Tamilnadu

மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1931 ஆம் ஆண்டு மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையை எதிர்த்து போராடிய காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜூலை 13 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சர் அமர் அப்துல்லா உயிரிழந்தவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது போலிஸார் அவரை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். அப்போது போலிஸாருக்கும் அவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இது தொடர்பான வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை ஒன்றிய அரசு நடத்தும் விதம் இதுதானா? கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ” ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் வேளையில், அங்கு நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் நிலைமை எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதை நினைவூட்டுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதற்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சுவர்களில் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா?.

தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை, மாநில அரசுகளின் உரிமையை ஒன்றிய அரசு பறித்து வருகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் ஒருமித்த குரலில் இதனை கண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!