Tamilnadu
இணைய பாதுகாப்பு : பள்ளிக் கல்வித்துறையின் “அகல்விளக்கு” திட்டம் என்றால் என்ன?
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் “அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு அவர்கள் தங்களை சமூக ரீதியாக ஏற்படும் இன்னல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இணையதளப் பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்” என்று அறிவித்தார்கள். இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையால் “அகல்விளக்கு” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பக் காலத்தில் இணையவழித் தகவல்கள் ஆக்க பூர்வமாக பல வழிகளில் பயன்பட்டாலும், சில இணையவழிச் செயல்பாடுகளின் முறையற்ற பயன்பாடு ஊறுவிளைவிப்பதாக அமைகிறது. எனவே, இணையவழிக் குற்றங்களுக்கு ஆட்படாமல் தவிர்ப்பது குறித்து மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விழிப்புணர்வுத் தகவல் சிற்றேடு மற்றும் காணொலிகளை உருவாக்கியுள்ளது.
இணையவழிக் குற்றங்களிலிருந்து மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள் பள்ளிகளில் Career Guidance பயிற்சிகளை வழங்கிடும் ஆசிரியர்கள் வாயிலாக நடத்தப்படவுள்ளன. மேலும் இதுகுறித்து பள்ளியின் தகவல் பலகையில் விவரங்களை ஒட்டுவதன் வாயிலாக மாணவிகள் இதனைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் உறுதுணையாக இது அமைந்திடும்.
மேலும் அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்தும் போது கணினி செயல்பாடுகள் மற்றும் இணையவழிச் செயல்பாடுகளை முறையாகக் கையாளுவது குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.
பள்ளிக் குழந்தைகள் இணையதளத்தைப் பாதுகாப்புடன் பயன்படுத்த சில வழிகாட்டுதல்கள்
தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிராதிருத்தல்
இணையப் பயன்பாட்டினைப் பெற்றோரின் அனுமதியுடன் மட்டும் பயன்படுத்துதல்
நம்பகமான மற்றும் அத்தியாவசியமான இணையதளங்களையே பயன்படுத்துதல்
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைத் தவிர்த்தல்
இணையவழிக் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படின், இது குறித்து திறந்த மனதுடன் பெற்றோர்/ஆசிரியர்களிடம் தெரிவித்தல்
இணையவழித் துன்புறுத்தலுக்கு (Cyberbullying) எதிராக விழிப்புணர்வுடன் செயல்படுதல்
தவறான விளம்பரங்கள் அல்லது போலியான விளம்பரங்களை தவிர்த்தல்
வலையமைப்புகளில் வலிமையான கடவுச்சொற்கள் (Strong Passwords) பயன்படுத்துதல் சட்ட ரீதியாக புகார் அளிக்க www.cybercrime.gov.in மற்றும் உதவி எண் 1930ஐப் பயன்படுத்துதல்
தவறான நடவடிக்கை மேற்கொள்வதாக அறிந்தால் அதனை தடுத்தல் (Block), மேலும் அது குறித்து புகார் (Report) அளித்தல்
OTP மற்றும் வங்கி விவரங்களைக் கேட்கும் அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருத்தல் Anti Virus மென்பொருளை நிறுவி மின்னணுக் கருவிகளைப் புதுப்பித்த நிலையில் வைத்தல்
இணையத்தில் புகைப்படங்களைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருத்தல்
Morphing செய்யப்பட்ட படங்களைக் கண்டறிந்தால் அதைப் பற்றி புகார் அளித்தல்.
மேற்குறிப்பிட்டுள்ள விழிப்புணர்வு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் வாயிலாக இணையவழி அச்சுறுத்தல்களுக்கு ஆட்படாமல், பாதுகாப்பான முறையில் செயல்படுவதற்கு “அகல்விளக்கு” எனும் தலைப்பிலான இம்முன்னெடுப்பு உறுதுணையாக அமையும்.
Also Read
-
திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் : முக்கிய அறிவிப்பு இதோ!
-
பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்டோருக்கு திருவுருவச் சிலை! - நினைவு அரங்கம்! : முழு விவரம்!
-
திருப்பூரில் 61 புதிய திட்டப்பணிகள் திறப்பு! - ரூ.295.29 கோடியில் நலத்திட்ட உதவிகள்! : முழு விவரம் உள்ளே!
-
“திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!
-
ராகுல் காந்தி கைது : இந்தியா கூட்டணி எம்.பிக்கள் பேரணி - பரபரப்பான டெல்லி!