Tamilnadu
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை, அரியலூர், மதுரை மாவட்டங்களில் செயற்கை வளைகோல் பந்து மைதானம் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணி, கரூர், மதுரை மாவட்டங்களில் நீச்சல் குளம் அமைக்கும் பணி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் புதிய விளையாட்டு விடுதி அமைக்கும் பணி என மொத்தம் 64.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதி கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (11.7.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மதுரை மாவட்டத்தில் 9.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை வளைகோல் பந்து மைதானம் புதுப்பிக்கும் பணிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரியலூர் மாவட்டத்தில் 10.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய செயற்கை வளைகோல் பந்து மைதானம் அமைக்கும் பணிகளுக்கும் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, இந்நிகழ்வில் மதுரை மாவட்டத்தில் 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணி, கரூர் மாவட்டத்தில் 6.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீச்சல் குளம் அமைக்கும் பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 7.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு விடுதி, சேலம் மாவட்டத்தில் 7.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு விடுதி அமைக்கும் பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
“திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்த முதலமைச்சர்...” - முரசொலி பாராட்டு!