Tamilnadu

”பெண்கள் முன்னேற்றத்திற்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா 1.00 லட்சம் ரூபாய் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை வழங்கி, கொடியசைத்து வழியனுப்பினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை,”இன்றைக்கு மானிய விலையில் ஆட்டோவைப் பெற வந்துள்ள என் அருமை சகோதரிகளே, பத்திரிக்கை நண்பர்களே உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பாக தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்திருக்கின்ற 100 மகளிருக்கு ஆட்டோ வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொகுதியில் அண்ணன் கணேசன் அவர்கள் ஏற்பாடு செய்து, இதே போல் ஒரு நிகழ்ச்சியில் 100 மகளிருக்கு இந்த துறையின் சார்பாக ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அண்ணன் கணேசன் அவர்களிடத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். என்னுடைய தொகுதியில் கொடுக்க வேண்டும். எப்போது ஏற்பாடு செய்ய போகிறீர்கள் என்று தொடர்ந்து 2 வருடம் அவர் பின்னால் Follow up செய்து, இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு முதலில் என்னுடைய நன்றியை அமைச்சர் கணேசன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவர் இங்கே பேசும்போது என் மீது உள்ள அன்பால் என்னை ஒவ்வொரு முறையும் அழைக்கும்போது அண்ணன் உதயநிதி, அண்ணன் உதயநிதி என்று பேசினார். நீங்கள் எல்லோரும் நினைத்திருப்பீர்கள் அவருக்கு நான் அண்ணன் என்று. அவர் என்னைவிட மிக, மிக மூத்தவர் பொதுவாழ்கையிலும் சரி, வயதிலும் சரி. எனவே அவருக்கு என்றுமே உண்மையான தம்பியாக அவர் குடும்பத்தில் ஒருத்தராக இருப்பேன் என்பதை கூறிக்கொண்டு, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுடைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மகளிருக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்காகவும் நான் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைக்கு தொழிலாளர் நலன் காப்பதில், நம்முடைய தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. கலைஞர் அவர்களால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது தொழிலாளர் நலத்துறையின் சார்பாக 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு இன்றைக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துக் கொண்டு வருகின்றது. அதை உறுதி செய்கின்ற வகையில் தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டினுடைய மகளிர் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறது.

மகளிருடைய விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்று மகளிருக்கான முன்னேற்றத்திற்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தான் தொழிலாளர் நலத்துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கடந்த 2023 ஆம் ஆண்டு 500 ஆட்டோக்கள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற வருடம் 1,000 ஆட்டோக்களை கொடுத்தோம். இந்த வருடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1,000 ஆட்டோக்கள் வழங்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றைக்கு 100 மகளிருக்கு ஆட்டோக்களை வழங்கி இருக்கின்றோம். இதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், எங்களுடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 62 மகளிர் இங்கே ஆட்டோக்களை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்த ஆட்டோக்களை பெற ஒவ்வொரு மகளிருக்கும் தலா 1.00 இலட்சம் ரூபாய் மானியமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலேயே மகளிரை, திருநங்கையரை ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி கொடுத்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களுக்கு மானியத்துடன் ஆட்டோ கொடுக்கின்ற ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இங்கே ஆட்டோக்களை பெற்றுள்ள ஒவ்வொரு சகோதரிகளையும் பார்க்கும்போது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் என்னுடைய கண்களுக்கு தெரிகின்றது.

உங்களைப் பார்க்கும்போது வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்ற ஒவ்வொரு மகளிருக்கும் நீங்கள் ரோல் மாடலாக திகழ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ஆகவே ஆட்டோக்களைப் பெற்றுள்ள உங்களுடைய எதிர்காலம் சிறக்கட்டும், உங்களுடைய குடும்பங்கள் மகிழ்ச்சியோடு நிலைக்கட்டும், நீங்கள் ஆட்டோக்களை பாதுகாப்பாக ஓட்டுவீர்கள் என்று நான் நம்புகின்றேன். உங்களுக்கு எல்லா வகையிலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கு நம்முடைய அரசும் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் என்றென்றும் துணை நிற்பார்கள்.

எனவே, இங்கே ஆட்டோக்களைப் பெற்றுள்ள அத்தனை மகளிருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, அண்ணன் கணேசன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

Also Read: “இடத்தை நிரப்புவதற்காக வந்தவர் அல்ல மாண்புமிகு உதயநிதி” : புகழாரம் சூட்டிய முரசொலி தலையங்கம்!