Tamilnadu

"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !

திருவண்ணாமலையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்- பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் சகோதரர் மனோகரனின் மகன் பிரபுதேவா- ரவீணா இணையரின் திருமணத்தை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  நடத்தி வைத்தார்.

அப்போது அவர், இன்றைக்கு மகளிர், வீட்டை விட்டு இல்லை, விண்வெளிக்கே சென்று வந்து சாதனை படைக்கிறார்கள். அந்த அளவிற்கு மகளிரின் முன்னேற்றத்திற்கு நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அதன் விவரம் :

அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உங்கள் அனைவரின் சார்பாக மணமக்களை வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

இன்றைக்கு இந்தத் திருமணத்தில் இணைகின்ற அண்ணன் வேலு அவர்களின் சகோதரர் மனோகரன் அவர்களின் மகன் பிரபுதேவா, மருத்துவர் ரவீணா இணையர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பாக மீண்டும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நம் வேலு அண்ணன் அவர்களின் வீட்டு திருமணம் மட்டுமல்ல, இது நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இல்ல விழா. அதனால்தான் நம் முதலமைச்சர் அவர்கள் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். அண்ணன் வேலு அவர்கள் பேசும்பொழுது சொன்னார். கலைஞரின் சிரிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும். அதை நான் புரிந்து கொள்வேன்.  நம் கழகத் தலைவர் அவர்களின் சிரிப்புக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கும் அதையும் புரிந்துகொண்டேன். இங்கே திருமணத்திற்கு வருகை தந்துள்ள இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் அவருடைய சிரிப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்று சொன்னார். ஆனால், அதை அவர் புரிந்து கொண்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அவர் என்னிடம் வந்து தேதி கேட்கும் பொழுது, தம்பி நீங்கள்தான் வரவேண்டும் என்று சொல்லும்போது நான் சிரித்தேன். 

அதற்கு என்ன அர்த்தம் என்று நானும் அவரிடம் சொல்லவில்லை. இந்த மேடையில் அவர் பேசும்போது, அந்த சிரிப்புக்கான அர்த்தத்தைத் தெரிந்துதான் தேதி வாங்கினேன் என்று சொன்னார். நான் எந்த அர்த்தத்தில் சிரித்தேன் என்றால், ``நீங்கள் தலைவரிடமும் சென்று கேட்டிருப்பீர்கள். தலைவர் வரவில்லை என்று சொல்லி இருப்பார். வேறு வழி இல்லாமல், என்னிடம் வந்திருக்கிறீர்கள்’’ என்பதுதான் அந்த சிரிப்புக்கு அர்த்தம்.

இந்த நேரத்தில் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். அண்ணன் வேலு அவர்கள் இந்தத் திருமணத்திற்கு அழைப்பிதழைக் கொடுக்கவில்லை என்றாலும், நான் இந்தத் திருமணத்திற்கு வந்து, மணமக்களை வாழ்த்தியிருப்பேன். அந்த அளவிற்கு நான் அவருக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன். எனவே, அவர் தைரியமாகச் சொல்லலாம்.  என் சிரிப்பிற்கான அர்த்தத்தை அறிந்துகொண்டேன் என்று.

இன்று காலை இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, இன்று முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தேன்.  வருகின்ற வழியெல்லாம், மாவட்டத்தின் எல்லையிலிருந்து நான் தங்கி இருக்கின்ற இடம் வரைக்கும் மிகுந்த சிறப்பான, எழுச்சியான வரவேற்பை அளித்த நம் இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை முன்னோடிகளுக்கும், அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் முதலில் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். `எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் வேலு’ என்று சொல்லி பலமுறை பாராட்டி இருக்கிறார்கள். அவர் எதிலும் வல்லவர் மட்டுமல்ல, எப்போதும் வல்லவர், எங்கேயும் வல்லவர் என்று நிரூபிக்கின்ற வகையில் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இருக்கும்.

நம் முதலமைச்சர் அவர்கள் வேலு அண்ணனை பற்றி குறிப்பிடும் பொழுது சொல்லி இருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் என்றாலும், அவர் கழகத்தைப் பொறுத்தவரை சிலைகள் துறை, மண்டபங்கள் துறை, இப்படிப் பல துறைக்கு அவர் சிறப்பான அமைச்சராகச் செயலாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று  குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவிற்கு கலைஞரின் சிலையாக இருக்கட்டும், மணிமண்டபமாக இருக்கட்டும், எந்தப் பணியை எடுத்தாலும், அதை மிகவும் நேர்த்தியாக செய்து முடிக்க கூடியவர்தான் அண்ணன் எ.வ.வேலு அவர்கள்.

இன்றைக்கு விழாக்கள் துறைக்கு ஒரு அமைச்சர் என்றால், அதுவும் எ.வ.வேலு அவர்கள்தான். அந்த அளவிற்கு எந்த விழாவாக இருந்தாலும், அதை சிறப்பாக  ஒருங்கிணைக்ககூடியவர் அண்ணன் எ.வ.வேலு அவர்கள். அந்த வகையில், இன்றைக்கு திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளார்.

இன்றைக்கு திருவண்ணாமலையையே கழகத்தின் கோட்டையாக அண்ணன் வேலு அவர்கள் மாற்றி இருக்கிறார் என்று சொன்னால், அது மிகையல்ல. அந்த அளவிற்கு அவருக்கு கழக உணர்வு இருப்பதால்தான், இன்றைக்கு அவர் வீட்டுத் திருமணம் இத்தனை எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்த கையுடன் அடுத்து என்னை அழைத்துச் செல்ல இருப்பது கழகத்தின் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு. அண்ணன் எ.வ.வேலு அவர்கள் தனது இல்லத் திருமண விழா நடந்தால்கூட அன்றைக்கும், கழக நிகழ்ச்சி நடத்தி, இந்தத் திருமணம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு கழகப் பணியும் முக்கியம் என்று செயல்படுபவர்தான் அண்ணன் எ.வ.வேலு அவர்கள்.

இன்றைக்கு இந்தத் திருமண விழாவில் மகளிர் பலர் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால், திருமண விழாக்களிலும், வாக்காளர் பட்டியலிலும் ஆண்களைவிட, பெண்கள்தான் அதிகமாக இருக்கிறீர்கள்.  இது ஒரு சிறந்த மகிழ்ச்சியான தருணம், பெருமைப்படக்கூடிய விஷயம். ஏனென்றால், ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு மகளிர், வீட்டை விட்டு இல்லை, விண்வெளிக்கே சென்று வந்து சாதனை படைக்கிறார்கள். அந்த அளவிற்கு மகளிரின் முன்னேற்றத்திற்கு நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறது.

இங்கு நிறைய மகளிர் வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்குத் தெரியும். நம் தலைவர் அவர்கள் ஆட்சி அமைத்து, முதல் கையெழுத்திட்டதே மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்தான். இந்த விடியல் பயணம் திட்டத்தில் மகளிர் கிட்டத்தட்ட நான்கு வருடத்தில் மட்டும் 730 கோடி பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாய் வரை சேமிக்கிறார்கள். இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 11 கோடி விடியல் பயணங்களை நம் மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இதுபோல் பல திட்டங்கள்.  பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து, எந்தத் தனியார் கல்லூரியில் சென்று உயர்கல்வி படித்தாலும் அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நம் தலைவர் அவர்கள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 33 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்று நம் முதலமைச்சர் அறிமுகப்படுத்திய திட்டம்தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 84 ஆயிரம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். 

இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல ஒரு திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். முதலமைச்சர் அவர்கள் 22 மாதங்கள் கொடுத்து இருக்கிறார்கள். 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறார். இந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 4 லட்சத்து 13 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை சென்றடைந்து இருக்கிறது.

இதுமட்டுமல்ல, கூடுதலான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்காக வருகின்ற 15-ம் தேதி கூடுதல் சிறப்பு முகாம்களையும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். எனவே, மகளிருக்கு எப்படி நம் முதலமைச்சர் பக்கபலமாக இருக்கிறாரோ, மகளிர் நீங்கள் அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் 8 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது.  2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நம் கழக அணி போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் 100 சதவிகித வெற்றி பெற்றது. அந்த வெற்றியைக் கொடுத்தது தமிழக மக்களாகிய நீங்கள். அதேபோன்று ஒரு வெற்றியை 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உங்களின் ஆதரவை கழகத்திற்குத் தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதற்காகதான் நம் தலைவர் அவர்கள், `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை ஆரம்பித்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கின்ற 30 சதவிகித வாக்காளர்களை, கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று முன்னெடுப்பு. நம் தலைவர் அவர்களே ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள், நம் களப்பணியாளர்கள் நீங்களும் அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நேற்றைய நிலவரப்படி சுமார் 90 லட்சம் பேரை இந்த முன்னெடுப்பின் மூலம் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்து இருக்கிறோம். இது ஒரு மிகப்பெரிய சாதனை.

எனவே, நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வது இந்த கழக அரசின் சாதனைகளை, மக்களை சந்தித்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, அவர்களுக்கு இவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்து, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், திராவிட மாடல் அரசை வெற்றிபெறச் செய்து, நம் தலைவர் அவர்களைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக உட்கார வேண்டிய கடமை, நம் அத்தனை பேருக்கும் இருக்கிறது என்று உங்கள் அனைவரையும்  கேட்டுக்கொள்கிறேன்.

மணமக்களுக்கு நான் அதிகம் அறிவுரை வழங்க விரும்பவில்லை. ஏனென்றால், மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். இருவரும் சுயமரியாதையோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உங்களின் உரிமைக்காக, நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்.

ஒரே ஒரு வேண்டுகோள். உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தை அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி தலைவரின் வேண்டுகோளின்படி நல்ல அழகான ஒரு தமிழ்ப் பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு, அண்ணன் எ.வ.வேலு அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

Also Read: "வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !