Tamilnadu

அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று பள்ளி - கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில், அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!

நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்” புகழாரம் சூட்டியிருந்தார்.

அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”கல்வி எனும் ஒளி சமூகத்தில் மண்டிக்கிடந்த இருளை எப்படியெல்லாம் கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்திக் காட்டிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று!

எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை - எளிய பிள்ளைகள் எல்லோருக்கும் சென்று சேர பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்ட காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

காமராஜர் வாழ்ந்த தியாகராய நகர் இல்லத்தை புதுப்பிப்பதோடு, அவர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திருச்சியில் அமைக்கிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

காமராஜர் கண்ட கல்விக்கனவுகளை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களின் வழியே நனவாக்கி வருகிறது நம் திராவிட மாடல் அரசு!

பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் - வழிகாட்டும். அவர் புகழ் ஓங்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!