Tamilnadu
மத்திய பல்கலைக் கழகங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான புகார் கமிட்டி?: கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக் கழகங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான Internal Complaints Committees பற்றிய கேள்விகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ஜூலை 28 ஆம் தேதி மக்களவையில் எழுப்பினார்.
”பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகள் மற்றும் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை மற்றும் தீர்வுச் சட்டம் (2013) வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் Internal Complaints Committees எனப்படும் உள் புகார் குழுக்களை (ஐசிசி) நிறுவுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதா?
அப்படியென்றால், ஐசிசி-களை அமைத்த மத்திய பல்கலைக்கழகங்களின் விவரங்கள் என்ன? விதிகள், வழிகாட்டுதல்களின்படிதான் குழுக்கள் அமைக்கப்பட்டதா, அக்குழுக்களின் உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் என்ன?
மேற்கண்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டத்தை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
மத்திய பல்கலைக் கழகங்களில் அமைக்கப்பட்ட ஐசிசி குழுக்களின் செயல்பாடுகள் பற்றி அரசாங்கம் மதிப்பீடுகள் அல்லது தணிக்கைகளை நடத்தியதா? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை கனிமொழி எம்.பி கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தர் அளித்துள்ள பதிலில், “பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடை மற்றும் தீர்வுச் சட்டம், 2013 மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள், 2015 ஆகியவற்றின் கீழ் Internal Complaints Committees எனப்படும் உள் புகார் குழுக்களை மத்திய பல்கலைக் கழகங்களில் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் சட்டம் மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஐசிசிகளை அமைத்துள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி, ஐசிசியின் தலைமை அதிகாரியாக ஒரு மூத்த பெண் ஆசிரியர், இரண்டு ஆசிரியர் உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மூன்று மாணவர் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் (என்ஜிஓக்கள்) இருந்து ஒரு உறுப்பினர் இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் குறைந்தது பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
இந்த உள் புகார் குழுக்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு… புகார்கள் பதிவு செய்தல், பாலின சமத்துவம் பற்றிய ஆய்வு ஆகியவற்றுக்காக சக்ஷம் (SAKSHAM ) போர்டல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான சூழலை உறுதி செய்வதற்காக புகார்களை தெரிவிக்கவும், வழிகாட்டுதல்களைப் பெறவும், இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை 2020 இன் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன” என்று ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”பொதுவுடைமை இயக்கமும்; திராவிட இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தொகுதி மறுவரையறை மாநிலங்களை பாதிக்கும் : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
-
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த நடவடிக்கை என்ன? : அரசுக்கு கேள்வி எழுப்பிய கதிர் ஆனந்த் MP!
-
முத்ரா கடன்கள் முறையாக வழங்கப்படுகிறதா? : மக்களவையில் எம்.பி தரணிவேந்தன் கேள்வி!
-
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி எங்கே? : மீண்டும் ஒன்றிய அரசிடம் வலியுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி