Tamilnadu
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
எஸ். சுதாகர் ரெட்டி, தற்போதை தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தில், விடுதலைப் போராட்ட வீரர் குடும்பத்தில் 1942 மார்ச் 25 ஆம் தேதி பிறந்தவர். கர்னூல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், கிருஸ்துவ மேல் பள்ளியிலும் பள்ளிக்கல்வி பெற்றவர்.
தொடர்ந்து ஐதராபாத் நகரில் உள்ள உஸ்மானிய பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வியும், சட்டப்படிப்பும் முடித்தவர். கர்னூலில் பள்ளிக் கல்வி பெற்று வந்த காலத்தில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பள்ளியின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளுக்காக போராட்டத்தை தொடங்கியவர்.
ஒன்றுபட்ட ஆந்திர மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் என படிப்படியாக பல பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் பொறுப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமான சுதாகர் ரெட்டிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சுரவரம் சுதாகர் ரெட்டி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
தொடக்ககாலத்தில் மாணவத் தலைவராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவராக உயர்ந்தது வரை சுதாகர் ரெட்டி அவர்கள் தனது வாழ்வைப் பாட்டாளிகள், உழவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தலைவர் கலைஞர் நினைவேந்தல் என அவர் தமிழ்நாடு வந்தபோதெல்லாம் அவரது அன்பையும் தெளிவான பார்வையையும் அருகில் இருந்து கண்டுணர்ந்திருக்கிறேன்.
நீதி மற்றும் மாண்புக்கான போராட்டத்துக்கு அவரது வாழ்வு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!