Tamilnadu

“முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத் துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய் திருநாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க, இராணுவப் பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு தொகுப்பு ஊதியம் வழங்குதல்;

படைப் பணியில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு, முன்னாள் படைவீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு அளித்தல், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

முதல்வரின் “காக்கும் கரங்கள்” திட்டம் தொடக்க விழா

கடந்த 2024-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கிடும் பொருட்டு அடையாளமாக 15 முன்னாள் படைவீரர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இத்திட்டத்தில், 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி, 30% மானியத்துடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழிலில் ஈடுபடவும் மற்றும் சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றிட தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் முதற்கட்டமாக 348 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவர். 

இத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 50 கோடியே 50 இலட்சம் ரூபாயாகும். திட்டத்தின் விவரங்கள்

இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு, தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும்

வழங்கப்படும். மேலும், பயனடைவோருக்கு மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் வழங்கப்படுவதால் கடன் சுமை குறையும்.

விண்ணப்பத் தேர்வு முறை

இத்திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிளான தேர்வு பணிக்குழு (District level Task Force Committee) அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் வேண்டி பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வங்கிகளால் மேலும் சீராய்வு செய்யப்பட்டு தற்காலிக ஒப்புதல் (Provisional Sanction) ஆணை வழங்கப்படும்.

தொழில் முனைவோர் பயிற்சி

தொழில் தொடங்குவதற்கான வங்கியின் தற்காலிக ஒப்புதல் பெற்றவர்களுக்கு (Provisional Sanction) அரசு செலவில் சென்னை- தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். இறுதியாக தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகளால் கடன் இறுதி ஒப்பளிப்பு (Final Sanction of Loan) அளிக்கப்படும்.

வருங்காலங்களில் தமிழ்நாடு அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ‘முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்’ முன்னாள் படைவீரர்களின் தியாகத்தையும் சேவையையும் அங்கீகரித்து, அவர்களுக்கு நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதிலும், அவர்தம் குடும்பங்களையும் சமூகத்தையும் வலுப்படுத்துவதிலும் அரசின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.

Also Read: “Timeless TamilNadu” ஆவணப் படத்திற்கு தேசிய விருது! : முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற குழு!