சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளையும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 2,810 பணிநாடுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பணிநியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "இங்கே நம்முடைய அமைச்சர் நண்பர் அன்பில் மகேஷ் அவர்கள் சென்ற வருடமும் இதே ஆசிரியர் தின நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். பல்வேறு கோரிக்கைகளை நீங்கள் வைத்திருந்தீர்கள். பல கோரிக்கைகளை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். சில கோரிக்கைகளை நீங்களே மறந்திருந்தாலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடியவர் அந்த கோரிக்கைகளை எல்லாம் உங்களுக்கு நியாபகப்படுத்தியிருக்கிறார். நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகள் அத்தனையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி காட்டுவார். அதற்கு உங்களுடைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அந்த பணிகளை சிறப்பாக செய்வார் என்ற அந்த உறுதிமொழியை இங்கே நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பொதுவாக வகுப்பில் Class Roomல் இருக்கும்போது ஒன்று, இரண்டு ஆசிரியர்களை பார்க்கும்போதே, கண்டிப்பான ஆசிரியரை பார்க்கும்போதே பயம் வந்திடும், பதட்டம் வந்துவிடும். ஆனால், இன்றைக்கு ஒரே அரங்கத்தில் கிட்டத்தட்ட 400 ஆசிரியர்களை ஒன்றாக பார்க்கின்ற அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதனால் பயத்தோடு சேர்ந்து கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கின்றது. அதிலும் நீங்கள் எல்லாரும் சாதாரண ஆசிரியர்கள் கிடையாது. நல்லாசிரியர் விருது பெறுகின்ற ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கெல்லாம் சிறந்த ஆசிரியர்கள் நீங்கள்.

எனவே, உங்கள் முன்னால் பேசுகின்றபோது மிகவும் அளந்து, கவனமாக பேசவேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கின்றேன். இல்லையென்றால் எனக்கு நீங்கள் மார்க் போட மாட்டீர்கள். பெயில் ஆக்கிவிடுவீர்கள். இன்னும் கோபம் வந்தால் எனக்கு இம்போசிசனும் கொடுத்துவிடுவீர்கள்.

எனவே உங்க அத்தனைபேருக்கும் முதலில் மீண்டும் என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம்முடைய திராவிட இயக்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் எப்பொழுதுமே மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தந்தை பெரியார் அவர்களே மிகப்பெரிய ஒரு ஆசிரியர். அவர் பகுத்தறிவுக்கு ஆசிரியர், சுயமரியாதைக்கு ஆசிரியர். மூட நம்பிக்கைக்கு எதிரான ஆசிரியர். அப்படிப்பட்ட ஆசிரியருக்கு தான் நேற்று இலண்டனில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெரியாருடைய திருவுருபடத்தை திறந்து வைத்து, தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல, இந்த உலகத்திற்கே பெரியார் சொந்தம் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார்.

அதே போல், நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள், அவர் பள்ளி ஆசிரியராக தன்னுடைய முதல் பணியை துவங்கிய பிறகுதான் மக்கள் பணிக்கு வந்தார். அதன்பிறகு திராவிட இயக்கத்தை துவங்கினார். அதே மாதிரி, நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மாணவராக இருக்கும் போதே ஆசிரியர் ஆனார். மாணவராக இருக்கும் போதே மாணவநேசன் என்ற பத்திரிக்கையை தொடங்கி, சாதாரண பத்திரிக்கை அல்ல கையெழுத்து பிரதி, அதை தொடங்கி, அதற்கு ஆசிரியாரக இருந்தவர் தான் கலைஞர் அவர்கள்.

அதன்பிறகு அவர் எப்போதுமே பெருமையாக சொல்வார் என்னுடைய மூத்த பிள்ளை முரசொலி என்று, முரசொலியை ஆரம்பித்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதற்கு ஆசிரியராக இருந்தவர் தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு எங்களுடைய திராவிட கழகத்துடைய தலைவர் அய்யா வீரமணி அவர்களை இன்றைக்கும் நாங்கள் எங்களுடைய ஆசிரியர் அய்யா என்று தான் அழைப்போம்.

இந்த தலைவர்கள் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இன்றைக்கு திராவிட மாடல் என்கின்ற மிகப்பெரிய தத்துவத்துடைய மிகச்சிறந்த ஆசிரியராக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்.

அதனால் தான், உங்களுடைய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எப்போது பேசும்போதும் சொல்வார். “முதலமைச்சர்தான் எங்களுக்கு ஹெட் மாஸ்டர். நாங்கள் எல்லாம் அவருக்கு மாணவர்கள் என்று பெருமையாக சொல்வார்.

அந்த அளவுக்கு, திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி, கழக அரசாக இருந்தாலும் சரி, ஆசிரியர்களை எப்போதுமே மதித்தது. போற்றியது.

முன்பெல்லாம், கிராமங்களுக்கு சென்றால், ஒரு வீட்டைக் காட்டி இது தான் வாத்தியார் வீடு என்று பெருமையாக சொல்வார்கள். மற்ற வீடுகளுக்கு எல்லாம் அப்படி தனி அடையாளம் கிடையாது. ஆனால், இன்றைக்கு, ஒரு கிராமத்திற்கு சென்றீர்கள் என்றால், அங்கே காட்டுவார்கள். இது டாக்டர் வீடு, இது இன்ஜினியர் வீடு, இது வக்கீல் வீடு என்று சொல்கின்ற அளவிற்கு இன்றைக்கு கிராமங்களுக்கு கல்வி சென்றடைந்துள்ளது. இத்தனை வீடுகளுக்கு கல்வி சென்று சேர்வதற்கான காரணம், முதன் முதலாக அந்தக் கிராமத்துக்கு வந்த அந்த 'வாத்தியார் வீடு' தான்.

ஏன் என்றால், Teachers ஆகிய நீங்கள் தான், அந்த ஊருக்கான Doctors-ஐ, Engineers-ஐ, Lawyers-ஐ உருவாக்கி இருக்கின்றீர்கள். ஏன், இன்னும் சொல்ல வேண்டுமானால் என்னை மாதிரி அரசியல்வாதிகளையும் (Politicians) நீங்கள் தான் உருவாக்கி இருக்கின்றீர்கள்.

Social Changes-ஐ Education மூலம் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட Powerful-ஆன கல்வியை மாணவர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கின்ற இங்கு வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒரு புரட்சியாளர் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆகவே, தமிழ்நாட்டு மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். மாணவர்கள் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும், அதற்கு நீங்கள் அவர்களை வழிநடத்த வேண்டும், அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எதையுமே ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்க நீங்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு அறிவார்ந்த சமூகத்தை அறிவார்ந்த ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

இன்றைய கால கட்டத்தில் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்த வேண்டும். Social Justice-ஐ மாணவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும், அறிவுறுத்த வேண்டும்.

அநீதியை எதிர்க்க வேண்டும் என்ற உறுதியோடு தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக 'தமிழ்நாடு கல்விக் கொள்கையை' வெளியிட்டார்கள். “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எந்நாளும் ஏற்க முடியாது எங்களுடைய மாணவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு எங்களுக்கு இருமொழிக் கொள்கையே போதும் என்று சொன்னவர்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இன்றைக்கு உங்ளுடைய பங்களிப்பால் தான்,தமிழ்நாடு அரசு கல்விக்காக செயல்படுத்துகின்ற பல்வேறு திட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு, முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் இப்படி எத்தனையோ திட்டங்களை சொல்லிக் கொண்டு போகலாம். இந்த எல்லா திட்டங்களுடைய வெற்றிக்கு பின்னால் உங்களுடைய உழைப்பு, ஆசிரியர்களுடைய உழைப்பு நிச்சயம் அதில் அதிக அளவு இருக்கின்றது.

பள்ளிக்கல்வியை நீங்கள் சரியாக கொடுப்பதால் தான்,இன்றைக்கு இந்தியாவுலேயே தமிழ்நாடு மட்டும் தான் இன்றைக்கு 75 சதவீதம் உயர் கல்வியை படிக்க செல்கிறார்கள். இந்த 75 சதவீதத்தை உங்களுடைய அத்தனை பேருடைய உழைப்பால் விரைவில் 100 சதவீதமாக மாற்றி காட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது. அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை முதலமைச்சர் அவர்களுக்கும், எனக்கும் இருக்கின்றது.

ஆசிரியர்கள் உங்களுடைய வளர்ச்சிக்கு நம்முடைய கழக அரசு எப்போதும் போல துணை நிற்கும் என்பதை நான் இங்கே உறுதியோடு கூறிக்கொள்கின்றேன். நீங்களும் கடந்த காலங்களில் எப்படி நம்முடைய அரசுக்கு ஆதரவு கொடுத்தீர்களோ, அதே ஆதரவை, இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பி கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நேரத்தில் ஒரே ஒரு வேண்டுகோள். பொதுவாக நான் மாணவர்கள் மத்தியில் தான் பேசுவேன். விளையாட்டுத்துறை அமைச்சராக இங்கே உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகின்றேன். நிறைய ஆசிரியர் பெருமக்கள் வந்திருக்கின்றீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் நிறைய பேர் வந்து இருக்கின்றீர்கள். தயவு செய்து P.E.T பீரியடை கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடம் நடத்தாதீர்கள். நம்ம மாணவர்களை P.E.T பீரியட்ல தயவு செய்து விளையாட அனுமதியுங்கள்.

இன்றைக்கு உங்களுடைய பள்ளிக் கல்வித் துறையினுடைய அமைச்சர், அவரே பள்ளிக்கல்வித்துறையினுடைய அமைச்சராக இருந்தாலும், இங்கே சொன்னது போல் அவர் விரைவில் முனைவர் பட்டம் வாங்க இருக்கிறார். அதற்காக தீஸிஸ் செய்து கொண்டு இருக்கிறார். என்னதான் அவர் பள்ளிக் கல்வித்துறையினுடைய அமைச்சராக இருந்தாலும், நான்கு ஆண்டுகளாக அவர் செய்யும் ஆராய்ச்சியை தான் ஒவ்வொரு பள்ளிக் கல்வித்துறையினுடைய நிகழ்ச்சியிலும் கூறிக்கொண்டு இருக்கின்றேன். என்ன தலைப்பை தேர்வு செய்துள்ளார் தெரியுமா. Physical Activities for Skill Development among Children using machine learning தான். என்னதான் அவர் பள்ளிக் கல்வித்துறையினுடைய அமைச்சராக இருந்தாலும், அவர் முனைவர் பட்டம் வென்றால் அதற்கு விளையாட்டுத் துறை தான் முக்கிய காரணம் என்பதை அந்த உரிமையோடு ஆசிரியர்களுக்கு இந்த வேண்டுகோளை நான் வைக்கின்றேன்.

மாணவர்கள் நன்றாக விளையாட வேண்டும். ஏன் என்றால், மாணவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான்உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அப்போது தான் அந்த கல்வி அவர்களிடம் சென்று சேரும்.

அதே மாதிரி இந்த நேரத்தில் இன்னொரு சிறப்பான அறிவிப்பு, இந்த மகிழ்ச்சியான நாளில், சிறப்புக்குரிய நாளில் ஒரு முக்கியமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி திருவள்ளுர் மாவட்டத்தில் திருவுருவச்சிலை அமைக்கின்ற பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இது ஆசிரியர் பெருமக்கள் உங்களுக்கான பெருமை. அந்த சிலை வடிவமைக்கின்ற பணி விரைவில் நடைபெற்று அந்த சிலையை நம்முடைய முதலமைச்சர் அவர்களே திறந்து வைக்க இருக்கின்றார்கள் என்று தெரிவித்துக் கொண்டு, ஆசிரியர் பணி எனும் என்ற இந்த அறப்பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்லாசிரியர் விருது பெருகின்ற அத்தனை ஆசிரியர் பெருமக்களுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுக்க ஆசிரியர்களாக பணியை தொடங்கவிருக்கும் அத்தனை ஆசிரியர் பெருமக்களுக்கும்என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்"என்று கூறினார்.

Also Read: தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !